கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
தேவன் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதித்து மேன்மைபடுத்த விரும்புகிறார். ஆனால் அதற்கு தடையாக இருப்பது என்ன? பாவத்தை மறைப்பதும், அதை அறிக்கைசெய்து, மனஸ்தாபப்பட்டு, தேவனின் இரக்கத்தைப் பெறாமல் வாழ்வதும்தான். பாவங்களை மறைப்பதினால் தேவனுடைய பிரியம் நம்மேல் இருக்காது. நீதி.28:13ஆம் வசனத்தில், “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” பாவத்தை மறைப்பது பாவம்.
இரட்சிக்கப்பட்ட பின்பு நம் வாழ்வில் தேவனின் இரக்கம் பெற பாவ அறிக்கை தேவை. நம்மை சிறந்த பக்திமான்களாகவும், வேதத்தை வாசிக்கிறவர்களாகவும், ஜெபிக்கிறவர்களாகவும் காட்டுகிறோம். ஆனால் தவறை ஒத்துக்கொண்டு பாவங்களை அறிக்கைசெய்து விட்டுவிடும் சுபாவம் நம்மில் உண்டா? என்று ஆராய்ந்து பார்ப்போம்.
பாவங்களை மறைத்து பிறர்மேல் பழிபோட்டு நஷ்டப்பட்டவர்கள் சாபம் சம்பாதித்தவர்கள் அநேகர். ஆதாம், ஏவாள் ஏதேன் தோட்டத்தில் இருந்தபோது தேவன் விலக்கின விருட்சத்தின் கனியை புசித்தனர். தேவன் ஆதாமை கேட்டபோது, ஏவாளின்மேல் பழியை சுமத்தினார். ஏவாளிடம் கேட்டபோது, சர்ப்பத்தின்மேல் பழியை சுமத்தினாள். தவறுகளை ஒத்துக்கொண்டும், பாவ அறிக்கை செய்தும் தேவனின் இரக்கத்தைப் பெற்று தொடர்ந்து ஏதேன் தோட்டத்திலேயே வாழும் கிருபையை இழந்தனர். தேவ பிரசன்னத்தையும், ஆசீர்வாதங்களையும் இழந்தனர். நாமும் பாவம் செய்வதினால் தேவ பிரசன்னத்தை இழக்கும்போது, தேவ பிரசன்னம் நம்மைவிட்டு விலகுவதை உணர்ந்தவுடன் பாவ அறிக்கை செய்து தேவனுடன் நாம் கொண்டிருந்த அந்த நல்ல உறவை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
ஆபிரகாமின் மனைவி சாராள் நகைத்தாள், மறைத்தாள் (ஆதி.18:10-15). சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர், இல்லை நீ நகைத்தாய் என்றார். பாவங்களை ஒத்துக்கொள்ளாமல், மறுக்கும் தன்மை மேன்மையைக் கொண்டு வராது. பாவத்தை மறைத்து ஆசீர்வாதத்தை இழந்தவர்கள் யார்? என்று பார்ப்போம்!
1) யோசேப்பின் சகோதரர்கள்:
நிரபராதிகள் போல, தகப்பன் முன்பும், உலகத்திலும், சமுதாயத்திலும், குடும்பத்திலும் நல்லவர்களாக நடித்தனர். ஆதி.38:31-34 வசனங்களில், யோசேப்பின் பலவருணமான அந்த அங்கியை நாங்கள் கண்டெடுத்தோம். இது உம்முடைய குமாரன் அங்கியோ? அல்லவோ பாரும் என்று சொல்லி அனுப்பினார்கள். இவ்வாறு தங்கள் தகப்பனிடம் பாவங்களை மறைத்தனர். சகோதரனை இஸ்மவேலர் கையில் 20 வெள்ளிக் காசுக்கு விற்றுப்போட்டதை மறைத்தனர். யாக்கோபு யோசேப்பை பார்வோன் அரண்மனையில் 22 ஆண்டுகள் கழித்து சந்திக்கும் வரை உண்மை வெளிவரவில்லை. தங்கள் தகப்பன் யாக்கோபின் காலம் வரை குற்ற உணர்வுடனும் பாவம் மன்னிக்கப்படாமல் வாழ்ந்தனர்.
2) ஆகான்:
யோசுவா 7:20-25ஆம் வசனங்களில், ஆகான், தேவன் விலக்கின சாபத்தீடான பொருட்களை இச்சித்து எடுத்து, தன் கூடாரத்தில் மறைத்து வைத்தான். வெள்ளியையும், பொன்னையும் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேர வேண்டியதை தனக்காக எடுத்துக்கொண்டான். யாரிடமும் தன் இரகசிய பாவத்தை வெளிப்படுத்தவில்லை. பாவ அறிக்கை செய்ய பிந்திவிட்டான். யோசுவா கேட்டத்திற்கு முன்னர் தான் தேவனுக்கு முன்பாக மறைந்திருக்க முடியாது என்பதை உணரவில்லை. எனவே ஆகானின் குற்றம் முழு குடும்பமும் அழிக்கப்பட காரணமாயிற்று. ஆகானின் குடும்பத்தினர் கல்லெறிந்து கொலை செய்யப்பட்டனர். சங்.139:7-10ஆம் வசனங்களில், “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?… உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்” என்று தாவீது சொல்கிறார். தேவனுக்கு முன்பாக யாரும் எதையும் மறைக்க முடியாது. கர்த்தரின் கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.
ஆகான் சந்தர்ப்பம் கிடைத்தும் உணர்வடையவில்லை. உடனே பாவ அறிக்கை செய்யவில்லை. எனவே தன் குடும்பம் அழிக்கப்பட காரணமாக மாறினான். நாமும் நமது நல் வாழ்விற்கு தடையாயிருக்கும் பாவங்களை கல்வாரி சிலுவையண்டை சென்று அறிக்கை செய்து விட்டுவிடுவோம். தேவனின் இரக்கம் பெற்று வாழ்வோம்.
தவறுகளை உணர்ந்து பாவ அறிக்கை செய்து ஆசீர்வதிக்கப்பட்டவர்களைப் பற்றி பார்ப்போம்:
1) யாக்கோபு:
ஆதி.32:20-32ஆம் வசனங்களில், யாக்கோபு தன் சகோதரனுக்கு வெகுமதிகளை அனுப்பிவிட்டு, தேவனிடம் போராடினான். “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்” என்று இரவு முழுவதும் கெஞ்சி மன்றாடினான். தேவனோடு போராடி ஆசீர்வாதத்தைப் பெற்றான்.
“அவன்(யாக்கோபு) தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்;” (ஓசியா 12:4) என்று பார்க்கிறோம். பாவங்களுக்காக கெஞ்சி மன்றாடும்போது இரக்கம் பெறுகிறோம்.
2) யோசேப்பு:
ஆதி.50:15-21ஆம் வசனங்களில், யோசேப்பின் சகோதரர் அவர்கள் தகப்பன் இறந்தபின்னர், “…உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும்…” என்று மன்னிப்பு கேட்டனர். யோசேப்பு அவர்கள் குற்றங்களை மன்னித்தார், பராமரித்தார். இயேசுவிடம் நம் தவறுகளை அறிக்கை செய்யும்போது குற்ற உணர்வுகளிலிருந்து இரக்கம் பெறுவோம்.
3) தாவீது:
2சாமுவேல் 12:13ஆம் வசனத்தில், “அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்” என்றார். தாவீதின் பாவம் நாத்தான் தீர்க்கதரிசியினால் உணர்த்தப்பட்டவுடன் அவர் அறிக்கை செய்தார்.
நான்தான் பாவம் செய்தேன் என்று சொல்லும்போது விடுதலை உண்டு. மேலும் 2சாமு.24:17ஆம் வசனத்தில், “ஜனத்தை உபாதிக்கிற தூதனை தாவீது கண்டபோது, அவன் கர்த்தரை நோக்கி: இதோ, நான்தான் பாவஞ்செய்தேன்; நான்தான் அக்கிரமம்பண்ணினேன்; இந்த ஆடுகள் என்னசெய்தது? உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக என்று விண்ணப்பம்பண்ணினான்.” நாத்தான் சொன்னதுபோல உன் பிள்ளைகள் உனக்கு விரோதமாய் எழும்புவார்கள் என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று. ஆனால் தாவீது உரிமையைக் கேட்காமல் இரக்கத்திற்காக தேவனிடம் கெஞ்சினார்.
அன்பு நண்பரே! பாவங்களை அறிக்கை செய்து தேவனிடம் இரக்கம் பெற்ற தாவீது, யாக்கோபு, யோசேப்பின் சகோதரர்களைப் பார்த்தோம். பாவங்களை அறிக்கையிடாமல் நித்தமும் அடக்கி வைத்தால், நம் குற்ற மனசாட்சி நம்மை குற்றப்படுத்தும். நிம்மதி, சமாதானம் இழந்துவிடுவோம். ஆகான் பாவங்களை மறைத்ததால் குடும்பமே அழிக்கப்பட காரணமாயிருந்தான். ஆதாம் ஏவாளும் பாவத்தை அறிக்கை செய்யாமல் ஒருவர்மேல் ஒருவர் குற்றம்சாட்டி, ஏதேனின் வாழ்வை இழந்து, வேதனைப் பட்டனர். தேவன் மன்னிக்கிறதற்கு தயவுள்ளவராய் இருப்பதால், பாவங்களை மறைக்காமல் அறிக்கையிட்டு ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம்! அல்லேலூயா!