கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
தேவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய ஜனத்தை மிகவும் நேசித்தார். பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துகொண்டேன். ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களை தண்டிப்பேன் என்று தீர்க்கதரிசிகள் மூலம் எச்சரிக்கிறார் அவர் சிருஷ்டி கர்த்தர். நாம் அவரையே சேவிக்க வேண்டும். அவர் மந்தையின் ஆடுகளாய் அடங்கி நடக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். நாம் அவரை விட்டு பின்வாங்கி விக்கிரகங்களுக்குப் பின்னாகவும், சாத்தானுக்குப் பின்னாகவும், உலக ஆடம்பரத்துக்குப் பின்னாகவும் செல்லும்போது அவர் எச்சரிக்கிறார். மீண்டும் தன் ஜனங்கள் தன்னிடமாகத் திரும்பும்படி அழைக்கிறார். ஆமோஸ் 4:6 வசனத்தில் “ஆகையால் நான் உங்கள் பட்டணங்களில் எல்லாம் உங்கள் பல்லுகளுக்கு ஓய்வையும், உங்கள் ஸ்தலங்களில் எல்லாம் அப்பக்குறைவையும் கட்டளையிட்டேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்”
மனம் திரும்ப வேண்டியது மிக அவசியம்.
பாவ வாழ்க்கையிலிருந்து முழுவதுமாக மனம் திரும்ப வேண்டும். நாம் முற்றிலும் அவர் பக்கம் மனம் திரும்பிய பின்புதான் இயேசுவின் தோட்டத்தில் உள்ள கனிகளைப் புசிக்க முடியும். அவருக்குச் சொந்தமானவர்கள் தான் பரலோக ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க முடியும். வாழ்க்கை முழுவதும் மாற வேண்டும். “ஊடிஅயீடநவந யbடிரவ வரசn பெரிய வித்தியாசம். பழைய வாழ்க்கைக்கும் புதிய வாழ்க்கைக்கும் உண்டு” ஆவியானவர் என்னுடன் அதிகமாக இடைப்பட்டு பாரத்துடன் சபைகளுக்காக ஜெபிக்கச் சொன்னார். சரியான மனம் திரும்புதல் சபைகளில் இல்லை, சாட்சி குறைவான வாழ்க்கையே மக்கள் வாழ்கிறார்கள். தேவன் சிநேகிக்கிற பரிசுத்த ஜீவியம் சபையில் வேண்டும். தேவனுடைய கிருபையை பெற்றுக்கொள்ளும்படி பக்தியோடு தேவனைத் தேட வேண்டும். தாறுமாறான வாழ்க்கையை மாற்றி அமைக்க வேண்டும்.
இரட்சிக்கப்படுதல் என்பது சரியானபடி இயேசுவை அறிந்துகொள்ளுதல் இயேசுவைப் போல மாறுதல், அவரின் சாயலாக வாழ அர்ப்பணம் செய்தல். இயேசு தன் சீஷர்களிடம் 70 சீஷர்கள் அவரைவிட்டுப் போனபின்பு “நீங்களும் போய்விட மனதாய் இருக்கிறீர்களோ?” என்று கேட்டார். அப்போஸ்தலர் எல்லாரும் யூதாசைத் தவிர முடிவுபரியந்தம் எல்லாச் சோதனையிலும் நிலைத்திருந்தார்கள். தேவனுடைய அன்பையும், இரக்கத்தையும் அனுபவித்தவர்கள் பின்வாங்க முடியாது.
ஸ்டான்லி ஜோன்ஸ் என்ற தேவ மனிதரிடம் ஒரு இந்து வக்கீல் கேட்டார். உங்கள் வேதத்தில் என்ன புதுமை உள்ளது? என்றார். அதற்கு அவர் “இயேசு கிறிஸ்து” என்றார். மேலும் சாது சுந்தர் சிங்கிடம் கோபத்துடன் மக்கள் கேட்டனர். “என்ன விசேஷம் வேதத்தில் உள்ளது?” என்றனர். கிறிஸ்து என்றார்.
இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு மனந்திரும்பிய பின் என்ன செய்ய வேண்டும்!
1) இரட்சிக்கப்பட்ட பின்பு பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும்.
2) இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டு எல்லாவற்றையும் ஆண்டுகொள்ளும்படி அவரிடம் ஒப்புக்கொடுக்க வேண்டும்.
3) கடைசி வரை பரிசுத்தவான்களாக வாழ்ந்து கிறிஸ்துவுக்குள் மரிப்பது மிகப் பெரிய சிலாக்கியம். விசுவாசிகளை அடக்கம் பண்ணும்போது போதகர்களுக்கு தர்ம சங்கடமான சூழ்நிலையை உண்டாக்கக் கூடாது. முறைப்படி குடும்பத்தில் தன் மரண காரியங்கள் எப்படி கிறிஸ்துவுக்குள் நடக்க வேண்டும் என்று குடும்பத்தாரிடம் உறுதிபட கூறியிருக்க வேண்டும்.
ஆமோஸ் 4:4 வசனத்தில், “பெத்தேலுக்குப் போய்த் துரோகம் பண்ணுங்கள், கில்காலுக்கும் போய்த் துரோகத்தைப் பெருகப்பண்ணி, காலைதோறும் உங்கள் பலிகளையும், மூன்றாம் வருஷத்திலே உங்கள் தசமபாகங்களையும் செலுத்தி, புளித்தமாவுள்ள ஸ்தோத்திர பலியோடே தூபங்காட்டி, உற்சாக பலிகளைக் கூறித் தெரியப்படுத்துங்கள்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படிச் செய்வதே உங்களுக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்”
1) விசுவாசிகள் பெத்தேலில் சுத்திகரிப்பு கூட்டத்தில் பங்குபெற்றாலும் உண்மையாக மனந்திரும்பாமல் துரோகம் பண்ணினால், ஜெயமாயிராது மக்களிடம் துரோகம் பெருகியுள்ளது.
2) மேலும் தசமபாகம் கொடுத்தாலும் துரோகங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால் பரலோகம் செல்ல முடியாது.
3) ஸ்தோத்திர பலியை புளித்த மாவோடு (துர்க்குணத்தோடும், பொல்லாப்புடனும்) ஆராதனை செய்தால் அது அங்கீகரிக்கப்படாது. இப்படிப்பட்ட காரியம் சபைக்குள் வரக்கூடாது.
கர்த்தரின் எச்சரிப்பு என்ன?
தன் பொல்லாப்பை விட்டு மனந்திரும்பாதவர்களுக்கு என்ன எச்சரிப்பு? வரும் தண்டனை என்ன என்று தேவன் கூறுகிறார்?
1) அப்பக்குறைவு: ஆமோஸ் 4:6, “ஆகையால் நான் உங்கள் பட்டணங்களில் எல்லாம் உங்கள் பல்லுகளுக்கு ஓய்வையும், உங்கள் ஸ்தலங்களில் எல்லாம் அப்பக்குறைவையும் கட்டளையிட்டேன்;” என்றார். ஆனால் நீதிமான் அப்பத்துக்கு இரந்து திரிவதில்லை. எனவே, தேவனின் தண்டனையைப் பெறாமல் மனந்திரும்ப வேண்டும்.
2) மழையைத் தடுத்தார்: ஆமோஸ் 4:7 வசனத்தில் “இதுவுமல்லாமல், அறுப்புக்காலம் வர இன்னும் மூன்றுமாதம் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யாமலிருக்கவும் பண்ணினேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்து போயிற்று.”
3) தண்ணீர் இல்லை: ஆமோஸ் 4:8 வசனத்தில் “இரண்டு மூன்று பட்டணங்களின் மனுஷர் தண்ணீர் குடிக்க ஒரே பட்டணத்துக்குப் போய் அலைந்தும் தாகந் தீர்த்துக்கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” எருசலேமில் பஞ்சம். தேவனுடைய ஜனங்கள் பாவம் செய்ததால் பஞ்சம் ஏற்பட்டது. நகோமி குடும்பம் எருசலேமைவிட்டு மோவாப் தேசம் சென்றனர். வெறுமையாக்கப்பட்டு வந்தனர். தேவனுடைய ஆராதனை, தேவசித்தம் செய்யும் இடம் விட்டு, யோனா போல ஓடினால் நஷ்டம், கஷ்டம் வரும். வேதனைகள் பெருகும்.
4) விஷப்பனி: ஆமோஸ் 4:9, “கருக்காயினாலும் விஷப்பனியினாலும் உங்களைத் தண்டித்தேன்;” என்கிறார். நாம் விசுவாசத்தோடு கர்த்தரைப் பற்றிய பயத்தோடு காணப்பட வேண்டும், ஒன்றும் நம்மை சேதப்படுத்தாது. தேவன் துன்மார்க்கருக்காகவும், மனம் திரும்ப வேண்டியவர்களுக்காகவும் விஷப்பனியை வைத்திருக்கிறார்.
5) பூச்சு புழு அரித்தல்: ஆமோஸ் 4:9, “…உங்கள் சோலைகளிலும் திராட்சத்தோட்டங்களிலும் அத்திமரங்களிலும் ஒலிவ மரங்களிலும் மிகுதியானதைப் பச்சைப் புழு அரித்துப்போட்டது; ஆகிலும் என்னிடத்தில் திரும்பாமற் போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”
6) கொள்ளை நோய்: ஆமோஸ் 4:10, “எகிப்திலே உண்டானதற்கு ஒத்த கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன்; உங்கள் வாலிபரைப் பட்டயத்தாலே கொன்றேன்; உங்கள் குதிரைகளை அழித்துப்போட்டேன்; உங்கள் பாளயங்களின் நாற்றத்தை உங்கள் நாசிகளிலும் ஏறப்பண்ணினேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”
சாது சுந்தர் சிங் காஷ்மீர் பகுதியில் ஊழியம் செய்தபோது ஒரு வாலிப மகன் மரித்துவிட்டதாக ஒரு அம்மா சொன்னார்கள். நம்பிக்கை முழுவதும் மகன் மீது வைத்திருந்தனர். தேவன் ஏன் இப்படிச் செய்தார்? எனக் கேட்டனர். இடையன் ஆற்றைக் கடக்க வேண்டுமானால், கன்றுக் குட்டியை தோளில் போட்டால், மாடு பின்னால் தானாகவே வரும். ஏன் சில மரணங்கள், பிரிவுகளை தேவன் அனுமதிக்கிறார்? அவரையே பின்பற்றி பரலோகம் செல்லும்படியாக உலகப் பற்றை விட்டுவிட்டு பரலோகம் செல்ல விரும்புகிறார்.
7) பட்டணங்களை கவிழ்த்துப் போடுகிறார்: ஆமோஸ் 4:11, “சோதோமையும் கொமோராவையும் தேவன் கவிழ்த்துப்போட்டது போல, உங்களைக் கவிழ்த்துப்போட்டேன்; நீங்கள் அக்கினியினின்று பறிக்கப்பட்ட கொள்ளியைப்போல இருந்தீர்கள்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” லோத்து குடும்பம் எவ்வளவு வேதனைக்குள்ளானது, பட்டணம் கவிழ்க்கப்பட்டால் ஒன்றையும் எடுக்க முடியாது.
அன்பு நேயரே! தேவன் எந்த பாவியையும் புறம்பே தள்ளுவதில்லை. பாவியை மனந்திரும்பும்படி அழைக்கிறார். மனம் திரும்பாவிட்டால் தண்டனைகளை கொடுத்து, சிட்சைகளைக் கொடுத்து தன் பக்கம் திரும்ப விரும்புகிறார். தேவ தண்டனையைப் பெற்றாலும் வழிவிலகிப் போகும் இடத்திற்கு நாம் வரக்கூடாது. தேவனிடம் இரட்டிப்பான நன்மையைப் பெற இன்றே மனந்திரும்புவோம். அல்லேலூயா!