சிலுவை உபதேசம்

Written by Pr Thomas Walker

March 4, 2018

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையும் குறித்து மேன்மை பாராட்டாதிருப்போமாக. ஒவ்வொரு நாளும் நமக்கு தேவன் தந்த சிலுவையைச் சுமந்து அவரைப் பின்பற்றுவோம். இயேசுவை சிலுவையில் அறையும்போது உலக மனுஷர் தங்களுக்கு இடையூறாக இருந்த ஒருவரை ஒழித்துக்கட்டிவிட்டோம் என்று நினைத்தார்கள். ஆனால் இயேசுவுக்கு சிலுவை சுமப்பதற்கு உலகத் தோற்றத்திற்கு முன்னாலே தேவனாலே திட்டமிடப்பட்டுள்ளது. மனிதனுடைய விழுகையும் தேவனுக்கு முன்பே தெரியும். எனவே அதற்கு பரிகாரமும் திட்டமிடப்பட்டிருந்தது.
சிலுவையிலே தேவன் ஒவ்வொரு மனிதனுக்காகவும் பாரப்பட்டு இரத்தம் சிந்தி மரித்தார். நம் ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிபார்த்தார். ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் சிலுவையில் சந்தித்தார். தேவ வல்லமை சிலுவையின் மூலம் வெளிப்பட்டது. 1கொரி.1:18ஆம் வசனத்தில் “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது”

சிலுவையின் உபதேசம் எப்படிப்பட்டது என்று பார்ப்போம்.
1. ரோமர் 1:16 வசனத்தின்படி,
“கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது” சிலுவையில் தேவனுடைய அன்பு வெளிப்பட்டது.

2. ரோமர் 5:8 வசனத்தில்,
“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்”

3. ஏசாயா 53:4 வசனத்தில்,
“மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்” சிலுவையில் நமது பாடுகளை ஏற்றுக்கொண்டு துக்கங்களைச் சுமந்தார்.

4. ஏசாயா 53:5,6 வசனத்தில்,
“நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.” தேவன் நம் எல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். 1பேதுரு 2:24 “நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்”

சிலுவையின் மூலம் – தேவனுக்கும் மனிதனுக்கும் புதிய உறவு ஏற்படுகிறது.
தேவன் பரிசுத்தர், பாவம் தேவனைவிட்டு நம்மைப் பிரிக்கிறது. பாவிகள் யாரும் அவர் சமுகத்தில் சேர முடியாது. ஆனால் சிலுவையின் மூலம் இது சாத்தியமாகிறது.

1. சிலுவையின்மூலம் நாம் அங்கிகரிக்கப்படுகிறோம்
2கொரி.5:18 அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கினார்.

2. சிலுவையின் மூலம் பாவ மன்னிப்பு
கொலோ.1:13,14; 1யோவான் 2:1,2 இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினார். அவருக்குள் அவருடைய இரத்தத்தினால் பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே. நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.

3. சிலுவையின் மூலம் தேவனுடைய குடும்பத்தில் இணைகிறோம்
எபி.2:11,12; யோவான் 1:12 எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படவில்லை, அவரை ஏற்றுக்கொள்ளுகிற ஒவ்வொருவரும் அவருடைய பிள்ளைகளாகும் அதிகாரத்தைப் பெறுகிறார்கள்.

4. சிலுவையின் மூலம் ஜாதிப்பிரிவினைகளும் நீங்குகிறது. பகையை சிலுவையிலே கொன்றார்.
எபே.2:13,14,16 முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் சமீபமானீர்கள். பகையைச் சிலுவையினால் கொன்று அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.

அன்பு நண்பரே! சிலுவையின்மூலம் அங்கீகரிக்கப்படுகிறோம். சிலுவையின்மூலம் பாவமன்னிப்பு கிடைக்கிறது, தேவனுடைய குடும்பத்தில் இணைகிறோம். சிலுவையின் மூலம் பகையை சிலுவையில் கொன்றார். பிசாசின் அடிமைத் தனத்திலிருந்து விடுதலையாக்குகிறார். நித்திய நரக தண்டனையிலிருந்து விடுதலையாக்குகிறார். நியாயத்தீர்ப்பிலிருந்தும் விடுதலை அளிக்கிறார். வியாதியிலிருந்தும் மரண பயத்திலிருந்தும் விடுதலையாக்குகிறார். சிலுவையைப் பற்றிய உபதேசம் நம்மை ஆசீர்வாதத்திற்கு நேராக வழிநடத்துகிறது. எனவே நமக்கு நியமித்த ஓட்டத்தில் சிலுவையைச் சுமந்து அவர் பின் நடப்போம். அல்லேலூயா!






Author

You May Also Like…

Share This