கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
தேவன் நாம் எழும்பி பிரகாசிக்க வேண்டும் என்று விரும்புகிறார். நாம் தேவ வல்லமையை பெற்றுக்கொண்டு தேவனுக்காக பெரிய காரியங்களைச் செய்ய வேண்டும். ஏசா.51:9ஆம் வசனத்தில், “எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே, முந்தினநாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?” தேவனுடைய சபையும் மக்களும் பயத்தைவிட்டும், தூசியை விட்டும், மரித்தோரைவிட்டும், பின்மாற்றத்தை விட்டும் எழும்பி தேவனுக்காக வைராக்கியமாக பிரகாசிக்க வேண்டும்.
பாதாளத்தின் வல்லமைகள் தேவ சபையை மேற்கொள்ளுவது இல்லை. எகிப்தில் இருந்த இஸ்ரவேலராகிய சபையாரால், தேவனுக்காக ஆராதனை செய்யவோ, பலியிடவோ முடியவில்லை. தேவன் மோசேயை அனுப்பி வெளியே கொண்டுவந்தார். தேவ மகிமை நம்மேல் சபைமேல் எப்பொழுதும் தங்கியிருக்கும்படி உலகப்பற்றை விட்டு, பழைய வாழ்க்கையை விட்டு எழும்பி வர வேண்டும். பழைய வலுசர்ப்பத்தின் கிரியைகள் நம் வாழ்க்கையிலும், சபையிலும் இருந்து அகற்றப்பட வேண்டும். நாம் எழுந்து என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்க வேண்டும்.
1) எழுந்து பெத்தேலுக்குப் போய் பலிபீடம் கட்டு:
ஆதி.35:1ஆம் வசனத்தில் “தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார்” யாக்கோபுவின் வாழ்க்கையில் தன் பிள்ளைகளால் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டது.
தான் குடியிருந்த கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் அவர்கள் அவனைக் கலங்கப் பண்ணினார்கள். அவன் வாசனையைக் கெடுத்துப்போட்டார்கள். ஆதி.34:25ஆம் வசனத்தில் “மூன்றாம் நாளில் அவர்களுக்கு நோவெடுத்துக்கொண்டபோது, யாக்கோபின் குமாரரும் தீனாளின் சகோதரருமான சிமியோன் லேவி என்னும் இவ்விரண்டு பேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாய்ப் பட்டணத்தின் மேல் பாய்ந்து, ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்.” ஏமோரையும் அவன் குமாரன் சீகேமையும் பட்டயக்கருக்காலே கொன்றுபோட்டார்கள். எனவே யாக்கோபு பயந்துவிட்டான். மேலும் ஆதி.28:16,17,22 ஆகிய வசனங்களில், “யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான். அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான். நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனை பண்ணிக்கொண்டான்”
பிள்ளைகள் மூலம் பிரச்சனைகளும் சிக்கலும் வந்ததும் தான் செய்யவேண்டியது என்ன? என்று ஆராய்ந்தபோது தேவன் அவனை பெத்தேலுக்குப் போய் பலிபீடத்தை கட்டச் சொன்னார். தேவன் மனிதனை சந்திக்கும் இடம்தான் பலிபீடம். ரோம.12:1ல் நாம் நம் சரீரங்களைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும். தேவசமூகத்தில் வந்த உண்மையான மனிதனை தேவன் இரட்சிக்கிறார்.
பிலேயாம் பலிபீடத்தை கட்டுமிடத்தில் கர்த்தர் வருவார் என அறிந்திருந்தான். புறஜாதியானாயிருந்தாலும் அவனுக்கு இந்த அறிவு இருந்தது. லேயாள் விக்கிரகத்துக்கு விலகி, தன்னை காத்துக்கொண்டாள். எனவே பிதாக்களின் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டாள். ஆதி.35:4ல் யாக்கோபு பெத்தேலிலே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான். “அப்பொழுது அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழே புதைத்துப் போட்டான்” யாக்கோபு தன் குடும்பத்தை பரிசுத்தம் பண்ணினான். பின்பு தேவ சமூகத்துக்கு போனார்கள்.
2) சாபத்தை போக்கும்படி எழும்பு:
யோசுவா 7:10,13ஆம் வசனங்களில் “அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்துகிடக்கிறது என்ன? எழுந்திரு, நீ ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நாளையதினத்துக்கு உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேலரே, சாபத்தீடானது உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும், நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்” தேவ சமூகத்தில் யோசுவா விழுந்து கிடந்ததால், எழும்பு, முகங்குப்புற விழுந்து கிடக்கிறதென்ன? சபையை பரிசுத்தம் பண்ணச் சொன்னார். சாபத்தீடானதை போக்க, தலைவர்கள், குடும்பத் தலைவர்கள் எழும்ப வேண்டும். குடும்பங்களை பரிசுத்தப்படுத்தி குடும்பங்களில் காணப்படும் சாபங்களை நீக்க வேண்டும்.
3) துக்கத்தை விட்டு எழும்பு:
2சாமு.19:7,8ஆம் வசனத்தில் “இப்போதும் எழுந்திருந்து வெளியே வந்து, உம்முடைய ஊழியக்காரரோடே அன்பாய்ப் பேசும்; நீர் வெளியே வராதிருந்தால், இன்று இரவு ஒருவரும் உம்மோடே தங்கியிருப்பதில்லை…” என்று யோவாப் தாவீதிடம் கூறினான். தாவீது அப்சலோமுக்காக துக்கப்பட்டு அழுதுகொண்டிருந்தான். அப்பொழுது ராஜா எழுந்து போய் ஒலிமுக வாசலில் உட்கார்ந்தான். இதோ ராஜா ஒலிமுக வாசலில் உட்கார்ந்திருக்கிறார் என்று சகல ஜனங்களுக்கும் அறிவிக்கப்பட்டபோது ஜனங்கள் எல்லாரும் ராஜாவுக்கு முன்பாக வந்தார்கள். ராஜா அப்சலோமுக்காக துக்கப்பட்டது வீணான துக்கம். அவன் இஸ்ரவேலரை வழிவிலகச் செய்து நாசம் பண்ணினவன். நாமும் அப்சலோமின் துரோக வேலைகளுக்கு கைகொடுக்கக் கூடாது. அப்சலோம் போல மக்கள் போதகருக்கு விரோதமாய் எழும்பி சபையை நாசப்படுத்த இடம் கொடுக்கக் கூடாது. அப்சலோமை வளரவிடக் கூடாது. அப்சலோமை பின்பற்றி துரோக வேலைகளில் ஈடுபடக் கூடாது. அப்சலோம் தாவீதின் மகன்தான். ஆனால் தேவனின் பார்வையில் இஸ்ரவேல் சபைக்கு தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட தாவீதுதான் தலைவன். அவன் தலைமைப் பொறுப்பை அப்சலோம் குறுக்கு வழியில் பிடிக்க இடம் கொடுக்கக் கூடாது. அவன் அழிக்கப்பட வேண்டியவன். அவனுக்காக துக்கம் கொள்ளக் கூடாது. 2சாமு.19:7,8ல் துக்கத்தை விட்டு எழும்பி ஒலிமுக வாசலில் அமர்ந்து, ஜனங்களுக்காக உத்தரவாதம் செய்ய வேண்டும். உலக பாரங்களை நினைத்து மரித்தோருக்காக கவலைப்பட்டு, கர்த்தருடைய வேலைகளை, உத்தரவாதங்களை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது.
4) சோர்வை விட்டு எழும்பு:
1இராஜா.19:5ஆம் வசனத்தில், “ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம் பண்ணு என்றான்” எலியா புசித்து, குடித்து திரும்பவும் படுத்துக்கொண்டான். கர்த்தருடைய தூதன் இரண்டாந்தரமும் வந்து அவனை தட்டியெழுப்பி எழுந்திருந்து போஜனம் பண்ணு. நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான். பின்பு தேவன் அவனுக்கு செய்ய வேண்டிய காரியங்களையும் பொறுப்புகளையும் கொடுத்தார். கர்த்தர் அவனைப் பார்த்து நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப் போய் ஆசகேலைச் சீரியாவின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணவும், பின்பு நிம்சியின் குமாரன் யெகூவை இஸ்ரவேல் மேல் ராஜாவாகவும் அபிஷேகம்பண்ணி சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவை உன் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு என்றார். சோர்விலிருந்து எலியா எழுந்ததால் தேவனுக்காக பெரிய காரியம் செய்ய முடிந்தது. சோர்வுகளை விட்டு எழும்புவோம். அசதியாயிராமல் ஜாக்கிரதையாய் நாம் காணப்படுவோம்.
அன்பு நண்பரே! “எழும்பு, எழும்பு பெலன் கொள். கர்த்தரின் புயமே முந்தின நாட்களில் எழும்பினது போல எழும்பி வலுசர்ப்பங்களையும் பிசாசின் கிரியைகளையும் அழிக்க வேண்டும்” பிள்ளைகளை தொல்லைபண்ணும் கலகத்தின் ஆவிகளை மேற்கொள்வோம். குடும்பத்தின் சாபங்களை மேற்கொள்ள எழும்புவோம். சோர்வின் ஆவியிலிருந்தும், துக்கத்தின் ஆவியிலிருந்தும் எழும்பி தேவன் நமக்கு தந்த பொறுப்பை நிறைவேற்றுவோம். கர்த்தர் நம்மை உயிர்ப்பிப்பார். மகிமைப்படுவார்! ஆமென்.