மனிதனின் மிக முக்கிய தேவை என்ன?

Written by Pr Thomas Walker

December 4, 2015

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!

இன்றைய திருச்சபை மக்களின் முக்கிய தேவை என்னவென்றால் உயர்வு, ஆசீர்வாதம், விடுதலை பெற்று அனுபவிக்க விரும்புகிறார்கள். ஆனால் அதை அடைய வழிதெரியாமல் தன் மனம்போல் வாழ்ந்து, இச்சைக்கு இடம் கொடுத்து சாத்தானின் சிறை கைதிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இளைஞர்கள் சுயாதீனத்தை தவறாகப் பயன்படுத்தி சாத்தானின் அடிமைகளாக மாறுகின்றனர். பேதுரு எப்படி இளைஞர்கள் விரும்பும் உயர்வையும், விடுதலையையும் பெற்று அனுபவிக்கலாம் என்று கூறுகிறார். உயர்வை விரும்பும் ஒவ்வொருவருக்கும் மிகவும் தேவையானது தாழ்மை, கீழ்ப்படிதல், கர்த்தருக்குப் பயந்து பொல்லாப்பைவிட்டு விலக வேண்டும். இளைஞர்களுக்கு அடங்கி இருக்கவோ, காத்திருக்கவோ விருப்பம் இல்லை.

பேதுரு அப்போஸ்தலன் இளைஞர் எப்படி தங்கள் வாழ்வில் வெற்றியை பெற்று அனுபவிக்க முடியும் எனக் கூறும் வழிகளை விரிவாகக் காண்போம்.

1) தேவனுக்கு கீழ்ப்படிய வேண்டும், மூப்பருக்கு கீழ்ப்படியுங்கள்:

1பேதுரு 5:5ஆம் வசனத்தில், “…இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள்.” தேவன் நம்மை ஆசீர்வதிக்க வேண்டுமானால், தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய வேண்டும். சபை போதகர்களுக்கு கீழ்ப்படிய வேண்டும். கீழ்ப்படியாதவர்கள் அதிக கஷ்டத்தையும், சிரமத்தையும் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டும். பின்னர் அதிக கிரயம் செலுத்த வேண்டும். இன்றைய திருச்சபை மக்களும், இளைஞர்களும் கர்த்தரின் ஆலோசனை என்ன? என்று கேட்கிறார்கள். ஆனால் அதற்கு கீழ்ப்படிவதில்லை. உங்களை நடத்துகிறவர்களுக்கு கீழ்ப்படியுங்கள். பெற்றோருக்கு கீழ்ப்படியுங்கள்.

உதாரணமாக:- கெட்ட குமாரன் தகப்பனுக்கு கீழ்ப்படியாமல் சொத்தை பிரித்துக்கொண்டு சென்று, கெட்ட நண்பர்களால் மோசம் போனான். ஆஸ்தியை இழந்து நஷ்டப்பட்டான். அவன் தன் கீழ்ப்படியாமைக்கு அதிக கிரயம் செலுத்த வேண்டியதாயிற்று.

நாகமான் முதலில் தீர்க்கதரிசியின் வார்த்தைக்கு கீழ்ப்படிய மறுத்தான். பின்னர் கீழ்ப்படிந்து ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொண்டான்.

2) ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து இருங்கள்:

1பேதுரு 5:5ஆம் வசனத்தில், “நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்” மற்றவர்களை, நம்மைவிட மேன்மையாக எண்ண வேண்டும். ஒருவருக்கொருவர் பணிந்த ஆவியுடன் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். நீதி.22:4ஆம் வசனத்தில், “தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்”

3) மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்:

1பேதுரு 5:5ஆம் வசனத்தில், “…மனத் தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்”

நாம் மனத்தாழ்மையை அணிந்துகொள்ள வேண்டும். ஒரு மனிதன் துண்டை தன் தோளின்மேல் போட்டு ஓடினால், துண்டு கீழே விழுந்துவிடும். சட்டையோ எவ்வளவு ஓடினாலும் கீழே விழுந்துவிடாது. சட்டையை அணிந்துகொள்ளுவதுபோல மனத்தாழ்மையை அணிந்துகொள்ள வேண்டும். ஆவியில் எளிமையுள்ளவர்களுக்குத் தான் மனத்தாழ்மை வரும். சிலர் மாயமான தாழ்மையாயிருப்பார்கள். காரியம் முடியும்வரை கழுதையானாலும் காலைப்பிடி என்று தன் காரியத்தை முடிக்கும்வரை தாழ்மையாயிருப்பதுபோல இருந்து தன் பெருமைக் குணத்தை வெளிப்படுத்துவார்கள். மனத்தாழ்மையாயிருப்பதை விரும்ப வேண்டும். ஆவியில், இருதயத்தின் ஆழத்தில் தாழ்மை தேவை. வெளியே ஒருவித மாய்மால தாழ்மை கூடாது.

நாம் தாழ்மையாயிருப்பதால் பிறர் நம்மை மதிக்கமாட்டார்கள் என்று எண்ணக்கூடாது. ஆபிரகாம் விட்டுக்கொடுத்தான், லோத்து தன்னை புத்திசாலி போல நினைத்தான். ஆனால் முடிவில் எல்லாவற்றையும் இழந்தான்.

பவுல் அப்போஸ்தலன்கூட தன்னுடைய பெலவீனங்களைக் குறித்தும், சிலுவை பாடுகளைப் பற்றியாகும். பெருமைப்பாராட்டுகிறார். கர்த்தரின் ஆசீர்வாதம் பெற தாழ்மை ஒரு சாவி.

4) பெருமையாயிராதே:

1பேதுரு 5:5ஆம் வசனத்தில், “பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” தேவன் தாழ்மையான பிள்ளைகளுக்கு அதிக கிருபையளிக்கிறார். ஸ்தோத்திர ஜெபத்தினால் கிருபை பெருகும். பிரச்சனைகள் வரும்போது அதை தாங்கிக்கொள்ளும் கிருபையை தருகிறார். சோதனை நேரத்தில் ஜெபிப்பதுதான் ஆவிக்குரியவர்களுக்கு ஜெயத்தைக் கொண்டுவரும்.

5) ஏற்ற காலம் வரை அடங்கியிருக்க வேண்டும்:

1பேதுரு 5:6ஆம் வசனத்தில், “ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்” உதாரணமாக, தாவீது தன் 17ஆம் வயதில் தேவனால் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டான். ஆனால் 30 வயதில் தான் இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டார். அந்த 13 ஆண்டு காலம் மேல் தேவன் அவனை பக்குவப்படுத்தினார்.

யோசேப்பு சிறைச்சாலையில் சொப்பனங்களுக்கு அர்த்தம் கூறினான். சுயம்பாகிக்கும், பானபாத்திரக்காரனுக்கும் சொப்பனத்தை வியாக்கியானப்படுத்திக் கூறினான். தன் பிரச்சனைகளை பார்வோனிடம் கூறும்படி சொன்னபோதும் அவன் இரண்டு வருடம் மறந்து போனான். தேவன் மறக்கப் பண்ணினார். மொர்தெகாய் தேவனால் உயர்த்தப்படும்வரை காத்திருந்தான். தாவீதுகூட இரண்டு சந்தர்ப்பங்களில் சவுலைக் கொல்ல சமயம் கிடைத்தபோதும், தேவன் தனக்காக யுத்தம் செய்வார் என்று நம்பி அவனை கொலை செய்யவில்லை. தேவனுடைய வேளைக்காக காத்திருந்தான். அவரின் பலத்த கைக்குள் அடங்கியிருந்தான். அவர் கைக்குள் அடங்கியிருக்கும்போது பதறவோ, அவசரப்படவோ தேவையில்லை.

6) பாரத்தை தேவன்மேல் வைத்துவிடு:

1பேதுரு 5:7ஆம் வசனத்தில், “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” தேவ சமூகத்தில் சென்று உன் பாரங்களையெல்லாம் தேவன்மேல் வைத்துவிடு. பாரத்தை தேவ சமூகத்தில் ஊற்றிய பின் மீண்டும் உலகத்திற்குள் வரும்போது அதே பாரத்தோடு வராதே. தேவ சமூகத்திலேயே விட்டுவிடு. ஏனெனில் தேவன் நம் வாழ்வில் கிரியை செய்ய அது தடையாக இருக்கும்.

7) தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்:

1பேதுரு 5:8ஆம் வசனத்தில், “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” உதாரணமாக கெட்ட குமாரன் ஆண்டவரை நோக்கி பார்த்த பின்தான் தெளிந்த புத்தி வந்தது. அவன் பாவத்தை உணர்ந்து, தகப்பனின் வீட்டுக்கு வந்து, தகப்பனிடம் மன்னிப்பு கேட்டான்.

யோனத்தான் கூட தேனை சாப்பிட்ட பின்தான் அவன் கண்களில் தெளிவு, பிரகாசம் வந்தது. பிசாசு எவனை விழத்தள்ளலாம் என்று வகை தேடுகிறான். வறுமையைக் கொடுத்து அநேகரை சிறைபிடித்து வைக்கிறான். தேவன் தம் கிருபையினால் நம்மை ஆசீர்வதித்து உயர்த்துகிறவர். சாத்தானின் தந்திரங்களுக்குத் தப்பி, தெளிந்த புத்தியுடன் நாம் தேவனைப் பின்பற்ற வேண்டும்.

இதை வாசிக்கும் அன்பு நண்பரே! தேவனுக்கும், போதகருக்கும் கீழ்ப்படிந்திருங்கள். ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள். பெருமைக்கு இடம் கொடாதிருங்கள். ஏற்ற காலத்தில் தேவன் உங்களை உயர்த்தும்படி அவர் வேளைக்காக காத்திருங்கள். உங்கள் கவலைகளையும், பாரங்களையும் தேவனிடம் வைத்துவிடுங்கள். தெளிந்த புத்தியுடன் பிசாசுக்கு இடம்கொடாமல் எதிர்த்து நில்லுங்கள். தேவன் உங்களை யோசேப்பை போலவும், தாவீதைப் போலவும் உயர்த்தி ஆசீர்வதிப்பார். அல்லேலூயா!

Author

You May Also Like…

Share This