கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
இயேசு நல்ல மேய்ப்பனாக இருக்கிறார். ஆடுகளுக்காக தன் ஜீவனைக் கொடுக்கிற நல்ல மேய்ப்பன். யோவான் 10:1ஆம் வசனத்தின்படி “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத் தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்” என்கிறார். வாசல் வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான். “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்” (யோவான் 10:9).
நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளை எப்படி கவனிக்கிறார்? என்று பார்ப்போம்:
1) அவர் ஆடுகளை பெயர் சொல்லி அழைக்கிறார்:
யோவான் 10:3ஆம் வசனத்தில், “வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான்” நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளைப் பெயர் சொல்லி அழைக்கிறார். அவர் நம்மை உள்ளங்கைகளில் வரைந்துள்ளார். எல்லாக் காரியங்களையும் அறிவார். தேவன் ஆதாமை பெயர் சொல்லிக் கூப்பிட்டார். சகேயுவே, சகேயுவே இறங்கி வா என்று கூப்பிட்டார். பேதுருவை பெயர் சொல்லி அழைத்தார்.
2) அவர் ஆடுகளை நடத்துகிறார்:
யோவான் 10:4ஆம் வசனத்தில் “அவன் தன்னடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது” நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்கு முன்பாக நடக்கிறார்.
3) அவர் ஆடுகளை மேய்க்கிறார்:
யோவான் 10:9ஆம் வசனத்தில் “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்” அவர் அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் நடத்துகிறார். புல்லுள்ள இடங்களில் மேய்க்கிறார்.
4) அவர் கவலைப்படுகிறார்:
நல்ல மேய்ப்பன் தன் ஆடுகள் கள்ளர் கையில் சிக்காமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கவலைப்படுகிறார். யோவான் 10:13ஆம் வசனத்தில், “கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான்” என்கிறார். கூலியாட்கள் ஆடுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை.
5) அவர் ஆடுகளை தேற்றுகிறார்:
சங்கீதம் 23:4ஆம் வசனத்தில், “…தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்” மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதும் தேவன் பாதுகாக்கிறார். விபத்துக்கள், ஆபத்துக்களில் கூடவே இருக்கிறார். பயமில்லாத, பாதுகாப்பான வாழ்க்கையைத் தருகிறார்.
ஆடுகள் என்ன செய்ய வேண்டும்?
1) ஆடுகள் மேய்ப்பனின் சத்தத்துக்குச் செவிகொடுக்க வேண்டும் (யோவான் 10:3)
2) ஆடுகள் மேய்ப்பனுக்குப் பின்செல்ல வேண்டும்.
3) ஆடுகள் அவரை அறிந்து அவருக்கு கீழ்ப்படிய வேண்டும்.
இதை வாசிக்கும் அன்பு நண்பரே! இயேசு நம்முடைய நல்ல மேய்ப்பன். நாம் தேவனைத் தேடி அறியும் அறிவால் நிரப்பப்பட வேண்டும். யோவான் 10:15ஆம் வசனத்தின்படி, “நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்” என்கிறார். நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்கள், அவர் கைக்குள் கீழ்ப்படிந்த ஆடுகளாய் வாழ்வோம். அவர் நமக்கு நித்திய ஜீவனைத் தருவார். அல்லேலூயா!




