பானையிலே சாவு இருக்கிறது

Written by Pr Thomas Walker

October 4, 2019

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
அன்று தேசத்திலே கொடிய பஞ்சம்! அது தேவனுடைய பிள்ளை களையும் கடுமையாக பாதித்தது!! தேவனுடைய மனுஷனாகிய எலிசா தனக்கு முன்பாக உட்கார்ந்திருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரரின் பசியை ஆற்றுவதற்கு ஏற்றபடி தன் வேலைக்காரனை நோக்கி “நீ பெரிய பானையை அடுப்பிலே வைத்துத் தீர்க்கதரிசிகளின் புத்திரருக்குக் கூழ் காய்ச்சு என்றான்” (2இராஜா.4:38).
எந்தக் கொடிய காலமாக இருந்தாலும், தமக்கு முன்பாக அமர்ந்திருக்கிற தம் பிள்ளைகளைப் போஷிக்க, கர்த்தர் ஒரு வழியை வைத்தே இருக்கிறார். அல்லே லூயா! தேவ மனுஷனுடைய வார்த்தையின்படி கூழ் காய்ச்சத் தொடங்கினார்கள்; பானை மிகப் பெரியது; இருந்த மாவோ மிகக் கொஞ்சம்; போஷிக்கப்பட வேண்டியவர்களோ அதிகம், ‘அந்தக் கொஞ்சம் மாவோடு சில கீரைகளையும் பறித்துச் சேர்த்தால் கொஞ்சம் தாராளமாக சாப்பிடலாமே?’ என்று எண்ணம் ஒருவருக்கு வந்தது. இப்படித்தான் தேவன் ஆசீர்வதித்துத் தருகிற அந்தக் கொஞ்சத்தை இன்னும் அதிகரிக்க எண்ணி (தேவ ஆலோசனைக்குப் புறம்பான) வேறு வழிகளை மனிதன் கையாளுகிறான். ஆனால், தேவன் சொன்னபடி அப்படியே கீழ்ப்படிந்து செய்யும்போது தான் அந்தக் கொஞ்சமும் நிறைவாக மாறுகிறது.
ஒரு தடவை தேவனுடைய மனுஷனாகிய எலிசாவினிடத்திற்கு ஒரு மனுஷன் தன் முதற் பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும், தாள் கதிர்களையும் கொண்டுவந்தான். அப்பொழுது எலிசா தன் பணிவிடைக்காரனைப் பார்த்து, “ஜனங்களுக்கு சாப்பிடக் கொடு” என்றான். பணிவிடைக்காரனோ “இதை நான் நூறு பேருக்கு முன் வைப்பது எப்படி?” என்றான். அதற்கு எலிசா, “அதை ஜனங் களுக்குச் சாப்பிடக்கொடு; சாப்பிட்டபிற்பாடு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்றான். பணிவிடைக்காரன் எலிசாவின் வார்த்தையின்படியே செய்தபோது எல்லாரும் புசித்ததுமன்றி மீதியும் இருந்தது (2இராஜா.4:42-44).


தேவன் எந்தக் கொஞ்சத்தையும் ஆசீர்வதித்து நிறைவாக்கித் தர முடியும் என்பதை விசுவாசிப்பது, இன்று மனிதர்க்கு கடினமாகத் தோன்றுவது எத்தனை பரிதாபம்!


அன்று பானையை நிரப்ப கீரையைப் பறிக்கப்போனவன் கண்களுக்கு பேய்க் கொம்மட்டிக்காய் மிகக் கவர்ச்சியாகத் தோன்றவே, அவைகளைப் பறித்து வந்து கூழ்ப்பானையிலே போட்டான். இன்றைய மக்களுக்கு அநீதத்தின் கூலி கவர்ச்சியாகத் தோன்றுவதால், இதன்மூலம் தங்களையும் தங்கள் குடும்பங்களையும் நிரப்பிக் கொள்கிறார்கள். அன்று பறிக்கப் போனதென்னவோ நல்ல பொருளாகிய கீரையைத்தான்! ஆனால் கொண்டுவந்து நிரப்பியதோ நச்சுப் பொருளாகிய பேய்க் கொம்மட்டிக்காய்களை!


தேவன் தருகிற கொஞ்சத்தில் திருப்தி இல்லாத மனுஷர், தங்கள் தவறான சம்பாத்தியங்களால் தங்களை நிரப்புகிறார்கள், ‘அதன் விளைவு எவ்வளவு பயங்கரமாயிருக்கும்’ என்பதை உணராதிருக்கிறார்கள். வேதம் சொல்லுகிறது, “அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கும் உதவாது” என்று (நீதி.10:2) மனிதர் இன்று சீக்கிரம் பணக்காரராக விரும்பி மடி நிறைய சாபத்தைக் குவித்துக் கொள்கிறார்கள்.
ஆகான் என்பவன் தேவனால் விலக்கப்பட்ட வருமானத்தைத் தன் கூடாரத்துக்குள் கொண்டுவந்தான். அந்தத் தீய வருமானத்துடன் சாவும் கூட வந்ததே! (யோசுவா 7:19-21,25,26) நமது குடும்பமாகிய பானைக்குள் நாமே சாவைக் கொண்டுவந்து விடாதபடி கர்த்தர் நம்மைக் காப்பாராக. அன்று கீரைக்குப் பதில் சாவுக்கு ஏதுவான பேய்க் கொம்மட்டிக் காய்களை அறுத்து வந்து பானையிலே போட்டவன் எல்லாரையும்விட நான்தான் அதிகப் பொருளால் பானையை நிரப்பினேன் என பெருமைப் பாராட்டியிருக்கக் கூடும். இன்று இதுபோல் தனக்குள்ளும், தன் குடும்பத்திற்குள்ளும், திருச்சபைக்குள்ளும் சாபத்தைக் கொண்டுவந்து நிரப்புகிற விசுவாசிகள் அநேகருண்டு!

சாவு கண்டுபிடிக்கப்பட்டது:
ஆம், சரியான நேரத்தில் அன்று தோஷம் கண்டுபிடிக்கப்பட்டது. வார்க்கப்பட்ட கூழில் எடுத்துச் சாப்பிட்ட தீர்க்கதரிசிகளின் புத்திரர், அதைச் சாப்பிடக் கூடாமல், தேவனுடைய மனுஷனே, “பானையிலே சாவு இருக்கிறது,” என்று சத்தமிட்டார்கள். இன்றைய ஜனங்களோ பாவத்தைப் பால்போல் பருகிக்கொண்டிருக்கிறார்கள். வேதம் சொல்லுகிறது, “பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோமர் 6:23). உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சாவு (பாவம்) இருக்கிறது. தாவீது கதறினான். “இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்” (சங்.51:5) பாவ உணர்வு வந்தவுடனேயே, இயேசுவை நோக்கி கதறியழுது, பாவ அறிக்கை செய்பவனுக்கு, சாவு நீக்கப்பட்டு நித்திய ஜீவன் அளிக்கப்படுகிறது.
தீர்க்கதரிசிகளின் புத்திரர், “பானையிலே சாவு இருக்கிறது” என்று தேவ மனுஷன் எலிசாவிடம் முறையிட்டார்கள்; அவன் மாவைக் கொண்டுவரச் சொல்லி, அதைப் பானையிலே போட்டு தோஷத்தை நீக்கினான். (2இராஜா.4:41)


ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிபார்த்த இயேசு கிறிஸ்துவுக்கேயன்றி பாவ தோஷத்தை மன்னிக்க, நீக்க, வேறு எவருக்கும் அதிகாரமில்லை. அவர் நமது பாவங்களை மன்னிக்கத் தயை பெருத்திருக்கிறார். “நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” (அப்.4:12).
இயேசு நமது, பாவ சாப ரோகங்களை நீக்கி, மரணத்திற்கு விலக்கி நம்மை நித்திய ஜீவனுக்குட்படுத்துகிறார். அவரை நோக்கியே நாம் முறையிட வேண்டும். இயேசு மன்னித்து, காத்து மறுவாழ்வு தருகிறார். சாபத்தீடானது நம்மில் இருக்குமானால், தேவன் நம்மோடு இரார். அன்று இஸ்ரவேலர் நடுவில் சாபத்தீடானது இருந்ததால், தேவன் அவர்கள் நடுவில் இருக்க முடியவில்லை. விளைவு ….கடும் தோல்வி! (யோசுவா 7:4) சாபத்தீடானது அகற்றப்பட்ட உடனே, ஜெயம் கிடைத்தது.!!
பாவம், மனுஷ ஜீவியத்தில் தோல்வியைக் கொண்டுவருகிறது. “…இச்சை யானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்” (யாக்.1:15).
தேவன் தாம் உண்டாக்கின முதல் மனுஷனுக்கு ஒரேயொரு விருட்சத்தின் கனியை மட்டுமே விலக்கினார். “அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்…” என்றார் (ஆதி.2:17) தேவன் சரீர மரணத்தையல்ல ஆத்துமாவில் வரும் மரணத்தைக் குறித்தே அப்படி சொன்னார். விலக்கப்பட்டதை புசித்த ஆதாமும் ஏவாளும், தேவ சமூகத்தைவிட்டு தள்ளப்பட்டார்கள். அவர்களுக்குள் இருந்த ஜீவன் நீங்கி, மரணம் வாசம் பண்ணத் தொடங்கிற்று! இதே நிலை மாற வேண்டுமானால் மனுஷன் அதை சரியான நேரத்தில் சரியான ஆளிடம் சொல்ல வேண்டும். நம்மில் ஒரு அந்நிய சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது; அது சொல்கிறது: “நீங்கள் சாவதில்லை; உங்கள் கண்கள் திறக்கப்படும்… நீங்கள் தேவர்களைப்போல் இருப்பீர்கள்” (ஆதி.3:4,5).
இதே சத்தம் அன்று ஆதாமிலும், ஏவாளிலும் ஒலித்தபோது, அவர்கள் வஞ்சிக்கப்பட்டு, அதற்கு இணங்கி, ஆசீர்வாதத்திற்கு புறம்பாக்கப்பட்டார்கள்.

ஆசையினால் மோசம்:
ஆசைகாட்டி மோசம் போக்கும் சத்துருவை நம்பி அனுதினமும் மோசம் போகும் ஜனங்கள் ஏராளம்! … ஏராளம்! மனுஷன் தேவனைவிட்டுப் பிரிக்கப்படுவதையே மரணம் என்று வேதம் சொல்லுகிறது. இன்று உங்கள் பானையில் (வாழ்வில்) இருப்பது சாவா அல்லது (நித்திய) ஜீவனா? சாவு நீக்கப்பட்டாக வேண்டும் இயேசுவே – வழி சத்தியம் ஜீவன்.
தாவீது ராஜா துணிந்து பாவத்தில் வீழ்ந்தபோது அவருக்குள் மரணம் பிரவேசித்தது. ஆனால் அவன் பாவத்தை உணர்ந்து, பாவத்தை அறிக்கைசெய்து விட்டுவிட்டபடியால் சாவு நீங்கினது (2சாமு.12:13). தாவீது தேவனை நோக்கிக் கதறி முறையிட்ட ஆத்ம சத்தமே 51ஆம் சங்கீதம் (வாசியுங்கள், தியானியுங்கள்).

தன்னை விட்டுத் தூரதேசம் போய்:
ஆஸ்திகளையெல்லாம் துன்மார்க்கமாய் அழித்துவிட்டு, உணர்வடைந்து திரும்பிய இளைய மகனைக் குறித்து மூத்த மகனிடம் தகப்பன் இப்படி சொன்னான். “உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்;” (லூக்.15:32). நாமும் “நித்திய பிதா”விடம் திரும்பும்போதுதான் சாபம் தோஷம், மரணம் யாவும் நீங்கி வாழ்வடைகிறோம். நம் பானையில் (வாழ்வில்) எப்பொழுதும் ஜீவன் இருக்க விரும்பி உங்களுக்கு உதவி செய்வாராக! ஆமென்!






Author

You May Also Like…

Share This