திருச்சபையில் ஏசாக்கள்

Written by Pr Thomas Walker

September 4, 2019

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
“நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப் படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” (1யோவான் 3:1)
“நாம் தேவனுடைய பிள்ளைகள்” என்று அழைக்கப்படுவது எவ்வளவு பெரிய சிலாக்கியம் என்பதை, அநேகர் உணர்வதில்லை!
தேவன் இஸ்ரவேலை, ‘என் சேஷ்ட புத்திரன்’ என்று சொல்கிறார்! ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நாமும், அவருக்குச் சேஷ்ட புத்திரர்கள் தான். அன்று குடும்பத்தில் கர்ப்பந்திறந்து பிறக்கும் (மூத்த மகனாகிய) சேஷ்ட புத்திரனுக்கு அநேக சலுகைகள் இருந்தன. நியாயப்பிரமாணம் சொல்லுகிறது “….ஆஸ்திகளிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்க வேண்டும்; அவன் தன் தகப்பனுடைய முதற்பலன், சேஷ்டபுத்திர சுதந்தரம் அவனுக்கே உரியது.” (உபா.21:15-17). மட்டுமல்ல, அவனுக்குப் பந்திகளிலும் முதலிடம் கொடுக்கப்பட்டது (ஆதி.43:33). அத்துடன், அவனுக்கே இராஜ்யபாரங்களிலும், ஆசாரிய ஊழியங்களிலும் முன் உரிமை இருந்தது (2நாளா.21:3).


சிலர் இந்த சேஷ்டபுத்திரபாக மேன்மையை எப்படி இழந்தனர் என்றும் வேதாகமம் நமக்குக் கூறுகிறது! ஆதாமின் மூத்த குமாரன் காயீனுக்கு இருந்த இந்த உரிமை அவனுடைய அக்கிரமத்தால், இளைய குமாரன் சேத்துக்குப் போய்விட்டது (ஆதி.4:25). யாக்கோபின் மூத்த குமாரன் ரூபனுக்கு இருந்த அந்த உரிமை அவனது தவறினிமித்தம், யாக்கோபால் எப்பிராயீமுக்குக் கொடுக்கப்பட்டது (ஆதி.48:14,19). ஆனால் தேவனோ, அந்த உரிமையை யூதாவுக்கே கொடுத்தார் (ஆதி.49:10). ஈசாயின் மூத்த குமாரன் எலியாப் மூத்த குமாரனாயிருந்தும், எட்டாவதாய்ப் பிறந்த தாவீதே ராஜாவாகத் தெரிந்துகொள்ளப்பட்டு, அபிஷேகமும் பண்ணப்பட்டான் (1சாமு.16:10-12; 1சாமு.17:28). தாவீதின் குமாரனாகிய அதோனியா இராஜ்ய பாரத்தைப் பெற முயற்சித்தும், தேவனுடைய பார்வையில் அவன் தகாதவனாய்க் காணப்பட்டபடியினால் உரிமை சாலொமோனுக்கு தாண்டிப் போய்விட்டது (1இராஜா.1:5,34,35).


ஏசா ஈசாக்கின் சேஷ்டபுத்திரனாய் இருந்தும், அந்த உரிமையின் மதிப்பைச் சரியாய் உணரவில்லை. அவன் சொன்னான் “இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திர பாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்” (ஆதி.25:32).
ஒரு வேளையோ, ஒரு நாளோ சாப்பிடாததினால் யாரும் மரித்துப்போக மாட்டார்கள்.
திருச்சபை மக்கள், மறுபடி பிறந்தவர்களாகவும், ஆவிக்குரிய இஸ்ரவேலராகவும், தேவனுடைய சேஷ்ட புத்திரர்களாயும் இருந்தாலும், ஏசா சிலாக்கியங்களை இழந்தது போல, இவர்களும் உரிமையை இழக்கும் ஆபத்துள்ளது, நமக்கு ஓர் எச்சரிப்பாகும்.
சில விசுவாசிகள், சிறு கஷ்டங்கள் வந்தாலும் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களாய், தேவனுடைய பிள்ளை எனும் ஸ்தானத்தை இழக்கத் துணிந்துவிடுகிறார்கள்.


“ஒருவனும் ….ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்” என்று வேதாகமம் நம்மை எச்சரிக்கிறது (எபி.12:16).
இன்று இம்மைக்குரிய ஆசீர்வாதங்களுக்காக மாத்திரமே பலர் திருச்சபையில் இருக்கிறார்கள்.
இவர்கள், ஏசா சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியப்படுத்தியது போல தங்கள் உரிமையை அலட்சியப்படுத்துகிறார்கள்; உலகச் சலுகைகளைப் பெறுவதற்காக ‘தேவ பிள்ளைகள்’ எனும் பெரும் சிலாக்கியத்தை துச்சமாக மதித்து மேன்மை இழந்து விடுகிறார்கள்.
இன்று ஏசா, தன் உரிமையை அலட்சியப்படுத்தியது மாத்திரமல்ல, அதை விற்றும் போட்டான். திருச்சபையிலும் சிலர், இன்று தங்கள் சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுப் போட்டு உலகச் சலுகைகளில் திருப்திபடுகிறார்கள்.


அநேகர் திருச்சபையில் இருப்பதுபோல் இருந்தாலும், அவர்களுடைய எண்ணங் களும், சிந்தையும், விருப்பங்களும் எப்போதும் வெளியேதான் இருக்கின்றன.
ஏசா யாக்கோபைப் போல் குணசாலியாகவும், கூடாரவாசியாகவும் இருக்கவில்லை! ‘வனசஞ்சாரி’யாகவே வாழ்ந்தான்!!
இன்று அநேகருடைய வாழ்வில் தேவனுடைய காரியங்களுக்குரிய இடத்தை, உலகக் காரியங்கள் பற்றிப் பிடித்துக்கொண்டு உள்ளன. இவர்கள் தேவனுடைய கூடாரத்தில் நிலைத்து நிற்காத ‘வனசஞ்சாரிகள்’. இவர்கள் விருப்பமெல்லாம் திருச்சபைக்கு வெளியேதான் உள்ளது.
குணசாலிகளாகவும், கூடாரவாசிகளாகவும் இருக்க வேண்டியவர்கள், விளையாட்டுப் பைத்தியங்களாய் மாறிவிட்டனர். எப்போதும் இவர்கள் விளையாட்டை பற்றியோ, அரசியலைப் பற்றியோதான் பேசுவார்கள்.


‘நிம்ரோத் என்பவன் வேட்டைக் கலையில் வல்லவன்’ என்று வேதம் சொல்லுகிறது (ஆதி.10:8,9). இவன் தேவனுக்கு மேலாக தன்னை உயர்த்தியவன்.
ஒருவேளை, இந்த ஏசாவும் சிறந்த வேட்டைக்காரனாய் இருந்தபடியால், அவனைப் பாராட்டுகிறவனாகவும், பின்பற்றுகிறவனாகவும் இருந்திருக்கக்கூடும்.
ஏசா, வேட்டையாடி, அதை ருசியாய், சமைத்து தகப்பனுக்குக் கொடுத்தான்; தகப்பனும் புசித்து, அதனால் இவன்மேல் பிரியமானான்.
இன்று, அநேகர் ஊழியர்களைப் பிரியப்படுத்தி விட்டால் போதும், ஆசீர்வாதம் கிடைக்கும் என எண்ணுகிறார்கள்.
தேவனைப் பிரியப்படுத்தாமல் ஊழியர்களை மட்டும் பிரியப்படுத்துவதால் எந்த பலனும் இல்லை.


ஏசா, அந்நியரான கானானிய ஸ்திரீகளை விவாகம் செய்தான். அவர்கள் ஈசாக்குக்கும், ரெபேக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள் (ஆதி.26:34,35).
ஒரு விசுவாசி, அவிசுவாசியைத் திருமணம் செய்வதை வேதாகமம் ஒத்துக்கொள்வதில்லை. ஒளிக்கும், இருளுக்கும் எப்படி ஐக்கியமுண்டாக முடியாதோ அதுபோல் விசுவாசிக்கும் அவிசுவாசிக்கும் ஐக்கியமேற்பட முடியாது (2கொரி.6:14-17).
இன்றைய ஏசாக்கள், லௌகீக காரணங்களுக்காக அவிசுவாசிகளை திருமணம் செய்து, தேவ கற்பனைகளை மீறுகிறார்கள். ஆவிக்குரியவர்களென்று பேர் பெற்ற பெற்றோருடைய ஆசீர்வாதத்துடனே இந்தத் திருமணங்கள் நடப்பது பரிதாபத்திற்குரியது.
ஏசாவைச் சீர்கெட்டவன் எனக் குறிப்பிடும் வேதம், நம்மையும் எச்சரிக்கிறது (எபி.12:16).
பின்பு, ஏசா, ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும், ‘ஆகாதவன்’ என்று தள்ளப்பட்டான், மட்டுமல்ல, அவன் கண்ணிர்விட்டு, கவலையோடு தேடியும் மனமாறுதலைக் காணாமற் போனான் (எபி.12:17).
அவன் தன்னை சரிசெய்ய, தேவனிடம் போவதற்குப் பதில் தன் தகப்பனிடம் போய், கண்ணீர்விட்டுக் கதறி இழந்தவற்றையெல்லாம் பெற்றுக்கொள்ளலாம் என நினைத்தான்.


இன்று, இப்படித்தான் பலர் தப்புக்கணக்கு போடுகிறார்கள். இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் காரியோத்துக்கும்கூட, பின்பு குற்ற உணர்வு ஏற்பட்டது. அவன், சிலுவையில் தொங்கும் இயேசுவிடம் ஓடிப்போவதற்குப் பதில், தவறான இடத்திற்கும், தவறான மனிதரிடமும் சென்றதால் நான்றுகொண்டு சாக நேர்ந்தது (மத்.27:3-5; அப்.1:18). சிலுவையண்டையில் ஓடியிருப்பானேயாகில், மனமாறுதலைக் கண்டடைந்து ஆசீர்வதிக்கப்பட்டிருப்பான். பொருளாசை, அவனது அப்போஸ்தலப் பட்டத்தையும் பறித்து, அவனைக் கொன்றும் போட்டது (அப்.1:24).
தீர்க்கதரிசி எலிசாவுக்குப் பின்பு வாரிசாக, பெரிய தீர்க்கதரிசியாக வீற்றிருக்க வேண்டிய கேயாசியும், பொருளாசையினால் தன் ஸ்தானத்தை இழந்தான் (2இராஜா.5:20-22, 25-27).
இன்றைய சபைகளும் இப்படிப்பட்ட ஏசாக்களால் நிறைந்தே காணப்படுகின்றன. வேதம் எச்சரிக்கிறது! “உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை…” (யாக்.4:4).


பிரியமானவர்களே! நாம் உலகத்தில் இருந்தாலும், உலகத்தாரல்லாதவர்கள் போல், அந்நியரும் பரதேசிகளும் போல் ஜீவிக்க வேண்டும் (1யோவான் 2:15; எபி.11:13,14; 1பேது.2:11,12)
நாம் திருச்சபையின் உறுப்பினர்களாயிருந்தும், ஆவிக்குரிய சேஷ்ட புத்திரபாகத்தை இழந்துபோனால் அது எவ்வளவு பரிதாபம்!
சிந்திப்போம்! குணசாலிகளாயும், கூடார வாசிகளாகவும் இருப்போம்.!!
தேவன் சொல்கிறார் “…யாக்கோபை நான் சிநேகித்தேன். ஏசாவையோ நான் வெறுத்தேன்;” (மல்.1:2,3). தேவனால் வெறுக்கப்படும் நிர்பந்த நிலை, நமக்கு ஒருபோதும் வேண்டவே வேண்டாம்!!






Author

You May Also Like…

Share This