நெருக்கத்தின் குகையில் செல்பவரா?

Written by Pr Thomas Walker

May 4, 2019

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
பிரியமானவர்களே ஒரு ஆவிக்குரிய மனிதனின் வாழ்க்கையில் நெருக்கம் உண்டாவது ஏன்?
சங்.18:6 “எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்;” என்று தாவீது பாடுவதை வாசிக்கிறோம்.
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் நெருக்கம் மிகவும் அவசியமானது. நெருக்கங்களில் இரண்டு வகை உண்டு. முதலாவது வகையில் நெருக்கத்தால் பாதிக்கப்படும் மனிதன் முறுமுறுத்து ஆசீர்வாதத்தை இழந்து போகிறான். இரண்டாவது வகையில் நெருக்கத்தால் பாதிக்கப்படும் மனிதன் ஆசீர்வ திக்கப்படுகிறான். வேதாகமத்தில் பரிசுத்தவான்கள் மிகவும் நெருக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டதை காணலாம். இவ்வாறு மிகவும் நெருக்கப்பட்ட ஒரு மனிதன் தாவீது.

1சாமுவேல் 30:6இல் தாவீது மிகவும் நெருக்கப்பட்டான் என்று வாசிக்கிறோம். அவன் தனது மீறுதலின் காரண மாகவே நெருக்கப்பட்டான். தவறுகளை அகற்றும்போது நெருக்கம் நீக்கப்படுகிறது. தாவீதுக்கு இருந்த மனைவி, பிள்ளைகள், சொத்து, உணவு, ஆடுமாடு, பொருட்கள் எல்லாம் பறிபோயிற்று. அவனுடன் இருந்த அறுநூறு பேரும் போய்விட்டார்கள். இந்த அறுநூறு பேரும் தாவீதுடன் இருந்து நன்றாக அனுபவித்து அவனுக்குக் கை கொடுத்தவர்கள். தாவீதைப் பாராட்டி போற்றிய அறுநூறு பேரும் விரோதிகளாக மாறி கல்லெறிந்து கொல்ல வகை தேடினார்கள். தாவீதின் நெருக்கத்திற்குக் காரணம் அவனது தவறுதலேயாகும். ஆனால் யோபு நெருக்கப்பட்டதற்கு காரணம் யோபுவை தேவன் சிறந்த மாதிரி புருஷனாக மாற்ற விரும்பியதே ஆகும்.

தாவீது நெருக்கப்பட காரணமாயிருந்த 5 காரியங்களை நாம் இங்கு ஆராயலாம்.
முதலாவதாக தேவனுடைய பாதுகாப்பைப் பற்றிய சந்தேகம். தேவனுடைய பாதுகாப்பை மறந்து, என்றைக்காவது ஒருநாள் இந்த சவுலின் கையால் மடிவேன் என்பது உறுதி என்று தாவீது கூறுகிறான். தாவீது தேவன்மேல் வைத்த நம்பிக்கையை இழந்தான்.

இரண்டாவதாக தேவன் வைத்த இடத்திலிருந்து விலகுவது. 1 சாமு.22:5ல் நாம் பார்க்கிறோம், தேவன் அவனை நீ யூதா தேசத்துக்குப் போ என்றார். தாவீது யூதாவிலிருந்து பெலிஸ்திய தேசத்துக்குப் போவேன் என்றான். தேவன் வைத்த இடத்தில் நீ இருந்தால் அங்கு பாதுகாப்பு உண்டு, தேவ சமாதானம் உண்டு, தேவ ஆலோசனை உண்டு. தேவன் வைக்காத இடத்தில் நீ இருந்தால் நெருக்கம் தான் உண்டாகும். சுயமுயற்சி, சுயநீதி, சுயபுத்தி வேண்டும். தேவ மக்களை விட்டு விட்டு தேவனை விரோதிக்கிற மக்கள் மத்தியில் குடியிருக்க விரும்பினான்.

மூன்றாவதாக தேவனுடைய விரோதிகள் மத்தியில் செல்வாக்கைத் தேடுவது. இதுவும் நெருக்கத்திற்கடுத்த ஒரு காரணமாகும். லோத்து ஆபிரகாமை விட்டு விட்டு சோதோம் மக்கள் மத்தியில் ஒலிமுக வாசலில் உட்கார்ந்து செல்வாக்கைத் தேடினான். அதினால் நெருக்கப்பட்டான்.

நான்காவதாக, தேவப்பிள்ளைகள் வாழ்க்கையில் பொய் வருவது, தாவீதின் வாழ்க்கையில் பொய் வந்தது. இதற்க முக்கிய காரணம் பெலிஸ்திய மக்கள் மத்தியில் தேவ மனிதன் வாழ்ந்ததால் பொய் வந்தது.

ஐந்தாவதாக, தேவ ஜனங்களுக்கு விரோதமாக யுத்தம் செய்தது (1சாமு.28:1)ல் தாவீது தேவ மக்களுக்கு விரோதமாக யுத்தம் செய்வதைப் பார்க்கிறோம். தேவன் அதை சகிக்கவே மாட்டார். தாவீதை திருப்பவே இந்த நெருக்கத்தை உண்டு பண்ணினார். பிலேயாம் தேவ ஜனங்களை சபிக்க பாலாக்குடன் போகும்போது தேவன் அதை அனுமதிக்கவே இல்லை. தீர்க்கதரிசி பிலேயாம் தவறுதலான வழியில் ஜனங்களை நடத்த ஆலோசனை கொடுத்தான். (எண்.25:1,2) தேவ பிள்ளைகளை பரிசுத்த குலைச்சலாக்க தீய ஆலோசனைகளைக் கொடுத்தான். இது தேவனுக்கு பிரியமற்றது. தாவீது நெருக்கப்பட்டதன் நோக்கம், தேவன் அவனைத் தன் பக்கம் திருப்ப விரும்பினார். தாவீது தேவனை நோக்கிப் பார்த்தான். இழந்த எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்.
நீதிமொழிகள் 1:24-27ல் பார்க்கிறோம். நாம் அவருடைய சத்தத்தைக் கேளாமல் அவருடைய ஆலோசனைகளையெல்லாம் தள்ளி அவருடைய கடிந்துகொள்ளுதலை வெறுக்கும்போது நெருக்கப்படுகிறோம்.

கர்த்தரை அசட்டைப் பண்ணுவதே நெருக்கத்திற்கு காரணம்
இஸ்ரவேலர் நெருக்கப்பட்டார்கள். தேவனை விட்டு விட்டு பாகாலை வணங்கியதால் நெருக்கப்பட்டனர். தேவனைச் சார்ந்துகொள்ளாமல் தேவனை விட்டு விட்டு பொல்லாப்பானதைச் செய்தார்கள். (நியா.2:11-15) அதனால் கர்த்தருடைய கை அவர்களுக்கு விரோதமாயிருந்தது. மிகவும் நெருக்கப்பட்டார்கள்.
சவுல் நெருக்கப்பட்டான். கீழ்ப்படியாமையால், பொல்லாத ஆவி அவனில் கிரியை செய்து நெருக்கப்பட்டான். தேவ மனிதன் சொன்ன ஆலோசனைகளைக் கேட்கவு மில்லை. சவுல் நெருக்கப்பட்டது அவன் தேவனைத் தேடவேண்டும் என்பதற் காகவே. அவன் தேவனைத் தேடாமல் குறிசொல்லுகிறவர்களையே தேடினான். சவுல் தேவனைத் தேடாமல் போனதினிமித்தம் தேவன் அவனுக்கு சத்துருவாக மாறினார் (1சாமு.28:15-18).
மனாசே மிகவும் துன்மார்க்கமான இராஜா. மனாசே நெருக்கப்பட்டபோது தேவனை நோக்கி கெஞ்சினான். தன்னை மிகவும் தாழ்த்தினான். அதனால் தேவன் அவனை நெருக்கத்தினின்று விடுவித்தார். கர்த்தரே தேவன் என்று மனாசே அறிந்துகொண்டான் (2நாளா.22:12,13).
யோனா தீர்க்கதரிசி நெருக்கப்பட்டான். மூன்று நாட்கள் மீனின் வயிற்றினுள் நெருக்கப்பட்டான். கௌரவம், சுயம் பாதிக்கப்படாமல் இருக்க விரும்பினான். நினிவே அழிக்கப்பட வேண்டுமென்று யோனா விரும்பினான். ஆனால் தேவனுடைய திட்டம் வேறு. தேவ சித்தம் நிறைவேறவே யோனா நெருக்கப்பட்டான். (யோனா 2:2)


ஆண்டவருக்காக பாடுகள், நெருக்கங்கள் வருவது பாக்கியம். நாங்கள் எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போவதில்லை என்று (2கொரி.4:8) கிறிஸ்துவினிமித்தம் மிகவும் நெருக்கப்பட்ட பவுல் கூறுகிறார்.


1 கொரி.4:9-13 கிறிஸ்துவினிமித்தம், ஊழியத்தினிமித்தம், மற்றவர்களின் ஆசீர்வாதங்களுக்காக நாம் நெருக்கப்பட்டால் நாம் பாக்கியவான்கள்.
இதை வாசிக்கும் அருமையான தேவ பிள்ளைகளே உங்கள் வாழ்க்கையில் வரும் நெருக்கங்கள் எப்படிப்பட்டது? நாம் ஆசீர்வதிக்கப்பட்ட தாவீதைப் போல தேவன் பக்கம் திரும்புவோம்.

கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.



Author

You May Also Like…

Share This