கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
“நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூடாது; நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கெட்டுப்போவானேன்…” நெகே.6:3
“I am doing a great work, so that I cannot come down. Why should the work cease while I leave it and go down to you”. Neh.6:3
ஆவிக்குரிய வேலைகளில் முனைந்து நிற்கும் நெகேமியாக்களை தடைசெய்யும் சக்திகளைக் குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.
நெகேமியாக்களை திசை திருப்பும் பணியில் பிசாசு மும்முரமாய் ஈடுபட்டுள்ளான்.
முக்கிய வேலை – கண்ணியமான வேலை
இன்று அநேகர் தங்கள் நோக்கத்திலும், செயலிலும் மாறுபட்டிருக்கிறதை உணராதிருக்கிறார்கள். திசை திருப்பப் படாமலிருக்க வேண்டுமானால், நமது வேலையின் முக்கியத்துவத்தையும், கண்ணியத்தையும் உணரவேண்டும்.
கண்ணியம் உணராத சிம்சோன்
இஸ்ரவேலின் நியாயாசனத்தில் இருந்து நியாயம் வழங்க வேண்டிய சிம்சோன், தன் வேலையின் மேன்மையையும், திம்னாத்துக்கும், காசாவுக்கும், சோரேக் ஆற்றங்கரைக்கும் போனான். (நியா.14:1, 16:1,4)
ஊழியர்கள் தங்கள் எல்லைகளைக் காத்து நிற்க வேண்டும். வெளி இடங்களுக்குப் போக சந்தர்ப்பம் கிடைக்கிறதே என்று போகக் கூடாது. கர்த்தர் போக அனுமதித்தால் மட்டுமே போக வேண்டும்.
சிம்சோன், தன் அழைப்பின் கண்ணியத்தை உணரவில்லை. எத்தனைப் பரிதாபம் இது!
நெகேமியாக்குள்ளிருந்த உணர்வுடன் இவன் நான் நியாயாதிபதி, என் ஸ்தானத்தை விட்டு நான் வரக்கூடாது என்று சொல்லவில்லையே!
கண்ணியம் உணராத கேயாசி
இரட்டிப்பான வரங்களுடன் கர்த்தர் சார்பாய் நின்ற எலிசாவின் வாரிசாக வந்திருக்க வேண்டியவன் கேயாசி!
ஆனால் தனக்கு முன் வைக்கப்பட்டிருந்த மகிமையின் தரிசனம் இவனுக்கு இல்லை. ஆஸ்திகளை சேர்க்க விரும்பினான். தொடர்ந்து, இன்னும் கீழான நிலைக்கு இறங்கிவிட்டான். “அன்று எலியா ஆகாபின் இரதத்திற்கு முன் ஓடினான்; இவனோ நாகமானின் இரதத்திற்குப் பின் ஓடினான்”.
போதித்தலா? பந்தி விசாரணையா?
ஆதி அப்போஸ்தலர் கால சபையில் தேவ ஊழியத்திலும் போதிப்பதிலும் நிலைத்திருக்க வேண்டிய அப்போஸ்தலரின் கவனம், பந்தி விசாரணைக்கு நேராய் இழுக்கப்பட்டபோது, அவர்கள் தங்கள் ஊழியத்தின் முக்கியத்துவத்தையும் கண்ணியத்தையும் உணர்ந்து, “நாங்கள் தேவ வசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணைசெய்வது தகுதியல்ல… நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்” அப்.6:2,4
இன்னொரு விதத்தில் சொல்வதானால் அவர்கள் பந்தி விசாரணைக்காக கர்த்தருடைய ஊழியத்தை விட்டு இறங்கவில்லை. அல்லேலூயா!!
இன்று சிலர்…
சமீப காலங்களில் சில அருமையான தேவ ஊழியர்கள் தங்கள் ஊழியத்தின் முக்கியத்துவத்தையும் கண்ணியத்தையும் உணராமல், ஜெபம் பண்ணுவதையும் போதிப்பதையும் விட்டுவிட்டு அநாதை இல்லங்கள் நடத்தச் சென்றுவிட்டார்கள்; தேவன் தங்களுக்கு அளித்த முதல் இடத்தை விட்டுவிட்டார்கள்.
‘இரண்டையும் செய்ய முடியும் என்று நினைத்தார்கள்; முதலாவது வேலைக்கு இந்த இரண்டாவது வேலை உறுதுணையாக இருக்குமென்று நினைத்து இறங்கினார்கள்; இப்பொழுதோ, இரண்டையும், சரிவரச் செய்ய முடியாத நிலை!’
தேவன் அழைத்த அழைப்பு ஊழியத்திற்கு அல்லவா?
நெகேமியாவின் உறுதி
தேவ அழைப்பில் உறுதியாய் நின்று செயல்பட்ட நெகேமியாவின் கவனத்தைத் திருப்ப, சத்துருக்களான பகைஞர் பயங்கரமான வார்த்தைகளை உபயோகித்தார்கள். நிந்தித்தார்கள். “நீங்கள் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணப்போகிறீர்களோ என்றார்கள்” (நெகே.2:19). நெகேமியாவோ, ‘நான் கட்டுவதை விட்டு, இறங்க மாட்டேன்’ என்று உறுதியாய் நின்றான்.
சுவிசேஷத்தைத் தடைசெய்ய, சத்துரு, அரசாங்கம், சட்டங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தக்கூடும். நாமோ, தேவன் நம்மிடம் ஒப்புவித்த வேலையை விட்டு இறங்கவே கூடாது. சிறை செல்லவும் ஆயத்தமாய் இருக்க வேண்டும். சத்துருவுக்கு என்றுமே தோல்விதான்!
எதிரிகளான சன்பல்லாத், தொபியா, கேஷேம் ஆகியோர் தேவ வேலையின் தன்மையை அதன் முக்கியத்துவத்தை அதன் கண்ணியத்தை உணராமல் கிண்டல் செய்து பார்த்தார்கள். நிந்தித்துப் பார்த்தார்கள், இடையூறு செய்து பார்த்தார்கள்; பயமுறுத்திப் பார்த்தார்கள்.
நெகேமியாவோ இறங்கி வரவே இல்லை! எரிச்சலடைந்த எதிரிகள், அலங்கத்தைக் கட்டக்கூடாது என்று தடை செய்யவும், வேலையை நிறுத்தவும் உத்தரவிட்டுப் பார்த்தார்கள். நெகேமியாவோ இறங்கி வரவே இல்லை!
நெகேமியாவும் தேவ ஜனங்களும் ஒரு கையில் ஆயுதமேந்தியவர்களாயும் மறு கையில் வேலை செய்தவர்களாயும் நின்று உறுதியுடன் கட்டினார்களேயன்றி இறங்கி வரவில்லை! நெகே.4:17.
தேவன் தந்த உறுதிக்கு முன் சத்துருவுக்கு எப்போதுமே தோல்விதான்!
“கண்டு பேசுவோம்”
தேவ ஜனத்தின் முன்னேற்றத்தையும் ஜெயத்தையும் கண்ட எதிரிகள், “நாம்… ஒருவரையொருவர் கண்டு பேசுவோம்…” (நெகே.6:2) என நயவஞ்சகமாய் அழைத்தும் பார்த்தார்கள்.
இப்படியொரு அழைப்பு எதிரிகளிடமிருந்து வந்தவுடன் சிலர் ‘இதுவும் தேவ சித்தம் தானோ’ என மயங்கி, சத்துருவோடு பேச்சுவார்த்தைக்கு இறங்கிவிடுவார்கள்.
எதிரிகளோடு கருத்தொற்றுமை காண ஓடுகிறார்கள்.
சத்துரு, அன்பு ஐக்கியம் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி, சத்தியத்தினின்றும் விழச்செய்து விடுகிறான்; உலகத்தோடு ஒத்துப்போகச் செய்து விடுகிறான்.
‘அலோசனைக் கூட்டங்களுக்கு வாருங்கள். தீர்மானம் ஒன்று எடுக்க மாட்டோம்’ என்று சொல்லி (நமது உயர்ந்த இலட்சியத்தை விட்டு திசை திருப்பும்படி) அழைக்கும் கூட்டங்களுக்குச் செல்ல, நாம் இறங்கிவிடக் கூடாது.
ஜெயம் கர்த்தருடையது
‘உயிருக்கு ஆபத்து என்றால் எதிரி பயந்து விடுவான்’ என எதிரி தப்புக் கணக்கு போட்டான். (நெகே.6:10).
ஒரு தீர்க்கதரிசி மூலமாகவேதான் இந்தச் செய்தி வந்தது. நெகேமியாவோ, ஓடவுமில்லை, ஒளிந்துகொள்ளவுமில்லை! அவன் தன் வேலையைவிட்டு இறங்காமல் நின்று, 52 நாட்களுக்குள் அதை செய்தும் முடித்தான். இவனே செயல்வீரன்!!
தேவனுடைய தயவுள்ள கரம் அவன்மேல் இருந்தது (நெகே.2:8). அந்தக்கரம் ஜெயத்தின் கரம்.
இன்றும், ‘நான் இறங்கி வரக்கூடாது’ என்றும், முக்கியமான வேலை செய்கிறேன், ‘நான் வருகிறதினால் வேலை மினக்கெட்டுப்போகும்’ என்றும் கூறி இறங்கி வராது உறுதியாய் நின்று செயல்படுபவர்களே வெற்றி பெறுகிறார்கள்; பெறுவார்கள்.எதிரியின் அழைப்புக்கு இணங்கி, இறங்கி வருவோர் தாழ்வை நோக்கியே செல்கிறார்கள்.‘இறங்கி வராத’ நெகேமியா மரித்தும் போகிறான்!
நாம்………..?