ரேகாபியரின் குடும்பம்

Written by Pr Thomas Walker

March 4, 2019

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
எரேமியா தீர்க்கனுடைய நாட்களில் யூதாவுக்கு தேவன் மாதிரியாக நிறுத்தின குடும்பம் ரேகாபியரின் குடும்பம். அன்று யூதாவிலிருந்த அனைத்து குடும்பங்களிலும் இந்த குடும்பம் வேறுபட்டு இருந்தது. அதைக் குறித்து அவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இன்று கிறிஸ்தவ குடும்பங்களின் பிரச்சனை நாம் எங்ஙனம் வேறுபட்டு ஜீவிப்பது? என்பதே, என்றுமே வேறுபட்டு ஜீவிக்கிறவர்கள் அதிக கிரயம் செலுத்துகிறார்கள்.
எகிப்திய வாலிபர்களைப் போலில்லாமல் பாலிய இச்சைகளுக்கு விலகியோடின யோசேப்பு அதிக கிரயம் செலுத்த வேண்டியதாயிற்று. ஆனால் அது அவனுக்கு நன்மையாகவே முடிந்தது. நேபுகாத் நேச்சாரின் இராஜ்யத்தில் அனைத்து மக்களையும் பின்பற்ற மறுத்து வேறுபட்டு நின்ற “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ” ஏழு மடங்கு கனலெறியில் தூக்கியெறியப் பட்டார்கள். ஆனால் வெற்றி பெற்றவர்கள் அவர்களே. இப்படி ஒவ்வொரு காலத்திலும் உலகத்தைவிட்டு வேறுபட்டு நிற்கிற மனிதரும், குடும்பங்களும் உண்டு. இவர்கள் எக்காரணம் கொண்டும் உலகத்தோடு ஒத்துப்போக மாட்டார்கள்.


பாலாக், தன் வீடு நிறைய பொன்னும், வெள்ளியும், தந்தாலும் சிறிய காரியமானாலும், பெரிய காரியமானாலும் என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக்கூடாது என்று சொல்லிக்கொண்டே, மீறின அதாவது உலகத்தை பிரியப்படுத்துகிற பீலேயாமைப் போன்றவர்கள் பெருகி நிற்கிற காலத்தில் இருக்கிறோம். பேசாத மிருகம் பேசித் தடுத்தும் பயனில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேவனுக்காய் என்ன வந்தாலும் வேறுபட்டு நிற்கிற ஒரு சிறிய கூட்டம் உண்டு. அந்தக் கூட்டம் சிறியது தான். ஆனால் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிற கர்த்தருடைய கண்கள் இக்கூட்டத்தைக் காணத் தவறவில்லை.
பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன காலத்தில் ஒரு சிறிய கூட்டம் கர்த்தருக்காய் உறுதியாய் நின்றது. அன்று யூதா மக்களிடத்தில் தேவன் தம்முடைய ஊழியக்காரரை அனுப்பியும் அவர்கள் கர்த்தருக்குச் செவி சாய்க்காமலும், கீழ்ப்படியாமலும் போனார்கள். அந்த மக்களுக்கு ரேகாபியர் மாதிரியாக நிறுத்தப்பட்டனர். அதற்கு முன் ரேகாபியர் தங்களுக்கு ஏற்பட்ட சோதனையை மிகவும் சுலபமாக ஜெயித்தார்கள்.


அன்று எரேமியா தீர்க்கதரிசி, ஒரு பெரிய தீர்க்கதரிசி. அவனிடத்தில் கர்த்தருடைய வார்த்தை இருந்தது. அவன் ரேகாபியரைத் தேடி அவர்கள் வீட்டிற்குப் போகிறான். அவர்களோடே பேசுகிறான். பின்பு கர்த்தருடைய ஆலயத்தின் அறைகளில் ஒன்றுக்கு அவர்களை அழைத்து வருகிறான். அவர்களுக்காய் ஒதுக்கப்பட்ட அறை பிரபுக்களுடைய அறையின் அருகே இருந்தது. அந்த அறை ஒரு தேவனுடைய மனுஷனுடைய அறையாய் இருந்தது. கர்த்தருக்குள் நாம் எடுத்த தீர்மானங்களில் நிற்க முடியுமா? என்பதை சோதித்துப் பார்க்க இவ்வித சோதனைகள் வேறுபட்டு நிற்கிற நமக்கும் ஏற்படக் கூடும்.
சகோதரனே, சகோதரியே, இச்சோதனை ஒரு பிரபலமான தீர்க்கதரிசியின் மூலமாகவே வந்தது. அதுவும் பரிசுத்த ஸ்தலத்தில், பரிசுத்தவானின் அறையில் வந்தது. அநேக தேவப் பிள்ளைகளின் தீர்மானங்கள் உடைவது பாவ மனுஷர் மூலமாயுமல்ல. அசுத்தமான இடங்களிலுமல்ல. இதை நன்றாக சிந்தித்துப் பார்த்து உணர வேண்டும்.


பரிசுத்தமான அறைக்குள் ரேகாபியர் வந்தார்களேயொழிய அறைக்குள் இருந்த பளபளக்கும் கிண்ணங்களில் வைக்கப்பட்டிருந்த இரத்த நிறமான திராட்ச ரசம் அவர்களது கவனத்தை ஈர்க்கவே இல்லை. குடியுங்கள் என்று அன்றிருந்த பிரபல தீர்க்கதரிசி லைசென்ஸ் கொடுத்தாற் போல சொன்ன வார்த்தைகளுக்கு கீழ்ப்படியவில்லை. அவர்கள் முன் நின்றது திராட்சரசம் வைக்கப்பட்ட கிண்ணங்களுமல்ல, பிரபல தீர்க்கதரிசியுமல்ல, தங்களுடைய தகப்பனாகிய யோனதாபின் கட்டளையே. இஸ்ரவேலர் திராட்சரசம் குடிப்பது பாவமல்ல, அது அவர்கள் குடும்பங்களில் சர்வ சாதாரணமாக பரிமாறப்படுகிற ஒரு பானமே. ஆனால் ரேகாபின் புத்திரருக்கு அது விலக்கப்பட வேண்டும் என்று அவர்கள் தகப்பனால் கட்டளையிடப்பட்டிருந்தது.


அது மாத்திரமல்ல, வீட்டைக் கட்டாமலும், விதையை விதையாமலும் திராட்சைத் தோட்டத்தை நாட்டாமலும் அதைக் கையாளாமலும் எல்லா நாட்களிலும் கூடாரங்களிலேயே குடியிருக்க வேண்டும் என்று கூறிய கட்டளையைக் கைக்கொண்டு வந்தார்கள். எல்லோரும் ஒரேவிதமான தீர்மானங்களை எடுக்க நடத்தப்படுவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் நாம் கர்த்தருடைய நடத்துதலின்படி எடுத்த எந்த தீர்மானத்தையும் உடைக்கக் கூடாது.


இன்று அநேக பரிசுத்தவான்கள் கர்த்தருக்குள் எடுத்த தீர்மானங்களை உடைத்துக்கொண்டிருக்கிறார்கள். நமது தீர்மானம் எந்த வல்லமையாலும் அசைக்கப்படாதபடி உறுதியாய் நிற்க வேண்டும். நம்மோடு சேர்ந்து நிற்க ஆளில்லாமல், தனித்து விடப்பட்டாலும் எங்களுக்கு எங்கள் பரமதகப்பன் கற்பித்தபடியே நடப்போம் என்று துணிந்து சாட்சியாய் நிற்போம். அப்படிப்பட்டவர்களை கர்த்தருடைய கண்கள் காண்கிறது.






Author

You May Also Like…

Share This