தேவனால் பயன்படுத்தப்படுபவர்கள் யார்?

Written by Pr Thomas Walker

August 4, 2015

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!

தேவனுடன் யார் நடக்கமுடியும்? தேவன் யாரைப் பயன்படுத்த முடியும்? என்றால் தேவனைப் பிரியப்படுத்துபவர்கள், தேவனால் அங்கீகரிக்கப்பட்டவர்கள், உண்மையுள்ளவர்கள். மேலும் அவர் உண்மையுள்ள சீஷர்களைத் தான் தேவன் பயன்படுத்த முடியும் (1கொரி.10:1) “…சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள்… அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்” மேலும் வெளி.17:14ஆம் வசனத்தில், “…அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.”

இயேசு கிறிஸ்துவின் நாட்களில்கூட திரளான ஜனங்கள் இயேசுவைப் பின் தொடர்ந்து வந்தார்கள். அவர்கள் அற்புதங்களையோ, சுகத்தையோ, விடுதலையையோ மனதில் வைத்து இம்மைக்கான ஆசீர்வாதங்களுக்காக மட்டும் வந்துபோனார்கள். மத்.19:2ஆம் வசனத்தில், “திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவ்விடத்தில் அவர்களைச் சொஸ்தமாக்கினார்”

யோபு கூறுகிறார், அவர் என்னைக் கொன்றுபோட்டாலும்… பின்பற்றுவேன். இம்மைக்காக மாத்திரம் தேவனைப் பின்பற்றுகிறவர்கள் பரிதபிக்கப்படத்தக்கவர்கள். யோவா.6:66ஆம் வசனத்தில், “அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்” லூக்.6:12,13ல் 12பேரைத் தெரிந்தெடுத்து, “அப்போஸ்தலர்” எனப் பெயரிட்டார். 12 பேரிலும் 3 பேரை விசேஷமாக அழைத்து பயன்படுத்தினார். மேலும் மத்.17:2ஆம் வசனத்தில், “…இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று” இந்த 3 பேரையும் மகிமையையும், மகத்துவத்தையும் காணும்படி அழைத்தார். உண்மையுள்ளவர்களாக தேவனின் இரகசியத்தைப் பகிர்ந்துகொள்ளக் கூடியவர்களாக இருக்கிறோம் 2பேதுரு 1:16ஆம் வசனத்தில், “நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்” என்றார் பேதுரு.

தேவனால் பயன்படுத்தப்படுபவர்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

1) முதலாவது, இலக்கே முக்கியம்:

பிலி.3:14 “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” பரம அழைப்புக்குக் கீழ்ப்படிந்து, இலக்கை நோக்கித் தொடர்வது அவசியம்.

2) உண்மையுள்ளவர்களாக வாழ வேண்டும்:

யோவான் 2:23,24ஆம் வசனத்தில், “…அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை” மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தார். தேவனால் அழைக்கப்பட்டவர்கள், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். 70 சீஷர்களை தெரிந்தெடுத்தார். சுவிசேஷ வேலைக்காக 12 பேர்களை அப்போஸ்தலர்களாக தம்மோடு இருக்கவும், உபதேசிக்கவும் தெரிந்தெடுத்தார். 3 பேரை அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டு வல்லமையையும், வருகையையும் அறிவிக்கத் தெரிந்தெடுத்தார்.

3) சோதனையைச் சகிக்கவேண்டும்:

யோபு 1:9ஆம் வசனத்தில், “…சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்?” என்றான். கிறிஸ்தவ வாழ்க்கையிலே சோதனை உண்டு. சோதனையை ஜெயிக்கிற மனுஷன் பாக்கியவான், உத்தமன் என்ற விளங்கவே சோதனை வருகிறது. யோபுவுக்கு வந்த சோதனைகள் அதிகம். ஆஸ்திகளைக் கொண்டுபோனான். பிள்ளைகளும் மரித்தார்கள். ஆனாலும் பாவம் செய்யவில்லை. ஸ்தோத்திரமே செலுத்தினான். இப்படிப்பட்ட மனிதனே தேவனால் அங்கீகரிக்கப்பட்டவன். தேவனுடைய உள் வட்டத்தில் இரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளுகிற இடத்தில் வரவேண்டுமானால் மிகவும் கிரயம் கொடுக்கவேண்டும்.

யோபு சோதனைகளை ஜெயித்தான். தன்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காக, பகைக்கிறவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். சத்துரு தேவ பிள்ளைகளுக்குக் கிடையாது. சத்துருவை ஜெயிக்க வேண்டும். தேவனால் அங்கீகரிக்கப்படும் இடத்திற்கு வரவேண்டுமானால், சோதனைகளைக் கடந்தே ஆக வேண்டும். சோதனையை ஜெயிக்க வேண்டும். சோதனையைச் சகிக்க வேண்டும்.

4) தைரியமுள்ளவர்களாக இருக்கவேண்டும்:

நியாயா.7:1-8ஆம் வசனங்களில் பார்க்கும்போது, கிதியோனின் அழைப்புக்குக் கீழ்ப்படிந்து வந்தவர்களிடம் திகிலும் பயமுமுள்ளவர்களைப் போகக் கூறியபோது போனவர்கள் போக மீதியாக உள்ளவர்கள் 10,000 பேர் தான். 32,000 பேர்களில் பயமும் திகிலும் உள்ளவர் 22,000 பேர்கள். தைரியமுள்ளவர்களைத் தெரிந்தெடுக்க ஒரு சோதனையை தேவனே அனுமதித்து சோதித்தார். சிங்கம் போன்று நீதிமான் தைரியமாக இருக்க வேண்டும். புலி போன்ற விசுவாசிகள் சபையில் உண்டு. தவறான வருமானம், லஞ்சம், கமிஷன், தரகு, அதிக வட்டி போன்ற தவறான ஆதாயத்திற்காகக் கிறிஸ்துவின் மேலுள்ள அன்பிலிருந்து விலகுபவர்கள் சிங்கம் அடித்துப் புசித்து மீதியானதை விட்டுவிட்டுப் போய்விடும்.

5) “போதும் என்ற மனதுடன் கூடிய தேவ பக்தியுள்ளவர்கள்:

கிதியோன் சேனையில் உள்ள 10,000 பேர்களுக்கும் தேவன் தண்ணீர் குடிக்க வைத்து சோதித்து தெரிந்துகொண்டார். கையால் அள்ளி தண்ணீர் குடித்தவர்கள் 300 பேர்தான். மீதியானவர்களை தேவன் தள்ளிவிட்டார். முழங்கால் ஊன்றி குடித்தவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். உலகத்தில் சம்பூரணமாக வாழ விரும்புகிறவர்கள் தள்ளப்படுவார்கள். நியாயா.7:7ஆம் வசனத்தில், “…கர்த்தர் கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த முந்நூறு பேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்” என்றார். மற்ற ஜனங்களெல்லாரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகக்கடவர்கள் என்றார். (அள்ளிக்குடித்தவர்கள் – உண்ணவும், உடுக்கவும் இருந்தால் போதும் என்று எண்ணுபவர்கள்).

6) தனக்காக வாழக்கூடாது!

ஐசுவரியவான் உலகத்தை சம்பூரணமாக அனுபவித்தான். லாசரு தரித்திரனாக கஷ்டப்பட்டாலும் மரித்தபோது தேவதூதரால் ஆபிரகாமின் மடியில் கொண்டுபோய் விடப்பட்டான் (லூக்.16:22). ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான். பாதாளத்திற்குச் சென்று வேதனைப்பட்டான். ஆபிரகாமின் குமாரன் – ஒரு கிறிஸ்தவன். உன் வீட்டின் அருகில் இருந்தால் நீ அவனுக்கு தரித்திரத்தில், கஷ்டங்களில் உதவிசெய்ய வேண்டும். ஐசுவரியவான் அவனை நன்கு கவனித்து, அவன் தேவைகளைச் சந்திக்கவில்லை. உலகத்தை சம்பூரணமாக அனுபவித்தான். தனக்காகவே வாழ்வது தனது சுயநலம், சுயவிருப்பத்திலிருந்து திரும்பவேண்டும். அவனவன் தனக்கானவைகளை அல்ல, பிறனுக்கானவைகளையும் நோக்குவானாக என்று பவுல் கூறுகிறார்.

7) சுயத்திற்குச் சாகும்படி வாழவேண்டும்:

லூக்.21:3,4ஆம் வசனத்தில், “இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.”

கர்த்தருடைய நாள் பெரிதும், பயங்கரமுமான நாள். அந்த வருகையின் நாளைச் சந்திக்க ஆயத்தமாக இருக்க வேண்டும். பெருந்திண்டியினாலும், வெறியினாலும், லௌகீக கவலையினாலும் பாரம் அடையாமல் தேவனுடைய அன்பில் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும்.

1கொரி.7:29-31ஆம் வசனங்களில், “மேலும், சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள்போலவும், அழுகிறவர்கள் அழாதவர்கள்போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள்போலவும், கொள்ளுகிறவர்கள் கொள்ளாதவர்கள்போலவும், இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே”

அன்பு நண்பரே! நாம் தேவனால் பயன்படுத்தப்படுபவர்களாக, தேவனால் அங்கீகரிக்கப்பட்டவர்களாக வாழ வேண்டுமானால் தேவனுடன் நெருங்கி அவரைப் பிரியப்படுத்தி வாழ வேண்டும். இலக்கை நோக்கி ஆசையாய்த் தொடர வேண்டும். உண்மையுள்ளவர்களாக, சோதனையைச் சகித்து ஜெயம் பெறுகிறவர்களாக வாழ வேண்டும். தைரியமுள்ளவர்களாக, சோதனைகளை சகித்து ஜெயம் பெறுகிறவர்களாக வாழ வேண்டும். தைரியமுள்ளவர்களாக, போதும் என்ற திருப்தியுள்ள வாழ்க்கையுடன் வாழ வேண்டும். தனக்காக ஐசுவரியவான் போல வாழக்கூடாது. மேலும் சுயத்திற்கு சாகும்படி வாழ வேண்டும். மீதியானியரை முறியடித்த பாக்கியம் 300 பேருக்கே வந்தது ஏன்? இல்லாதவர்கள் போல திருப்தியாக வாழத் தெரிய வேண்டும். வருமானம் முழுவதையும் தேவனுக்கே கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்ற அறிவுடன் சுயத்திலிருந்து மனந்திரும்பி வாழ வேண்டும்! அல்லேலூயா!

Author

You May Also Like…

Share This