விசுவாசத்தில் வல்லவர்களாய் மாறுங்கள்

Written by Pr Thomas Walker

July 4, 2015

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!

திருச்சபையில் உள்ள ஒவ்வொரு விசுவாசியும், விசுவாசத்தில் வளரவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்” (எபி.11:6)ஆம் வசனத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் “…நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்” (மாற்.11:24). தேவனை நாம் முற்றிலும் விசுவாசிக்க வேண்டும் என்று விரும்புகிறார். எனவே ஜெபம் செய்யும்போது தேவனிடம் வேண்டிக்கொள்பவைகளை எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் கேட்டால் அதை அவர் நமக்குத் தர வல்லவராய் இருக்கிறார்.

ஆபிரகாமைக் குறித்து வேதத்தில் நாம் இவ்வாறு பார்க்கிறோம். ரோமர் 4:20,21 வசனங்களில் “தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான். ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது”

தேவனுடைய வார்த்தையை சந்தேகித்து, அதை விரோதமாய் நம்பப் பண்ணுவதே பிசாசின் தந்திரங்களில் பெரிய தந்திரம். ஆதி.3:4ஆம் வசனத்தில், “அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;” என்று தேவனின் வார்த்தைக்கு எதிராகக் கூறியது. மேலும் தேவனைக் காட்டிலும் நம்பக் கூடிய, நேசிக்கக்கூடிய, பாதுகாக்கக்கூடிய, உதவிசெய்யக் கூடிய ஒன்று உண்டு என்று நம்பப்பண்ணுகிறான் சாத்தான். பிசாசின் வார்த்தைகளை நம்புவது நம் வாழ்க்கையின் சறுக்கலான இடம்.

வேதத்திலிருந்து விசுவாசத்தில் வல்லவர்களாய் வாழ்ந்த சிலரைப் பற்றி ஆராய்ந்து பார்ப்போம்.

1) யோசேப்பு:

எபி.11:22ஆம் வசனத்தில் “விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்” ஏனெனில் தேவனின் வாக்குத்தத்தத்தை அவன் நம்பினான். தன் சுய தேசத்தில் பிதாக்களண்டையில் எலும்புகள் அடக்கம்பண்ணப்படக் கட்டளையிட்டான். கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி செய்யும்போது மட்டுமே பெலனுண்டு.

சங்.103:20ஆம் வசனத்தில், “கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள்” தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியும்போது மட்டுமே விசுவாசம் பெருகும். சங்.105:17-19ஆம் வசனங்களில், “அவர்களுக்கு முன்னாலே ஒரு புருஷனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான். அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது. கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.”

2) இஸ்ரவேல் ஜனங்கள்:

யாத்.17:3ஆம் வசனத்தில், “ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டுவந்தீர் என்றார்கள்” இஸ்ரவேல் ஜனங்களிடம் “அழிந்துபோவோம்” என்ற தோல்வியின் அறிக்கையே காணப்பட்டது. தேவன் வாக்குப்பண்ணியது, பாலும் தேனும் ஓடும் தேசம். நிச்சயம் கொண்டுபோய் சேர்ப்பார் என்ற விசுவாசம் இல்லை. யாத்.15:24ஆம் வசனத்தில், “அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள்.” இஸ்ரவேலர் சத்துருக்களின்மேல் வெற்றி, பார்வோனின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை, கற்பாறையிலிருந்து தண்ணீர் ஆகியவற்றை தேவன் தந்ததை மறந்துவிட்டார்கள். தேவன் தந்த ஆசீர்வாதங்களுக்காக அவருக்கு நன்றி செலுத்தி வேறே ஆவியுள்ள யோசுவா, காலேப்பை போல விசுவாசத்தில் வல்லவர்களாக மாறி கானானைச் சுதந்தரிக்க வேண்டும்.

3) பேதுரு:

மத்.14:31ஆம் வசனத்தில், “உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.” பேதுரு இயேசுவை நோக்கி “ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின்மேல் நடந்தான்.” கடந்து வா நான் உன்னோடு இருக்கிறேன் என்பதே தேவசத்தம். விசுவாசத்தினாலேயே மலை போன்ற பிரச்சனைகளைப் புரட்ட முடியும்.

4) சீஷர்கள்:

லூக்.12:29ஆம் வசனத்தில், “ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்” இவைகளை உலகத்தார் நாடித் தேடுகிறார்கள். இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார். எனவே தேவனுடைய அன்பை நாம் சந்தேகிக்கக்கூடாது. நாளைய தினத்தைக் குறித்து கவலைப்படாதே. தேவன் நம்மை முன்குறித்துள்ளார். அநாதி சிநேகத்தால் நம்மை சிநேகிக்கிறார். அவர் நம்மேல் அளவற்ற அன்புள்ளவர்.

5) ரூத்:

ரூத் 1:1ஆம் வசனத்தில், “…தேசத்திலே (இஸ்ரவேல்) பஞ்சம் உண்டாயிற்று; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான்” தேவன் நம்மை பஞ்சத்தால்,  பல சோதனைகள் மூலம் சோதிப்பார். நாம் விசுவாசத்தில் உறுதியாக நிற்க வேண்டும். தேவன் நம்மைக் கைவிடாமல் நடத்துவார் என்ற நம்பிக்கை தேவை. அவர் வல்லமையை சந்தேகிக்கக் கூடாது. நகோமியின் குடும்பம் சந்தேகப்பட்டு விசுவாசமில்லாமல் நிறைவாய் போய் குறையோடு பிள்ளைகள், புருஷனை இழந்து வந்தார்கள். இயேசுவைவிட்டு பின்மாற்றத்தில் சென்றால், எந்த நாட்டுக்குச் சென்றாலும் ஆசீர்வதிக்கப்பட முடியாது. ரூத் விசுவாசத்தில் உறுதியாய் இஸ்ரவேலின் தேவனின் செட்டைகளுக்குள் அடைக்கலமாக வந்ததால் ஆசீர்வதிக்கப்பட்டாள். இஸ்ரவேலின் கோத்திரங்களின் தலைமுறைப் பட்டியலில் மோவாபிய பெண் என்றாலும் இடம்பெற்றாள். தேவன்மேல் உறுதியான விசுவாசம் நமக்குத் தேவை.

6) தாவீது!

1சாமு.27:1ஆம் வசனத்தில், “பின்பு தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்துபோவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகும்படிக்கு…” பெலிஸ்தியர் தேசத்திற்குப் போய் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்று தன் இருதயத்தில் யோசித்து அதன்படி செயல்பட்டான். இஸ்ரவேலின் தேவன்மேல் உள்ள நம்பிக்கையை விட்டுவிட்டு, யூதாவின் எல்லைகளைவிட்டு விலகி பெலிஸ்தியரின் எல்லைக்குப் போனான். அதனால் இழப்புகள் வந்தன. தேவனுடைய பிள்ளைகள் தேவனையே துணையாக வைத்து, அவருக்கு முன் மன உண்மையும் உத்தமமுமாய் வாழவேண்டும்.

7) சாராள்:

ஆதி.18:13ஆம் வசனத்தில், “அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்?” என்றார். தேவன் சாராளுக்கு ஒரு பிள்ளை கொடுக்க வாக்குப் பண்ணியிருந்தார். எனவே வாக்குத்தத்தங்களைக் குறித்து சந்தேகப்படாமல் தேவனைத் துதித்து முன்னேறுவதையே தேவன் எதிர்பார்க்கிறார்.

அன்பு நண்பரே! தேவனுடைய வார்த்தைகள் உண்மையுள்ளவை, வல்லமையுள்ளவை. நாம் மனப்பூர்வமாய் விசுவாசித்தால் தேவ மகிமையைக் காண்போம். பேதுரு தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வலையைப் போட்டதால் வலை கிழியத் தக்கதாக மீன் கிடைத்தது. மரியாள் தேவனுடைய வார்த்தையை நம்பி, “இதோ நான் ஆண்டவருக்கு அடிமை” என்று ஒப்புக்கொடுத்ததால் தான் இயேசுவைப் பெற்றெடுக்கும் பாக்கியவதியானாள். விசுவாசத்தில் வல்லவர்களாக மாறி பரலோகம் செல்ல வாக்குத்தத்தங்களை நாம் விசுவாசித்து அதை விட்டுவிடாமல் உறுதியாகப் பிடித்துக்கொண்டு முன்னேறுவோம்! கர்த்தரின் கிருபை நம்மில் பெருகுவதாக! அல்லேலூயா!

Author

You May Also Like…

Share This