கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
பிரியமானவர்களே! கடைசி காலத்தில் வாழும் நாம் நமது ஆத்தும மணவாளனா கிய இயேசுகிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாக, கறை திரையற்ற மணவாட்டியாக காத்திருப்பது அவசியம். மணவாளன் வரும் நாளையாவது நாழிகையையாவது அறியாதிருக்கிறபடியால், விழித்திருந்து அவரது வருகைக்காக காத்திருக்க வேண்டும்.
“தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிற இவள் யார்?” என்று உன்னதப்பாட்டு 8:5ல் வாசிக்கிறோம். இந்த மணவாட்டி எங்கிருந்து வருகிறாள் என்பது மிக முக்கியமானது. இவள் வனாந்தரத்திலிருந்து வருகிறாள். வனாந்தரம் உஷ்ணம், வறட்சி உள்ள இடம்; குறைவு உள்ள இடம்; பயங்கர ஜந்துக்கள் நிறைந்த இடம்; நம்மை தேவன் உளையிடும் பாழ்நிலத்தில் கண்டுபிடித்து உணர்த்தி, கைதாங்கி நடத்தி, கண்மணி போல் காத்து வருகிறார். சிறுமையின் மத்தியில் தான் தேவன் தமது மணவாட்டியைத் தெரிந்துகொண்டார் (உபா.32:10; உபா.8:15). பெரிய பயங்கரமான வனாந்தர வழியாகவே தேவன் இஸ்ரவேலரை நடத்தி வந்தார் (உபா.1:19). நம்மை சோதிக்கவே வனாந்தர வழியாக நடத்துகிறார் (மத்.4:1). சோதனையை ஜெயித்தபின்பே கானானாகிய வெற்றி வாழ்வை சுதந்தரிக்க முடியும். வனாந்தர வாழ்வு ஒரு மனிதனுடைய வாழ்வில் நீடிப்பதற்குக் காரணம் கீழ்ப்படியாமையும் முறுமுறுப்புமேயாகும் (யாத்.16:2,3). ஓட முடிந்தவர்கள் வனாந்தரத்திலிருந்து ஓடி மீண்டும் எகிப்துக்குப் போய்விட்டார்கள். ஆனால் ஓட முடியாதவர்கள் இருதயத்தில் எகிப்திற்கு திரும்பிவிட்டார்கள்.
இயேசுகிறிஸ்து வனாந்தரத்திற்கு ஆவியானவராலே கொண்டு போகப்பட்டு பிசாசினால் சோதிக்கப்பட்டு ஜெயித்ததால் தான் பரலோகம் அவரை அங்கீகரித்தது. பெலிஸ்தியர் தேச வழியாய்ப் போவது சமீபமானாலும் தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல் சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியாக சுற்றிப்போகப் பண்ணினார். நாம் கெட்டுப்போகாதபடி, அமிழ்ந்துபோகாதபடி, யுத்தத்தில் வீழ்ந்து போகாதபடி நிலைநிறுத்தவே வனாந்தர பாதையில் நடத்துகிறார் (யாத்.13:17,18).
வனாந்தரத்திலேயே தேவ சத்தம் கேட்கிறது (மத்.3:1-3). குறைவுகள் மத்தியில்தான் தேவ சத்தம் ஒலிக்கிறது. நாம் மனந்திரும்பும்படி வனாந்தர பாதையில் நடத்துகிறார். இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவன் தமது அற்புத வல்லமையை வெளிப்படுத்தி பெரிய அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்த இடம்தான் வனாந்தரம். தேவன் பேச, அடையாளம் காட்ட, தம்மை வெளிப்படுத்த, அற்புதம் செய்ய காத்திருப்பதே வனாந்தர வாழ்க்கை. தேவன் இஸ்ரவேல் ஜனங்களை மன்னாவினால் போஷித்ததும் இந்த வனாந்தர வழியில்தான் (உபா.8:16). மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உணர்த்திய இடம்தான் வனாந்தரம் (உபா.8:3). பின்நாட்களில் நன்றாயிருக்கும்படியே வனாந்தர வழியில் நடத்துகிறார். வறட்சி, சிறுமை, தாகம், யுத்தம், கொடிய ஜந்துக்கள் போன்றவற்றை ஜெயித்து முன்னேற வனாந்திர வழியாக நடத்துகிறார் (உபா.8:2).
கிறிஸ்துவின் மணவாட்டி, தன் ஆத்தும நேசரையே முற்றிலும் சார்ந்துகொண்ட மணவாட்டி. “தன் நேசர் மேல் சார்ந்துகொண்டு” என்று உன்னதப்பாட்டு 8:5ல் வாசிக்கிறோம்.
தேவனை நாம் எப்படி சார்ந்துகொள்ள வேண்டும்?
* தகப்பனைச் சார்ந்துகொள்ளும் மகனைப் போல்
* தாயைச் சார்ந்துகொள்ளும் பாலகனைப் போல்
* குருவுக்கு கீழ்ப்படிந்து சார்ந்துகொள்ளும் சீஷனைப் போல்
* மணவாளனைச் சார்ந்துகொள்ளும் மணவாட்டியைப் போல்
* எஜமானனைச் சார்ந்துகொள்ளும் அடிமையைப் போல் தேவனைச் சார்ந்துகொள்ள வேண்டும்.
ஏன் தேவனைச் சார்ந்துகொள்ள வேண்டும்?
முதலாவதாக – தேவனைச் சார்ந்துகொண்டால்தான் இரட்சிப்பு உண்டாகிறது.
இரட்சிப்பு கர்த்தருடையது. சிலுவையில் அறையப்பட்ட இரண்டு கள்ளர்களில் ஒருவன் கடைசி தருணத்தில் தேவனைச் சார்ந்துகொண்டு இரட்சிக்கப்பட்டான். தேவனைச் சார்ந்துகொள்ளா விட்டால் பாவ இருள் நம்மைப் பற்றிக்கொள்ளும். பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட தேவனை முழுமையாய் சார்ந்துகொள்ள வேண்டும்.
இரண்டாவதாக – தேவனைச் சார்ந்துகொண்டால்தான் விடுதலை (2கொரி.3:7)
நாம் விடுவிக்கப்படும்படி தேவனைச் சார்ந்துகொள்ள வேண்டும். நாம் ரதத்தையோ, குதிரையையோ சார்ந்து கொள்ளக் கூடாது. தேவனுக்கும், நமக்கும் நெருங்கிய உறவு இருந்தால் விடுதலை நிச்சயம். தேவனைவிட்டு விலகி பொருத்தனைகளை உடைத்த சிம்சோன் “எப்போதும் போல் உதறிப்போட்டு வெளியே போவேன்” என்று சொன்னபோது அவனால் எழுந்துபோக முடியவில்லை (நியா.16:20,21). கர்த்தரைச் சார்ந்து கொண்ட நீதிமானை எல்லா துன்பங்களினின்றும் தேவன் விடுவிக்கிறார் (சங்.34:19).
மூன்றாவதாக – தேவனைச் சார்ந்துகொண்டால்தான் போஷிக்கப்பட முடியும்
இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திரத்தில் போஷிக்கப்பட தேவனைச் சார்ந்திருப்பது அவசியமாயிற்று. தேவன் இஸ்ரவேலரை நாற்பது வருடங்கள் வனாந்திரத்தில் போஷித்தார் (யாத்.16:8). ஆனால் வணங்கா கழுத்துள்ள இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய உடன்படிக்கையை மறந்தார்கள். தங்களை பராமரித்த தேவனை மறந்தார்கள். நாம் நம்மை போஷிக்கும் தேவனை ஒருபோதும் மறக்கக்கூடாது.
நான்காவதாக – தேவனைச் சார்ந்துகொண்டால் தேவனின் பாதுகாப்பு நமக்கு உண்டு (சங்.91:1,2,3)
அவர் நமது கோட்டை, அரண், அடைக்கலம். தேவன் விலகினால் தேவ பாதுகாப்பு நம்மைவிட்டு எடுபடும். நிலையற்ற இந்த உலகில் நிலைவரமற்ற இந்த வாழ்க்கையில் பாதுகாப்புக்காக அனுதினமும் தேவனைச் சார்ந்துகொள்வது எத்தனை அவசியம்.
ஐந்தாவதாக – தேவனைச் சார்ந்து ஜீவிக்கும்பொழுது தேவன் நமக்காக யுத்தம் செய்வார்; நாம் சும்மாயிருப்போம் (யாத்.14:14)
முன்னால் செங்கடல்; பின்னால் பார்வோனின் சேனை; பயந்துபோன இஸ்ரவேலருக்கு நமது ஊழியக்காரன் மூலம் தேவன் கொடுத்த வாக்குதான், “கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார், நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” என்பது. எப்பக்கமும் நெருக்கத்தில் இருக்கும் தேவ பிள்ளையே நீ கலங்காதே, கர்த்தர் உனக்காக யுத்தம் பண்ணுவார். தேவனை மாத்திரம் சார்ந்துகொள். அவர் உன்னை விடுவிப்பார்.
ஆறாவதாக – தேவனைச் சார்ந்துகொள்ளும்போது, தேவன் நமக்கு பாதை காட்டுகிறார் (யாத்.13:21)
இரவும் பகலும் இஸ்ரவேல் ஜனங்கள் வழிநடக்கும்படி கர்த்தர் பகலில் மேக ஸ்தம்பமாகவும், இரவில் அக்கினி ஸ்தம்பமாகவும் அவர்களுக்கு முன் சென்று வழிகாட்டினார். தேவ ஜனங்கள் தேவனைச் சார்ந்துகொள்ளும்போது அவர்களுக்கு வழிகாட்டுகிறார். தேவனின் இதயத் துடிப்பை கேட்க அவர் மார்பில் சார்ந்துகொள்ள வேண்டும். “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்” என்று சங்கீதம் 32:8ல் தேவன் நமக்கு வாக்குக் கொடுக்கிறார். தேவனைச் சார்ந்து அவரால் வழிநடத்தப்படும்போது அவரைப் போல் பரிசுத்தமாகிறோம்.
ஏழாவதாக – தேவனைச் சார்ந்துகொள்ளும்போது தேவன் நமக்கு ஜெயத்தைக் கொடுக்கிறார் (1கொரி.15:57)
தேவனாலே முற்றும் முடிய ஜெயம் கொண்டால்தான் பரலோக ராஜ்யத்தில் அவரோடு பங்குகொள்ள முடியும். தேவனைச் சார்ந்துகொள்ளும்போது சத்துருவை மேற்கொள்ளும் அதிகாரத்தைக் கொடுக்கிறார்.இரட்சிக்கப்பட்டு, விடுதலையடைந்து, தேவனால் வழிநடத்தப்பட்டு, தேவ பாதுகாப்பு பெற்று, நமது அனுதின தேவைகள் சந்திக்கப்பெற்று, சத்துருவை ஜெயித்து முற்றும் ஜெயம்கொள்ள தேவனைச் சார்ந்துகொள்வோமாக.
வனாந்திர வாழ்க்கையா, கலங்காதிருங்கள். உங்களை முற்றும் முடிய இரட்சிக்க வல்ல தேவன் உங்களோடு இருக்கிறார். அவரை மாத்திரம் சார்ந்துகொள்ளுங்கள்!