பின்மாற்றம் கொடியது

Written by Pr Thomas Walker

October 4, 2020

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
பிரியமானவர்களே! இன்று நமது ஆவிக்குரிய பயணத்தை அநேக மனிதர்கள் தடை செய்கிறார்கள். அநேக சூழ்நிலைகள் தடை செய்கிறது. ஆபிரகாம் நித்திய அஸ்திபாரமுள்ள நகரத்துக்காக காத்திருந்தான். அதை நோக்கி பயணமானான் (எபி.11:8-15). இஸ்ரவேல் புத்திரர் எகிப்தை விட்டு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்தை நோக்கிப் பயணமானபோது புருஷரின் எண்ணிக்கை மட்டும் ஆறு இலட்சமாயிருந்தது. ஸ்திரீகளையும் புருஷரையும் குழந்தைகளையும் சேர்த்து கணக்கிட்டால் ஏறக்குறைய 30 இலட்சம் பேர் பயணப்பட்டிருப்பார்கள். அவர்கள் அனைவரும் வனாந்தர வழியாய் சென்றபோது மோசேக்கு விரோதமாக முறுமுறுத்து எகிப்து தேசத்திலேயே இருந்தோமானால் நலமாயிருக்கும் என்றார்கள் (யாத்.16:3). எகிப்திலே இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கடினமான வேலை, சவுக்கினாலே அடிக்கப்பட்டார்கள், பிள்ளைகள் ஆற்றில் தூக்கிப் போடப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். ஆனாலும் அவர்கள் எகிப்தை விரும்பி தங்கள் இருதயத்திலே எகிப்துக்குத் திரும்பினார்கள்.

எப்படி பின்மாற்றமடைவார்கள்?
1. தேவனை விட்டு விலகுகிறவர்கள் பின்மாற்றமடைகிறார்கள்
2. தங்கள் கோணலான வழிகளுக்கு சாய்கிறவர்கள் தேவனைவிட்டுப் பின்மாற்றமடைகிறார்கள் (சங்.125:5)
3. சாத்தானைப் பின்பற்றுகிறவர்கள் தேவனைவிட்டுப் பின்மாற்றமடைகிறார்கள் (1தீமோ.5:15)
4. இப்பிரபஞ்சத்தின் மேல் ஆசை வைக்கிறவர்கள் தேவனைவிட்டுப் பின்மாற்றமடைகிறார்கள் (2தீமோ.4:10)
5. ஆதியில் கொண்டிருந்த அன்பு குறையும்போது தேவனைவிட்டுப் பின்மாற்றமடைகிறார்கள் (வெளி.2:4)
6. கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விட்டு வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறவர்கள் தேவனைவிட்டுப் பின்மாற்றமடைவார்கள் (கலா.1:6,7)
7. விசுவாசத்தை விட்டு விலகுகிறவர்கள் பின்மாற்றமடைவார்கள் (1தீமோ.6:10)

1. தேவனை விட்டு விலகுகிறவர்கள் பின்மாற்றமடைகிறார்கள்
சாத்தான் தேவனைவிட்டு நம் இருதயத்தை திருப்புவான். இஸ்ரவேல் ராஜாவாகிய சாலொமோன் தேவ எச்சரிப்பு பெற்றும் அந்நிய தேவர்களைப் பின்பற்றினான். அவன் கர்த்தரை விட்டு தன் இருதயத்தைத் திருப்பினான் என்று 1இராஜா.11:9ல் பார்க்கிறோம். சாலொமோனின் மனைவிகள் அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி அவனை வழுவிப்போகப் பண்ணினார்கள். அதனால் சாலொமோன் தன் கடைசி காலத்தில் தேவனின் வார்த்தையின்படி நடவாமல் பின்வாங்கினான். மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்பே கிறிஸ்தவ தேவாலயங்கள் சிலைகளால் நிரப்பப்பட்டது. திருச்சபைகள் பின்மாற்றத்திற்குள்ளானது. கர்த்தரையே தெய்வமாகக் கொண்டிருக்க வேண்டிய இஸ்ரவேலர் அநேகமுறை அந்நிய தேவர்களை பின்பற்றி சோரம் போனார்கள். தேவனைவிட்டு விலகும் பொல்லாத இருதயம் நமக்கு வராதிருக்க தேவ கிருபைக்காக காத்திருப்பது அவசியம்.

2.தங்கள் கோணலான வழிகளுக்கு சாய்கிறவர்கள் தேவனைவிட்டுப் பின்மாற்றமடைகிறார்கள் (சங்.125:5)
நமது ஒவ்வொரு செய்கையையும் தேவன் கவனிக்கிறார். ஒருவர் தனது பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பிவிட்டார் என்றால் அவரது கிரியைகள் மூலம் அதை அறிந்துகொள்ளலாம் (யோனா 3:10). நினிவே ஜனங்கள் கோணலான வழியிலே நடந்து தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள். யோனாவினால் பிரசங்கிக்கப்பட்ட மனந்திரும்புதலின் செய்திக்கு செவிகொடுத்து இரட்டுடுத்தி சாம்பலிலே உட்கார்ந்து மனந்திரும்பினார்கள். தேவன் அவர்கள்மேல் சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டார். கோணலான வழிகளுக்கு சாய்கிறவர்கள் துர்க்கிரியைகளுக்கு இணங்குவார்கள். பின்பு துர்க்கிரியைகளைச் செய்வார்கள். தங்கள் வழிகளை கோணலாக்கிக் கொண்டவர்கள் சமாதானத்தை அறியார்கள் (ஏசா.59:8).

3.சாத்தானைப் பின்பற்றுகிறவர்கள் தேவனைவிட்டுப் பின்மாற்றமடைகிறார்கள் (1தீமோ.5:15)
சாத்தானைப் பின்பற்றுகிறவர்கள் முதலாவது சாத்தானின் சத்தத்தைக் கேட்பார்கள். பின்புதான் பின்வாங்குவார்கள், சாத்தான் தந்திரமாக மக்களைத் தன் பக்கம் திருப்புவான். இந்த உலகத்தில் வாழும் மக்கள், பல சத்தங்களுக்குச் செவிகொடுக்கிறார்கள். தேவன் விரும் பாத பல இடங்களுக்குப் போகிறார்கள். அதனால் தேவ சித்தத்துக்கு மாறான காரியங்களைச் செய்கிறார்கள். எப்பொழுதும் தேவ சத்தத்தைக் கேட்கிற பிள்ளைகளாய் நாம் இருக்க வேண்டும். மேய்ப்பரின் சத்தத்தை அறிந்த ஆடுகள் அவனுக்குப் பின்செல்கிறது. அந்நிய சத்தத்தை அறியாதபடியினால் அவைகளுக்குப் பின்செல்லாமல் அதைவிட்டு ஓடிப்போகிறது (யோவான் 10:4,5). தேவ சத்தத்தை அறிய அவர் பாதத்தில் அமர்ந்து காத்திருப்பது அவசியம்.

4.இப்பிரபஞ்சத்தின் மேல் ஆசை வைக்கிறவர்கள் தேவனைவிட்டுப் பின்மாற்றமடைகிறார்கள் (2தீமோ.4:10)
உலக ஆசை, பொருளாசை மேற்கொள்ளும்போது தேவனைவிட்டு விலகுகிறோம். மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமையாகிய உலகத்திலுள்ளவைகளை விட்டு நம்மை விலக்கிக் காத்துக்கொள்ள வேண்டும் (1யோ.2:15,16). இப்பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷத்தை நாம் தரிக்கக்கூடாது (ரோ.12:2). உலக சிநேகம் நம்மை தேவனுக்கு விரோதியாக மாற்றுகிறது (யாக்.4:4). இந்தப் பிரபஞ்சம் கவர்ந்து கொள்ளும்போது தேவனைவிட்டுப் பின்வாங்குகிறோம். உலகத்தை வெறுத்து நாம் தேவனை முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு மனதோடும் நேசிக்க வேண்டும்.

5.ஆதியில் கொண்டிருந்த அன்பு குறையும்போது தேவனைவிட்டுப் பின்மாற்றமடைகிறார்கள் (வெளி.2:4)
தேவ அன்பு இல்லையென்றால் தேவனைவிட்டு பின்வாங்குகிறோம். எல்லாம் செய்தும் தேவ அன்பு இல்லாமல் இருக்க முடியும். தேவ அன்பு கொண்டவன் தேவ கற்பனைகளைக் கைக்கொள்ளுவான், சகோத ரனைப் பகைக்கமாட்டான், ஆத்தும பாரம் உள்ளவனாக இருப்பான். எபேசு சபையில் ஒன்பது நற்கிரியைகள் காணப்பட்டது. ஆனாலும் தேவனை நேசிப்பதில் குறைவுபட்டிருந்தார்கள். தேவன்மேல் வைக்கும் அன்பு நமக்கு இருக்குமானால் எல்லாவற்றையும் சகிக்க, தாங்க, மன்னிக்க முடியும். தேவனை நேசிப்பது வேறு, தேவனை பாராட்டுவது வேறு. நாம் உண்மையாய் தேவனை நேசிக்கிறோமா? நாம் வளர்க்கும் நாயிடம் பூனையிடம் பிள்ளைகளிடம் அன்பை எதிர்பார்க்கிறோம். தேவன் நம்மை உண்டாக்கி தம்மை நேசிப்பதையே எதிர்பார்க்கிறார். தேவ அன்பை விட்டுப் பவுலை எந்த உபத்திரவமும் பிரிக்க முடியவில்லை (ரோ.8:36). நாமும் எந்த சூழ்நிலையிலும் ஆதியில் கொண்டிருந்த தேவ அன்பிலிருந்து குறைவுபடக்கூடாது.

6.கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விட்டு வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறவர்கள் தேவனைவிட்டுப் பின்மாற்றமடைவார்கள் (கலா.1:6,7)
கிறிஸ்துவின் சுவிசேஷம் சரியான முறையில் முழுமையாகப் பிரசங்கிக்கப்பட வேண்டும். பவுல் பூரண சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். பல சுவிசேஷங்கள் இன்று நமக்கு பிரசங்கிக்கப் படுகிறது. நாம் கவனமாயிருக்க வேண்டும். நரகம் கிடையாது, கிறிஸ்து ஏற்கனவே வந்துவிட்டார், சனிக்கிழமை ஓய்வுநாள், யெகோவா சாட்சிகள், இயேசு ஒருவரே தெய்வம், திரித்துவ தெய்வம் இல்லை போன்ற நூதனமான உபதேசங்கள் பரவி வருகின்றன. ஆவியில் ஆரம்பம் பண்ணின நாம் பின்பு மாம்சத்தில் முடிப்பது பின்மாற்றமே (கலா.3:3). நான்கு சுவிசேஷங்களில் சொல்லப்படாத பிற காரியங்களை நாம் பேசவோ பிரசங்கிக்கவோ கூடாது.

7.விசுவாசத்தை விட்டு விலகுகிறவர்கள் பின்மாற்றமடைவார்கள் (1தீமோ.6:10)
தேவனை முற்றிலும் சார்ந்திருப்பதுதான் விசுவாசம். அதிகாரிகளை சார்ந்துகொள்வது, பரிகாரிகளை சார்ந்துகொள்வது, பணத்தை சார்ந்துகொள்வது, மனிதர்களை சார்ந்துகொள்வது விசுவாசத்துரோகம். தேவனை விசுவாசிக்காமல் இருதயத்தில் எகிப்தைத் தேடுவது பின்மாற்றமே. தேவனை விசுவாசிக்காமல் ஜனங்கள் குறி பார்ப்பது, போலியான அற்புத அடையாளங்களை நாடி ஓடுவது போன்றவற்றில் நம்பிக்கை வைத்து தேவனைவிட்டு பின்வாங்குகிறார்கள், சபைகள் பல உபதேசங்களுக்கு செவிகொடுத்து பின்வாங்குகிறது. நாடுகள் தேவனைவிட்டு அந்நிய தேவர்களை நாடி பின்வாங்குகிறது.


கடைசியாக நாம், பின்வாங்கி உப்புத் தூணாக மாறிய லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ள வேண்டும் (லூக்.17:32). விட்டு வந்த காரியங்களை நினைக்காமல் அவற்றைக் குப்பையாக எண்ண வேண்டும். பின்மாறினாலும் தங்கள் பாவ வழிகளை விட்டுத் திரும்பி தேவ இரக்கத்தைப் பெற்ற தாவீது, பேதுரு போன்றவர்களை நினைத்துக்கொள்ள வேண்டும். நாம் எவற்றில் தேவனைவிட்டுப் பின்வாங்கியுள்ளோம் என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து அவைகளை விட்டு மனந்திரும்பி நமது ஆவிக்குரிய பயணத்தைத் தொடருவோமாக. தேவன் தாமே, அதற்கு வேண்டிய கிருபைகளை நமக்குத் தருவாராக!






Author

You May Also Like…

Share This