கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
செங்கடலைக் கடந்த இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரு டைய சந்நிதிக்கு முன்பாக யுத்த சன்னத்தராய் கடந்து போய்க்கொண்டிருக்கையில், கர்த்தரின் கட்டளைப் படியே மீதியானியரை முறியடித்தார்கள். யோர்தானுக்கு இக்கரையிலே யுத்தத்தில் கொள்ளையிட்டப் பொருட் களைக் கர்த்தர் கட்டளையிட்டபடியே பங்கிட்டு மோசேயும் எலேயாசாரும் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள். அப்பொழுது ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் தங்களுக்கு ஆடு, மாடுகள் மிகவும் திரளாயிருந்தாலும், யாசேர் தேசமும் கிலேயாத் தேசமும் ஆடு மாடுகளுக்குத் தகுந்த இடம் என்று தாங்கள் கண்டதாலும் மோசேயிடம் வந்து இந்த நாடானது எங்கள் ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமாக இருப்பதால் இந்த நாட்டை உமது அடியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். மோசே பிரதியுத்தரமாக “உங்கள் சகோதரர் யுத்தத்திற்குப் போகையில், நீங்கள் இங்கே இருப்பீர்களோ? கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடிக்கு, நீங்கள் அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணுகிறதென்ன?” என்றான் (எண்.32:1-7)
இன்றைய ஆவிக்குரிய பயணிகளின் வட்டத்திலேயும் இந்நிலையையே காண்கிறோம். தேவ ஊழியர்களில் சிலர் சிறிது காலம் மட்டும் சிரமங்களை அனுப வித்தபின், தங்களுக்கு ஏற்ற வசதிகள், நல்ல சீதோஷ்ணநிலை, நல்ல ஜனங்கள், நல்ல வருமானம், நல்ல சௌகரியங்கள் என்று தாங்கள் காண்கிற இடங்களைத் தங்களுக்குத் தெரிந்துகொண்டு அங்கே தங்கிவிட தீர்மானிக்கிறார்கள். இது தேவன் அனுமதிக்கும் இடம்தானா? என்று சிந்திப்பதில்லை. இவ்வுலக வசதிகளைக் கொண்டு ஏற்ற இடம் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. இன்று ஊழிய ஸ்தலங்களையும் பலவித வசதிகளை வைத்து முடிவு கட்டுகின்றனர். தேவன் அனுப்பும் இடமா? என்று நினைப்பதில்லை.
தேவன் லோத்தைப் பார்த்து, “நீ மலைக்கு ஓடிப்போ” என்றார். அவனோ, “மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன். அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அதற்கு ஓடிப்போகத் தக்கதாய் அது கிட்ட இருக்கிறது, சின்னதுமாய் இருக்கிறது; என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே என்றான்” (ஆதி.19:17-20). லோத் கேட்டுக்கொண்டபடியே அங்கே போக தேவன் அனுமதித்தாலும், தேவ சித்தத்தை லோத் செய்ய வில்லை. தனது சித்தத்தையே செய்தான் என்று காண்கிறோம்.
“…அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், அவர்கள் ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார்” (சங்.106:15) என்றபடி வசதிகள் பல இருந்தும் மெய் சந்தோஷமில்லாதவர்கள் எத்தனை பேர். வசதிகளை வைத்து நாம் தங்கும் இடங்களை முடிவுகட்டவே கூடாது. ஊழியர்களுக்கும், விசுவாசிகளுக்குமே இது பொதுவான விதி தான். தேவன் நமக்கு குடியிருக்கும் எல்லையைக் குறித்திருக்கிறார். நாம் அதைக் கண்டுகொள்வதே சாலச் சிறந்தது.
இரண்டாவதாக ரூபன் புத்திரர், காத் புத்திரர், மனாசே யின் பாதி கோத்திரமாகிய இரண்டரைக் கோத்திரத்தாரும் யோர்தானுக்கு இப்புறத்திலேயே சுதந்தரம் கேட்டார்கள். இது இரண்டு காரியங்களை நமக்குத் தெரிவிக்கிறது.
1. தங்களுக்கேற்ற இடத்தைத் தேடினார்களே ஒழிய அதற்கேற்ற காலத்தை அறியவில்லை. “ஏற்ற காலம்” என்பது எல்லாரும் சுதந்தர வீதங்களைப் பெறும் காலமே. கானானிலுள்ள எல்லா சத்துருக்களையும் இன்றும் முற்று மாக முறியடிக்கவில்லை. “…ஏற்ற காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்” (1பேதுரு 5:6) என்று பேதுரு கூறுகிறார்.
2. “ஏற்ற காலம்” என்பது யோர்தானைக் கடந்து பல வெற்றிக் கொடிகளைக் காட்டிய பின்பே கிடைக்கும். யோர்தானுக்கு இக்கரை என்று சொல்லும்போது பெறவேண்டிய அனுபவங்களை அடையுமுன்பே உயர்வையும் வசதிகளையும் நாடுவது ஆகும். யுத்தங்கள் எல்லாம் ஓய்ந்த பின்பு நமக்கு நிச்சயமாய் நமது சுதந்தரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை யில்லாமல், இது நல்ல இடம் நாம் இதை முதலில் பற்றிக்கொள்ள வேண்டும், விட்டுவிடக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. நல்ல வசதிகளைத் தேடுகிறதைக் காணலாம். மற்றவர்களைக் குறித்த கவலையில்லாமல் போய்விடுகிறது. “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவை களையும் நோக்குவானாக” (பிலி.2:4) என்றே வேதம் கூறுகிறது.
மேலும், இந்த இரண்டரைக் கோத்திரத்தார், தங்களுக்கு இந்த இடத்தைத் தற்காலிகமாக கேட்கவில்லை. “காணியாட்சியாக” கேட்டார்கள் என்பது கவனிக்கத் தக்கது. “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலி ருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” (பிலி.3:20) என்ற பவுலின் வார்த்தையை நினைவில் கொள்வோம். ஆபிரகா மைப் போல நாம் பரதேசியாய் சஞ்சரிக்காவிட்டால் நமது ஆத்தும தரிசனம் கெட்டுப் போகும். வசதியற்ற இடங்களிலேயும் தேவனுக்காய் ஊழியம் செய்யவும், தேவ அழைப்பில் நிலை நிற்கவும் முன்வருவோம். சபையைக் கட்டுகிறவர் கர்த்தரே. உருவாக்குவதில் பெரும் பங்கு ஆவியானவருக்கே. “கால் மிதிக்கும் இடத்தை தேவன் தருவார்” என்ற வாக்குத்தத்தத்தைத் தவறாக வியாக்கியானம் செய்கிறார்கள் சிலர். கால் மிதிக்கும் இடத்தை, ஆண்டவருக்காக, அவர் இராஜ்ஜியத்தின் மேன்மையைக் கருதி கேட்க வேண்டும். நமது சொந்த நன்மையைக் கருதியல்ல.
மோசே இந்த இரண்டரைக் கோத்திரத்தாரைப் பார்த்து “உங்கள் சகோதரர்கள் யுத்தத்துக்கு போகும்போது நீங்கள் இங்கே இருப்பீர்களோ? கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்துக்குப் போகாதபடி திடனற்றுப் போகப் பண்ணுகிறதென்ன?” என்றான். அந்த நல்ல தலைவனாகிய மோசே, இந்த இரண்டரைக் கோத்திரத்தார் செய்யும் இந்த காரியம், மற்ற ஒன்பதரைக் கோத்தி ரத்தாரைப் பாதிக்கும் என்பதை அறிந்திருந்தான். ஆவிக்குரிய போராட்டங்களிலும் அநேகர் தங்களுக்கு சில வசதிகள் உண்டானபின் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட விரும்புவதில்லை. நல்ல போர்ச் சேவகனாக தீங்கு அனுபவிக்க மனதில்லாமல் ஓய்வை விரும்புகிறார்கள். ஆரம்பத்தில் நன்றாக ஓடினவர்கள்தான், சில வசதிகள் வந்தபின் தொடர்ந்து ஓட்டத்தில் ஓட மனதில்லை. இவர்களது இந்த மாற்றமானது, மற்றவர்களைச் சோர்வுறச் செய்கிறது. தங்களுக்கு வசதிகள் வந்தபின் மற்றவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் போகிறதைக் காண்கிறோம். மோசே, இவர்களிடம் மற்றவர்களைத் திடனற்றுப் போகப் பண்ணுகிறதென்ன? என்று கேட்டார்.
இந்த இரண்டரைக் கோத்திரத்தாரும் மோசேயிடம், “நாங்களோ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் ஸ்தானத்திலே கொண்டுபோய்ச் சேர்க்குமளவும், யுத்த சன்னத்தராய்த் தீவிரத்தோடே அவர்களுக்கு முன்பாக நடப்போம்; எங்கள் பிள்ளைகள் இத்தேசத்துக் குடிகளினிமித்தம் அரணான பட்டணங்களிலே குடியிருக்கக் கேட்டுக்கொள்ளுகிறோம். இஸ்ரவேல் புத்திரர் யாவரும் தங்கள்தங்கள் சுதந்தரத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் வரைக்கும், நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்புவதில்லை” என்று உறுதிமொழி கொடுத்தார்கள் (எண்.32:17-18). மோசே இவர்களது உள்ளத்தின் ஆழமான நல்ல உறுதியையும், தங்கள் சகோதரர்களுக்காக போராடும் மனப்பான்மை யையும் கண்டு, இவர்கள் கேட்டபடி அந்த தேசத்தைக் கொடுத்தான். நல்ல வசதியைப் பெற்ற இரண்டரைக் கோத்திரத்தாரும், தொடர்ந்து யுத்த சன்னத்தராய் தீவிரத் தோடே, யாவரும் தங்கள் தங்கள் சுதந்தரத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரை, தங்கள் சகோதரர்களோடே யுத்த சன்னத்தராய் நடந்தார்கள்.
தேவன் ஆவிக்குரிய யுத்தத்தில் போராடுகிற நம்மிடம் இதையே விரும்புகிறார். இந்த இராஜ்ஜியத்தின் சுவிசேஷம் உலகமெங்கும் பரவும் வரையில் நல்ல போர்ச் சேவகராகவே இருக்க விரும்புகிறார். தேவன் தமது இராஜ்ஜியத்திற்காய் போர் செய்ய ஸ்தானாதிபதிகளாய் அனுப்பும், ஒவ்வொருவரையும் அவரவர் ஸ்தானத்தில் கொண்டு போய் சேர்க்கும்வரை, ஓய்வில்லாமல் தீவிரமாய் உறுதியுடன் போர்செய்யும் நல்ல போர்ச் சேவகராக செயல்படவே விரும்புகிறார். இரண்டரைக் கோத்திரத்தாரும் தங்கள் தங்கள் சுதந்தரத்தைச் சுதந்தரிக்க எவ்விதம் தீவிரமாய்ப் போராடினார்களோ அவ்விதமாகவே மற்ற ஒன்பதரைக் கோத்திரத்தாருடன் சேர்ந்து அவர்கள் சுதந்தரத்தை அவர்கள் சுதந்தரிக்க தீவிரங்காட்டி உறுதியுடன் போராடினார்கள்.
தேவ பிள்ளைகள் ஒவ்வொருவரும் தேவன் விரும்பும் ஸ்தானத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் வரை, அவர்களுக்காய் ஜெபிப்போம், கொடுப்போம், செயல் படுவோம். ஊழியங்களில் இன்னும் வசதிகளைப் பெறாத ஊழியக்காரர்கள் அநேகர் உண்டு. நமது போராட்டங்களிலே நாம் ஜெயித்த இராஜாக்கள் கொஞ்சம் பேர்தான். இன்னும் ஜெயிக்க வேண்டியவர்கள் அநேகர் உண்டு. நாம் நமக்காய் சுதந்தரித்த இடம் மிகவும் கொஞ்சம் தான். இன்னும் சுதந்தரிக்க வேண்டிய இடம் பெரிதும் விஸ்தாரமுமாயிருக்கிறது. முறியடிக்கப்பட வேண்டிய முக்கியமான இராட்சதர்கள் மூவர் உண்டு. உலகம், மாமிசம், பிசாசு. வெற்றியின்மேல் வெற்றி, மகிமையின் மேல் மகிமை, அதற்குப் பின் வருவதே சுதந்தரம். நாம் தெரிந்துகொள்வதல்ல. தேவனே தெரிந்தெடுத்துக் கொடுப்பது. யோர்தானுக்கு இப்புறத்தில், நாம் சுதந்தரிக்கப் போகிற தேசத்தின் ஒரு சிறு முன் ருசியையே காணமுடியும். ஆனால் யோர்தானுக்கு அப்புறத்திலோ, சுதந்திரத்தின் மேன்மையை முழு அளவில் காண முடியும். யோர்தானின் இப்புறத்தைக் காட்டிலும் அப்புறத்திலேயே வெட்டாத கிணறுகளும், கட்டாத வீடுகளும், நடாத திராட்ச தோட்டங்களும் ஏராளம் உண்டு. உண்மையான கானான் தேசத்தின் சிறப்புகளை அங்கே காணலாம். அதுவே பாலும் தேனும் ஓடும் தேசமாகும். முந்தின இரசத்தின் ருசியைக் காட்டிலும், பிந்தின ரசத்தின் ருசி உயர்ந்தது.