கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
சபையில் குடும்பம் முக்கியம். குடும்பங்கள் நன்றாக இருந்தால்தான் சபை பரிசுத்தமாக இருக்கும். நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் (யோசுவா 24:15) என்ற உறுதிமொழியுடன் வாழ்ந்த குடும்பம் யோசுவாவின் குடும்பம். பெற்றோர், பிள்ளை களை கர்த்தருக்காக வளர்க்க வேண்டும். பிள்ளைகளை நடத்த வேண்டிய வழியிலே நடத்த வேண்டும். அப்பொழுதுதான் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட முடியும். வேதாகமத்தில் கூறப்பட்ட சில குடும்பங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
1. ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க அழைக்கப்பட்டிருந்தும் கஷ்டத்தை அனுபவித்த குடும்பம்
2. உலக ஆசீர்வாதங்களுக்காக இரட்சகரை விற்றுப்போட்ட குடும்பங்கள்
3. உணர்வற்ற குடும்பங்கள்
4. தேவ பிள்ளைகளை பகைக்கிற குடும்பங்கள்
5. ஆகாத சம்பாத்தியத்தினால் தங்களுக்கு சாபத்தைக் குவித்துக் கொள்ளும் குடும்பங்கள்
6. தேவனுக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுக்காமல் வஞ்சித்து வைக்கும் குடும்பங்கள்
7. பிரதிஷ்டை ஜீவியமுள்ள குடும்பங்கள்
1. ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க அழைக்கப்பட்டிருந்தும் கஷ்டத்தை அனுபவித்த குடும்பம் (ஆதி.42:1,2)
விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமையும், அவன் குமாரனாகிய ஈசாக்கையும் தேவன் ஆசீர்வதித்தார். ஈசாக்கின் மகனாகிய யாக்கோபு தேவனுடைய ஆசீர்வாதத்தையும் தன் தகப்பனுடைய ஆசீர்வாதத்தையும் பெற்றவன். பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தை சுதந்தரிக்கும்படி அழைக்கப்பட்டவன். ஆனால் அவனும் அவன் குடும்பத்தாரும் கொடிய பஞ்சத்தால் அவதிப்பட்டார்கள். தங்களுக்கு ஏன் இந்தக் கஷ்டம் வந்தது என்று யாக்கோபின் குமாரர் சிந்திக்கவில்லை. யாக்கோபின் புத்திரர் தங்கள் சகோதரனாகிய யோசேப்பை அந்நியர் கையில் விற்றுப்போட்டார்கள். ஆனால் அவர்கள் தங்கள் தகப்பனாரிடம் அவன் மரித்துப் போனதாக ஒருமித்து பொய் கூறினார்கள். யாக்கோபின் புத்திரர் பாவத்தை மறைக்க ஒத்துப் போனார்கள். இதுவே அவர்கள் ஆசீர்வாதத்திற்கு தடையாக இருந்தது. எகிப்திலே இருக்கும் இரட்சகன் அவர்கள் சகோதரன்தான் என்பதை உணர்ந்துகொள்ள முடியவில்லை. தேவனுக்கும் நமக்கும் நடுவில் பாவம் இருப்பதால் தேவனிடம் நம்மால் உரிமையோடு போக முடியவில்லை. கொள்ளை நோயோ, பஞ்சமோ, அந்தகாரமோ, தேவ பிள்ளைகளை தேவன் நடத்தும் விதமே அற்புதமானது. அதிசயமானது. பஞ்சத்தால் தமது ஜனங்களை போஷிக்க ஒரு இரட்சகனை எகிப்திலே ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார். நம் தேவன், எபிரேயருக்கும் எகிப்தியருக்கும் வித்தியாசத்தை உண்டுபண்ணும் தேவன்.
அப்பத்தின் வீடாகிய பெத்லகேமிலே இருந்த எலிமெலேக்கின் குடும்பம் பஞ்சம் வந்தபோது தேவன் தங்களை போஷிக்க வல்லமையுள்ளவர் என்பதை அறிந்தும் மோவாபுக்கு சென்றார்கள் (ரூத் 1:1-6). மோவாபிலே எலிமெலேக்கும் அவன் இரண்டு குமாரரும் மரித்தார்கள். நகோமி திக்கற்றவளானாள். கஷ்டத்தை அனுபவித்த பின்பு “கர்த்தர் தம்முடைய ஜனங்களை சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார்” என்பதை கேள்விப்பட்டாள் நகோமி. சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயி ருந்தாலும் தம்மைத் தேடுவோரை போஷிக்க தேவன் வல்லமையுள்ளவ ராயிருக்கிறார்.
2. உலக ஆசீர்வாதங்களுக்காக இரட்சகரை விற்றுப்போட்ட குடும்பங்கள்
இவர்கள் உலக ஆசீர்வாதங்களுக்காக இரட்சகரை பின்தள்ளுகிறவர்கள், உலக மேன்மை, பதவி உயர்வு, அரசாங்க சலுகைகளுக்காக இரட்சகரை விற்றுப்போட்ட குடும்பங்கள் ஏராளம். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடும்போது இவ்வுலக ஆசீர்வாதங்களெல்லாம் கூட கொடுக்கப்படுகிறது (மத்.6:33). கொர்நேலியு மிகப்பெரிய பதவியிலிருந்தாலும் தன் தேவனாகிய கர்த்தரை மறவாமல் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனாயிருந்தான் (அப்.10:2). கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய தன்னை விற்றுப்போட்ட ஆகாப் ராஜா குடும்பத்தின் மேலே பொல்லாப்பை வரப் பண்ணினான் (1இராஜா.21:20,21).
3. உணர்வற்ற குடும்பங்கள்
எத்தனையோ சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டாலும் தவறுகளை உணர்ந்து ஒப்புக்கொள்ள முடியாதபடி மறைப்பது வாழ்க்கையை இருளடையச் செய்கிறது. இவர்கள் தங்களை உணர்ந்து பொல்லாத வழிகளை விட்டு மனந்திரும்ப வேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கிறார். நீதிமானாகிய லோத்து தன் இருதயத்தில் வாதிக்கப்பட்டான். ஆனால் உலக வழிகளை விட்டு வேறுபிரியக் கூடிய உணர்வு அவனிடம் இல்லை. லோத்து உணர்வடைந்தாலும் உலக மேன்மை என்ற காற்று வீசியவுடன் அவனது உணர்வுகள் தணிந்துவிட்டது. லோத்து கைதியாக பிடிக்கப்பட்ட பின்பும் மீண்டும் சோதோமையே தெரிந்துகொண்டான். (2பேதுரு 2:6-8; ஆதி.19:17-20).
அதுபோல நாமும் இருதயத்தில் வாதிக்கப்பட்டாலும் உலக மேன்மை, நாகரீகம், பொருளாசையை பெரிதும் விரும்புகிறோம். பரலோகவாசிகளான நமக்கு உலக ஆசை, ஜீவனத்தின் பெருமை, ஆகாரத்திரட்சி, ராங்கோபாங்கமான வாழ்வு தேவை இல்லை. லோத்து தேவனுடைய வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்து அவர் போகச்சொன்ன இடத்திற்கு போகவில்லை. தான் தெரிந்துகொண்ட இடத்திற்கே போனான். லோத்து சமபூமியின் வாழ்வை பெரிதும் விரும்பினான். மலையில் ஏறிப்போக அவனுக்கு மனதில்லை. தேவனுக்காக துணிந்து போகிறவர்களையே தேவன் எதிர்பார்க்கிறார். அவரோடேகூட பாடுபட்டால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம். மோசே தேவன் கட்டளையிட்டபடியே செய்ததால் தேவ மகிமை இறங்கி வந்தது. தேவ சித்தம் வேறு, கேட்டு வாங்கும் உத்தரவு வேறு. பிலேயாம் தேவ சித்தத்திற்கு விரோதமாக செயல்பட்டபடியால் தூதன் வழியிலே உருவின பட்டயத்தோடு நின்றான். நாமும் தேவ சித்தத்திற்கு விரோதமாக செயல்படாமல் உணர்வுள்ளவர்களாயிருப்போமாக.
4. தேவ பிள்ளைகளை பகைக்கிற குடும்பங்கள்
தேவ பிள்ளைகளுடன் ஐக்கியம் இல்லாதவர்கள் இரட்சகரைப் பகைக்கிறார்கள். நல்ல ஆலோசனை கூறும் பரிசுத்தவான்களை பகைக்க கூடாது. ஆகாபும், அவன் மனைவியாகிய யேசபேலும் தீர்க்கதரிசியாகிய எலியாவின் வார்த்தைகளைக் கேளாதபடி அவனைப் பகைத்து கொலை செய்ய வகை தேடினார்கள். அதனால் தங்கள்மேல் சாபத்தைக் குவித்துக் கொண்டார்கள். முழு இஸ்ரவேலுக்கும் கலக்கத்தைக் கொண்டுவந்தார்கள் (1இராஜா.18:18). தேவனுடைய வார்த்தைகளைக் கொண்டுவரும் உண்மையான ஊழியக்காரரை பகைப்பது தேவனை பகைப்பதற்கு சமமாகும். அப்போஸ்தலனாகிய பவுலுக்காக தங்கள் பிராணனையே கொடுக்கத் துணிந்த ஆக்கில்லா, பிரிஸ்கில்லா போன்றவர்களையே தேவன் இன்று எதிர்பார்க்கிறார்.
5. ஆகாத சம்பாத்தியத்தினால் தங்களுக்கு சாபத்தைக் குவித்துக்கொள்ளும் குடும்பங்கள்
ஆகான் துதிக்கிற யூதா குடும்பத்திலுள்ளவன். ஆனால் அவன் உள்ளத்தில் இருந்ததோ பொருளாசை. தேவன் விலக்கியவைகளை தன் கூடாரத்தில் மறைத்து வைத்தான். அதனால் தன் குடும்பத்தான் மேலேயே சாபத்தைக் குவித்துக்கொண்டான் (யோசுவா 7:21-25). வீடுகளில் தேவனுக்குப் பிரியமற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டு ஆலயத்தில் வந்து தேவனுக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கும் கிறிஸ்தவக் குடும்பங்கள் ஏராளம். நம்முடைய குடும்பத்தில் காணப்படும் சாபங்கள் அகற்றப்பட வேண்டும். எவ்வளவு சம்பாதிக்கிறாய் என்பது முக்கியமல்ல, எப்படி ஜீவிக்கிறாய் என்பதே முக்கியம். எவ்வளவு கொடுக்கிறாய் என்பதல்ல. எவ்வளவு உன்னை தேவனுக்குக் கொடுத்திருக்கிறாய் என்பதே முக்கியம்.
6. தேவனுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் வஞ்சித்து வைக்கும் குடும்பங்கள்
அனனியா தன் மனைவி அறிய தேவனுக்குக் கொடுக்க வேண்டியவற்றில் ஒரு பகுதியை வஞ்சித்து வைத்துவிட்டு மறுபகுதியை அப்போஸ்தலரின் பாதத்தில் வைத்தான். அதனால் குடும்பமாக தேவ கோபாக்கினைக்கு ஆளானார்கள். நாம் தேவனுக்குக் கொடுக்க வேண்டிய காணிக்கைகளை மட்டுமல்ல, நம்முடைய தாலந்துகளை, திறமைகளை, நேரங்களை தேவனுக்குக் கொடுக்க வேண்டும். கேடான காரியங்கள் குடும்பத்திற்குள் வராதபடி கணவனும், மனைவியுமாக போராடி தீமையை அகற்ற வேண்டும்.
7. பிரதிஷ்டை ஜீவியமுள்ள குடும்பங்கள்
“நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்” (யோசுவா 24:15) என்று தீர்மானித்த யோசுவாவின் குடும்பத்தைப் போல பிரதிஷ்டை உள்ள குடும்பங்களே தேவனால் பயன்படுத்தப்பட முடியும், ரேகாபியரின் புத்திரரை எரேமியா ஆலயத்திற்குள் அழைத்துக்கொண்டு வந்து குடிக்கச் சொன்னபோது, அவர்கள் எங்கள் தகப்பனாரின் கட்டளைப்படி குடிக்கக்கூடாது என்றார்கள். தேவன் அவர்கள் குடும்பத்தை ஆசீர்வதித்தார். குடும்பத்தில் நல்ல தீர்மானங்களை எடுப்பதும் அதை நிறைவேற்றுவதும் நல்லது. நம்முடைய பிரதிஷ்டைகளை காத்துக்கொள்ள தேவ கிருபைக்காகக் காத்திருப்பது அவசியம்.
பிரியமானவர்களே, இன்றும் நாம் எப்படி ஜீவிக்கிறோம்? நம்முடைய குடும்ப வாழ்க்கை எப்படிப்பட்டது? என்று ஆராய்ந்து பார்த்து, கர்த்தரையே சேவிப்போம் என்ற நல்ல தீர்மானத்தை எடுத்துக்கொள்வோமாக! குடும்பத்தார் அனைவரோடும் தேவனுக்கு பயந்து அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வோமாக!