கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவனுடைய சபையில் நாட்டப்பட்ட தேவனுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் தேவனை பிரியப்படுத்தியே வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அவர்கள் முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையுமே நாட வேண்டும். தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றி வாழ்வதே அவர்கள் வாழ்க்கையின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் அவருக்காகவும், அவருடைய மகிமைக்காகவும், அவருடைய புகழ்ச்சிக்காகவும் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். நாம் நம்முடையவர்கள் அல்ல, எனவே நம்முடைய பிரதான வேலை தேவனுடைய இராஜ்ஜியத்தை நாமும் நம்முடைய குடும்பமும் கட்ட வேண்டும். உலக வேலையில் சிக்கிக்கொள்ளக் கூடாது. என்னுடைய வேலை பரலோக இராஜாவின் வேலை என்பதையே எப்பொழுதும் சிந்திக்க வேண்டும். நெகே.6:3ஆம் வசனத்தில், “…நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக் கூடாது; நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கெட்டுப்போவானேன் என்று சொல்லச்சொன்னேன்.”
உன்னுடைய வேலை பெரிய வேலை, உலக வேலைகளில் வைபவம் போன்றவற்றைக் கலந்து பாரமடையக் கூடாது. நெகேமியா பானபாத்திரக்காரன், அவன் இராஜா ராணியால் மதிக்கப்பட்டான். பெரிய பதவியில் இருந்தான். நெகே.1:3,4ஆம் வசனங்களில், “சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது…” என்று கேள்விப்பட்டபோது அவன் உட்கார்ந்து அழுது சில நாளாய்த் துக்கித்து உபவாசித்து மன்றாடினான். அலங்கம் கட்டி முடியும்வரை அதுவே பெரிய வேலை என்று அதிலே மிகுந்த கவனம் செலுத்தினான். நம் ஜீவியம், சபை, குடும்பம் கட்டப்பட வேண்டும். அதுவே நமக்குப் பெரிய வேலை. ஐ உயn nடிவ உடிஅந னடிறn, நாம் தேவனுடைய வேலையிலிருந்து இறங்கி வரக்கூடாது என்றான்.
நாம் உத்தரவாதம், பொறுப்புள்ளவர்களாய் தேவனுடைய வீட்டில் காணப்பட வேண்டும். உலக வேலை பெரிதல்ல. எபே.2:20-22ஆம் வசனங்களில், “அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக் கட்டப்பட்டுவருகிறீர்கள்”
லூக்.6:46-49ஆம் வசனங்களில், “ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின் மேல் அஸ்திபாரம் போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெரு வெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக் கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது” நம் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை தேவனுக்குள், ஆழமாய் கட்டப்பட வேண்டும். மேலும் அவர்மேல் மாளிகையாக கட்டப்பட வேண்டும். அதுவே பெரிய வேலை. தேவனுடைய மாளிகையாக கட்டப்படுவதே பெரிய வேலை. தேவனில் ஸ்திரப்பட்டவர்களாய், அசைக்கப்படாத வாழ்க்கை வாழ்வதே பிரதான வேலை. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
1) ஜெபம் தான் பெரிய வேலை:
1தெச.5:17ல் இடைவிடாமல் ஜெபம் செய்ய வேண்டும். ஜெபத்தில் விழிப்புடன் காணப்பட்டால் தான் நம் வீடு கட்டப்படும்.
2) வேதத்தை தியானிப்பது பெரிய வேலை:
சங்.1:3 வேதத்தின்மேல் பிரியமாயிருந்து இரவும்பகலும் அதை தியானிக்க வேண்டும். அவர்கள் செய்வது வாய்க்கும். வேதத்தின்படி நடக்கும் உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். காலையில் மன்னாவை சேகரிக்க வேண்டும். வேதத்தை தியானிக்க வேண்டும். அப்பொழுது கனி உள்ள வாழ்க்கை வாழ முடியும்.
3) சுவிசேஷத்தை பிரசங்கிப்பது பெரிய வேலை:
2தீமோ.4:2; 1பேது.2:9ல் “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு” மேலும் பேதுரு நிருபத்தில் “…உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொண்டார்”
4) சபை கூடிவருதல் பெரிய வேலை:
எபி.10:25, “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்;”
லூக்.14:18,19 வசனங்களில், “அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள்” தேவனுடைய சபைக்கு வர, தேவனுடைய வேலைக்கு நாம் சாக்குபோக்கு சொல்லக்கூடாது.
5) நற்கிரியை செய்வது பெரிய வேலை:
தீத்து 3:8 வசனத்தில் “இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்”
எபி.13:16ஆம் வசனத்தில், “அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்”
அன்பு நண்பரே! நாம் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் கட்டுவதே பெரிய வேலை என்று பார்த்தோம். ஜெபம் செய்ய வேண்டும். வேதத்தில் பிரியமாய் இருந்து அதையே தியானிக்க வேண்டும். சுவிசேஷத்தை பிரசங்கிக்க வேண்டும். சபை கூடிவருதலை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுவிடக் கூடாது. அது பிரதானமான வேலை. நற்கிரியை செய்ய வேண்டும். தானதருமம் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட வேலைகளைச் செய்ய ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். மேலும் 2தீமோ.6:10ஆம் வசனத்தில், “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேர்” அதை இச்சித்தால் விசுவாசத்தை விட்டே நம்மை வழிவிலகப் பண்ணும். எனவே நாம் பண ஆசைக்கு இடம்கொடுத்து தேவனுடைய வேலையை விட்டு விலகக் கூடாது. அல்லேலூயா!




