கிருபை பெற்ற தரித்திரன்

Written by Pr Thomas Walker

March 3, 2015

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!

தேவன் சிருஷ்டித்த எல்லா சிருஷ்டிப்புகளிலும் மனிதனை விசேஷமுள்ளவனாக்கினார். மனிதனையே அதிகமாய் நேசித்து, அவனுக்கு தன்னுடைய சாயலையும், தன்னுடைய ரூபத்தையும் கொடுத்தார். மனிதனின் ஆத்தும மீட்புக்காக தன்னுடைய ஜீவனையே கொடுத்தார். மனிதனை குறித்து தேவனுடைய நோக்கம் என்ன? நாம் கர்த்தருக்காக உண்டாக்கப்பட்டவர்கள், வாழ்க்கை என்பது தேவனின் நோக்கத்தை உங்கள் வாழ்க்கையில் செயல்படுத்துவதாகும். பெரும்பாலானவர்கள் தேவனை தங்கள் சுயநலத்திற்காகவே பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். தனக்குள் காணப்படும் ஆத்துமாவைப் பற்றியும், அது நித்திய ஜீவனைப் பெற்று கர்த்தருடைய இராஜ்யத்தில் காணப்பட வேண்டும் என்பதையும் உணரவில்லை. “பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் (3யோவான் 2) என்கிறார் யோவான்.

தேவன் மனிதனை தரித்திரனாய் இவ்வுலக வாழ்க்கையிலும், ஆன்மீக வாழ்க்கையிலும் வாழ விரும்பவில்லை. இவ்வுலகில் சுகமாயிருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். மனிதன் மகிழ்ச்சியாக வாழ்வதையே தேவன் விரும்புகிறார். “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே (2கொரி.8:9). நாம் ஐசுவரியவான்களாக மாறும்படியாக அவர் தரித்திரரானார்.

அநேகர் தேவனிடத்தில் ஐசுவரியவான்களாக மாற விரும்பாமல், உலகப் பிரகாரமான வாழ்வில் ஐசுவரியவான்களாக மாற விரும்புகிறார்கள். ஆனால் பவுல் அப்போஸ்தலன் மக்கெதோனியா நாட்டுத் திருச்சபை மக்களுக்கு தேவன் அளித்த கிருபையை நமக்கு அறிவிக்கிறார். “அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள். மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன் நாம் தேவனுக்கு கொடுக்கும்போது பரலோகத்தில் பலன் பெருகும். இவ்வுலகத்தில் பொக்கிஷத்தைச் சேர்த்தால் அது பரலோகத்தில் பெரிய ஐசுவரியத்தை நமக்குத் தராது.

1சாமு.2:7ல்கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்

நீதி.30:8,9ஆம் வசனங்களில், “மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக. நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்.”

நீதி.22:2ஆம் வசனத்தில், “ஐசுவரியவானும் தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர்

ஒரு மனிதன் ஏன் உலகப்பிரகாரமான தரித்திரத்தை அடைகிறான்?

தரித்திரத்துக்கு காரணங்கள் என்ன? என்று பார்ப்போம்:

1. தூக்கம்: நீதி.20:13ஆம் வசனத்தில், “தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு, அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய் அதிகம் தூங்கினால் தரித்திரனாக மாறுவோம். கண் விழிப்புடன் சுறுசுறுப்பாக உழைத்தால் ஐசுவரியமடையலாம். மேலும் நீதி.24:33,34ஆம் வசனங்களில், “இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப் போலும் உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும் மேலும் நீதி.6:9-11ஆம் வசனங்களில், “சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்? ….உன் தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும்

2. புத்திமதியைத் தள்ளுகிறவன்: நீதி.13:18ஆம் வசனத்தில், “புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான் என்கிறார்.

3. பதறுகிற நினைவுள்ளவன்: நீதி.21:5ஆம் வசனத்தில், “ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும் என்கிறார்.

4. குடியன்: நீதி.23:21ஆம் வசனத்தில், “குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்

5. போஜனப்பிரியன் தரித்திரராவார்கள் நீதி.23:21 என்று கூறப்பட்டுள்ளது.

6. சிற்றின்பப் பிரியன்: நீதி.21:17ஆம் வசனத்தில், “சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை நான் தரித்திரராக மாறுவதற்கான காரணங்களைப் பார்த்தோம். ஆனால் வேதத்தில் உலகப் பிரகாரமான தரித்திரராக இருந்தாலும், புத்தியுள்ள தரித்திரனாகவும், கிருபை பெற்ற தரித்திரராகவும், விசுவாசமுள்ள தரித்திரராகவும் வாழ முடியும் என்று பார்க்கிறோம்.

1. புத்தியுள்ள தரித்திரன்: நீதி.28:11ஆம் வசனத்தில், “ஐசுவரியவான் தன் பார்வைக்கு ஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான் புத்தியுள்ள தரித்திரன், பரலோக வாழ்வில் நம்பிக்கையுடன் உண்மையும், பரிசுத்தமும், நீதியுடன் வாழ்வான்.

2. கிருபை பெற்ற தரித்திரன்: 2கொரி.8:1,2ஆம் வசனங்களில், “…மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குத் தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம். அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.” கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தாலும் தேவனுக்கு கொடுக்கும் கிருபையைப் பெற்ற தரித்திரன் பாக்கியவான்.

3. விசுவாசமுள்ள தரித்திரன்: லூக்கா 16:19-31 இதில் லாசரு என்ற தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான். ஐசுவரியவான் பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் தன் நன்மைகளை அனுபவித்தான். ஆனால் தேவனைத் தேடவில்லை. தேவனுக்கு பிரியமாய் உத்தமமாய் வாழவில்லை. எனவே நரகம் சென்றான்.

அன்பு நண்பரே! நாமும் மக்கெதோனியா திருச்சபையாரைப்போல உதாரத்துவமாய்க் கொடுப்போம்! பரலோகத்தில் நம் பலன் மிகுதியாகும். லாசருவைப் போல உலகத்தில் தரித்திரராக வாழ்ந்தாலும் பரலோக நம்பிக்கையுடன் ஆத்தும ஆதாயத்திலும், தேவனுக்கு உண்மையுள்ளவர்களாய் வாழ்வோம்! தேவன் நம் வாழ்வின் மூலம் மகிமைப்படுவார். மாரநாதா!

Author

You May Also Like…

Share This