கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவன் மனிதனை தமது சாயலாகவும், தமது ரூபத்தின்படியேயும் சிருஷ்டித்தார். அவர் மனிதனை நேசிக்கிறார். அவன் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார். தேவன் தமது குமாரனையே மனிதனுக்காக அனுப்பினார். தேவன் மனிதன் நித்திய நரகத்துக்குச் செல்லக் கூடாது. என்றென்றும் அவருடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறார். தேவன் மனிதன்மேல் கரிசனையுள்ளவர். 1கொரி.7:32ஆம் வசனத்தில், “நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன்” கர்த்தருக்குரியவைகளுக்காகவே கவலைப்பட வேண்டும். மேலும் 1பேதுரு 5:7ஆம் வசனத்தில், “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” என்கிறார் பேதுரு அப்போஸ்தலன். தேவன் நம்மேல் அக்கறையுள்ளவராய் விசாரிக்கிறவராய் இருக்கிறபடியால் நம்முடைய கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிட்டு நிம்மதியுடன் இருக்க வேண்டும். அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். தேவனுடைய ஆலயத்துக்குச் சென்று நம் கவலைகளையெல்லாம் அவரிடம் அன்னாள் போல் பாரத்தை ஊற்றிவிட வேண்டும். கவலைப்படுவதினால் ஒரு நன்மையும் இல்லை.
மத்.6:27ஆம் வசனத்தில், “கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?” கவலைப்பட கூடாது. சங்.39:6ஆம் வசனத்தில், “வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான், யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்” மேலும் பிர.2:21,26ஆம் வசனங்களில் “ஒருவன் புத்தி, யுக்தி, நிதானத்தோடு பிரயாசப்படுகிறான்; ஆகிலும் அப்படிப் பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவன் அதைச் சொந்தமாக விட்டுவிட வேண்டியதாகும்; இதுவும் மாயையும் பெரிய தீங்குமாய் இருக்கிறது. தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவஞ்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவன் வசமாய் வைத்துவிட்டுப் போகும்பொருட்டுச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது”
1) தேவன் சாமுவேலை விசாரித்தார்:
1சாமு.16:1 “…நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்;” 1சாமு.15:35ல் இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம், சாமுவேல் சவுலுக்காகத் துக்கித்தபோது தேவன் விசாரித்து ஈசாய் வீட்டுக்குப் போகச் சொன்னார்.
2) தேவன் தாவீதை விசாரித்தார்:
சங்.6:7ஆம் வசனத்தில், “துயரத்தினால் என் கண்கள் குழிவிழுந்துபோயிற்று, என் சத்துருக்கள் அனைவர்நிமித்தமும் மங்கிப்போயிற்று” ஆனால் 6:9ஆம் வசனத்தில் “கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.” தாவீதின் சகல துயரங்களிலும் தேவன் அவரை விசாரித்தார். அவரை சத்துருவின் கையிலிருந்து பாதுகாத்தார்.
3) தேவன் மார்த்தாளை விசாரித்தார்:
லூக்.10:41,42ஆம் வசனங்களில், “இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்” மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்தபோது, இயேசு அவளை விசாரித்தார். அவள் தேவனுடைய பாதத்தில் காத்திருக்கவேண்டும். அதிகமான உலகக் கவலைகளில் ஈடுபட்டு கவலைப்பட கூடாது என்றார்.
1நாளா.11:9ல் “தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளுடைய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்” 1நாளா.12:1ல் தாவீது கீசின் குமாரனாகிய சவுலினிமித்தம் இன்னும் மறைந்திருந்தான் என்று கூறப்பட்டுள்ளது. கர்த்தர் தாவீதோடே இருந்து எல்லா இக்கட்டுக்கும் விலக்கி விடுவித்தார்.
கவலையின் விளைவு!
முதலாவது: யோபு 1:22 “…யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை” கவலைப்படுபவன் தேவனை குறைக்கூறுவான்.
இரண்டாவது: நீதி.15:13 “மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம்” கவலைப்படுவதினால் ஆவி முறிந்துபோம்.
மூன்றாவது: மத்.13:22 “முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான்”
நான்காவது: லூக்.21:34 “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்” கவலைப்படுகிறதினால் வருகையில் எடுத்துக்கொள்ளப்பட முடியாது. உடைக்காக கவலைப்படக் கூடாது, உணவுக்காகவும், நாளைக்காகவும் கவலைப்படக் கூடாது. கர்த்தர் நம்மேல் அன்புள்ளவர். கர்த்தர் நம்மை விசாரிக்கிறவர். மத்.6:34, “ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்”
கவலைப்படாதிருக்க என்ன செய்ய வேண்டும்?
1) மத்.6:33, “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” நாம் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேட வேண்டும்.
2) 1பேதுரு 5:7, அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிட வேண்டும்.
3) யோபு 42:12,13 “கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்” யோபின் கவலைகள், வேதனைகளையெல்லாம் மாற்றிவிட்டார். யோபு தன் எல்லா சூழ்நிலையிலும் தேவனை மட்டும் சார்ந்துகொண்டார்.
4) 2நாளா.20:21,22 “பின்பு அவன்(யோசபாத்) ஜனத்தோடே ஆலோசனைபண்ணி, பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், ….கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான். அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, …ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்”
5) 1சாமு.1:10,15,18 தேவ சமூகத்தில் இருதயத்தை ஊற்றி ஜெபித்தால் கர்த்தர் நம்மை விசாரித்து குறையை நீக்குவார்.
அன்னாள் போய் தேவாலயத்தில் மனங்கசந்து மிகவும் அழுது கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினாள். கர்த்தர் ஜெபத்தைக் கேட்டு சாமுவேலைக் கொடுத்தார்.
இதை வாசிக்கும் அன்பு நண்பரே! கர்த்தர் நம்மை விசாரிக்கிறவர். ஆகையால் உங்கள் கவலைகளையும், வேதனைகளையும் விசுவாசத்தோடும் ஸ்தோத்திரத்தோடும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். யோபுவின் வாழ்க்கையின் கசப்பை மாற்றியவர், உங்களையும் ஆசீர்வதிப்பார். நீங்கள் தேவனையும் அவருடைய ராஜ்யத்தையும் தேடுங்கள். அஞ்ஞானிகளைப்போல உணவுக்காகவும், உடைக்காகவும், நாளைய தினத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள். உங்கள் பரம பிதா அவைகளையெல்லாம் கூடவே (அதிகமாய்) தருவார். அவைகள் உங்களுக்குத் தேவை என்று அவர் அறிந்திருக்கிறபடியால் அற்புதமாக அவர் சந்திப்பார். இவ்வாண்டிலும் ஒரு நன்மையும் குறைவுபடாமல் உங்களை கரம் பிடித்து நடத்துவார். ஆமென்.




