தேவசித்தம் செய்யாவிட்டால் தோல்வி வரும்

Written by Pr Thomas Walker

December 3, 2014

தம்முடைய பிள்ளைகள் தமது விருப்பத்தின்படி வாழ்ந்து தம்மை எல்லா காரியத்திலும் எல்லா இடங்களிலும் பிரியப்படுத்த வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். தாவீதை சாமுவேல் தீர்க்கதரிசி மூலமாக இஸ்ரவேலின் இராஜாவாக அபிஷேகித்தார். அவன்மேல் விசேஷமாக தேவ வல்லமை காணப்பட்டது. தாவீது தேவனை நேசித்தான். தேவனும் தாவீதை நேசித்தார். தாவீது இருக்க வேண்டிய இடம் இஸ்ரவேலின் எல்லைதான். தேவன் அவனை அவனுடைய சத்துருக்கள் கைக்கு நீங்கலாக்கி இரட்சித்தார். அவனை பாதுகாத்து வந்தார். தாவீதுக்குப் பயம் வந்துவிட்டது. தேவ சித்தத்தைக் குறித்துச் சந்தேகப்பட்டதால் பெலிஸ்தியரின் எல்லைக்குள் போனான். தேவன் விரும்பாத இடம், தேவ சித்தத்தை மீறி, தன் மனம் விரும்பியதுபோல செய்ததால் வாழ்க்கையில் தோல்விகள் நேரிட ஆரம்பித்தது. கொள்ளைக் காரனாக, பொய்காரனாக மாறினான். கொலைகாரனானான். ஈவு இரக்கமற்றவன் ஆனான். குணங்களில் மாறுதல் உண்டாயிற்று. இருக்கக்கூடாத இடத்தில் இருந்ததால் அவனது வாழ்க்கையில் பல மாறுதல்கள் உண்டாயின. 1சாமு.27:1ஆம் வசனத்தில் “நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்துபோவேன்; ….நான் அவன் கைக்கு நீங்கலாயிருக்கும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதைப் பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான்.” எனவே தேவ சித்தத்தை விட்டு விலகி பெலிஸ்தரின் தேசத்துக்குப் போனான்.

தேவனுடைய பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையில் சந்தேகத்திற்கும், பயத்திற்கும் இடம் கொடுத்தால் தேவனின் விருப்பத்தைச் செய்ய முடியாது. தோல்விகள் வாழ்க்கையில் வரும், தேவசித்தம் செய்யாமல் தன் சொந்த ஆலோசனையினால் நஷ்டமும், வேதனையும் அடைந்த வேதாகம புருஷர்கள் சிலரைப் பற்றி ஆராய்ந்து பார்ப்போம்.

முதலாவதாக, தாவீது சிக்லாக்குக்குச் சென்றதால் நெருக்கப்பட்டான்:

1சாமு.30:6, “தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்;” சிக்லாக்கில் அனைத்தையும் இழந்தான் மிகவும் நெருக்கப்பட்டான். கூட இருந்தவர்களும் அவன்மேல் கல்லெறிய எண்ணினார்கள். நண்பர்களாலும் பகைக்கப்பட்டான். தேவன் வைக்காத இடத்தில் இருந்ததால் பாதுகாப்பு இல்லை. தாவீது தேவனை நோக்கிப் பார்க்கிறான். ஆலோசனை கேட்கிறான். அவருக்குள் தன்னை திடப்படுத்திக் கொண்டான். தேவ ஆலோசனையைக் கேட்டான். தன் சொந்த ஆலோசனையின்படி நடந்த தாவீது தன்னைத் தாழ்த்தி தேவ சித்தம் செய்ய ஒப்படைத்ததால், தான் இழந்துபோன எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்.

இரண்டாவதாக, ஆபிரகாம் கானானைவிட்டு எகிப்துக்குப் போனான்:

ஆதி.12:9,10ஆம் வசனங்களில், “…ஆபிராம் புறப்பட்டு, தெற்கே பிரயாணம்பண்ணிக்கொண்டு போனான். அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான்” தேவ மனுஷனாகிய ஆபிரகாம் பஞ்சம் வந்ததால் எகிப்துக்குப் போனான். எகிப்து – தேவன் உதவிசெய்ய முடியாத இடம். தேவ சித்தமற்ற இடம். ஆபிரகாம் தேவ வழியை விட்டு விலகிப் போனான். எகிப்துக்கு போகும்போது எண்ணங்கள் மாறின. வேறு மனிதனாக மாறினான். பயம் உண்டாயிற்று. பொய் சொன்னான். வேறு மனிதனாக காட்டினான். மனைவியை காப்பாற்ற எண்ணம் இல்லை. வெகுமதிகளை வாங்கிக்கொண்டான்.

ஆபிரகாம் கேராருக்குப் போனான்: ஆதி.20:1ஆம் வசனத்தில், “ஆபிரகாம் அவ்விடம் விட்டு, தென்தேசத்திற்குப் பிரயாணம்பண்ணி, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான்” ஆபிரகாம் “கேரார்” என்ற இடத்திற்குப் போனான். மனைவியை சகோதரி என்றான். போகத்தகாத இடத்திற்குப் போனதினால் பாவம் செய்தான். தேவனிடத்தில் திரும்பும்போது விடுதலை கிடைத்தது. ஆவிக்குரிய வாழ்வைத் தெரிந்துகொண்ட நாம் எளிமையான வாழ்க்கையைத் தெரிந்துகொள்வோம். அப்பொழுது நமது எண்ணங்கள் வேண்டாத இடத்திற்குச் செல்லாது.

மூன்றாவதாக, லோத்து சோதோமில் போய் இருந்தான்:

ஆதி.13:12ஆம் வசனத்தில், “ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகான சமபூமியிலுள்ள பட்டணங்களில் வாசம்பண்ணி, சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான்” சோதோம் மக்கள் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளாய் இருந்தார்கள். லோத்து நீதிமான்தான். அப்படிப்பட்ட இடத்தை தெரிந்தெடுத்திருக்கக் கூடாது. தேவ மனிதனாகிய ஆபிரகாமின் ஐக்கியத்திலிருந்து விலகிக் கொண்டான். ஒலிமுக வாசலில் அமர்ந்து பெரிய மனிதனாக அந்த பட்டணத்தில் வாழ்ந்தான். ஆனால் அது தேவ கோபாக்கினைக்கு ஏதுவான இடமாக இருந்தது. சோதோமின் அழிவிலிருந்து தன் மனைவியை காப்பாற்ற முடியவில்லை. சொத்து, ஆஸ்தி, நிலம், வயல், தோட்டம், ஆடுமாடுகள் எதையும் காப்பாற்ற முடியவில்லை. பிள்ளைகளால் மோசமான சந்ததியைப் பெற்றெடுத்து அவமானமடைந்தான். லோத்து தேவன் விரும்பாத இடத்துக்குச் சென்றதால், பெரிய நஷ்டத்தையும் வெட்கத்தையும் அடைந்தான்.

நான்காவதாக, இஸ்ரவேலர்கள் கானானை நோக்கி, வனாந்திரத்திலே நடந்தாலும் மனதில் எகிப்துக்குத் திரும்பினார்கள்:

எண்.11:5 “நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப் பூண்டுகளையும் நினைக்கிறோம். இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள்” இது கர்த்தருக்கு மிகுந்த கோபத்தை மூட்டியது.

தேவன் கொடுத்த ஆகாரத்துக்கும், பாதுகாப்புக்கும், ஒத்தாசைக்கும் நன்றியுள்ளவர்களாயிராமல் முறுமுறுத்தார்கள். எகிப்தின் வாழ்க்கையை மேன்மையாக எண்ணினார்கள். எண்ணங்களில் எகிப்திற்குத் திரும்பினார்கள். தேவ ஆசீர்வாதங்கள், அற்புதங்கள் பலவற்றைப் பெற்றும், கண்டும், அனுபவித்தும் வழுவிப்போகிற ஜனங்களாக காணப்பட்டார்கள். தேவன் அவர்களை வனாந்திரத்திலே அழித்தார்.

ஐந்தாவதாக,

மத்.26:58, “பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப் பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான்” பேதுரு போகக்கூடாத, இருக்கக்கூடாத இடத்தில் இருந்ததால், இயேசுவையே மறுதலிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. சரீரப் பிரகாரமான இன்பத்திற்காக போர்ச்சேவகரோடு குளிர்காயப் போய் இயேசுவை மறுதலித்தான்.

இதை வாசிக்கும் நண்பரே! தேவன் நாம் அவரை எல்லாக் காரியங்களிலும், எல்லாவற்றிலும் பிரியப்படுத்தி வாழவேண்டும் என விரும்புகிறார். தாவீது வாழ்க்கையில் பயத்தாலும் சந்தேகத்தாலும் எடுத்த முடிவுதான் பெலிஸ்தியர் தேசம். ஆனால் கொலைகாரனாக, பொய்காரனாகவும், ஈவு இரக்கமற்றவனாகவும் மாறினான். மேலும் ஆபிரகாம் வாழ்க்கையில் பஞ்சம் பிழைக்க எகிப்திற்குப் போனதால் வேறு மனிதனாக மாறினான். பொய் சொன்னதால், மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை. மேலும் கேரார் எனும் இடத்திற்கு தேவ ஆலோசனை இல்லாமல் சென்றதால், பாவம் செய்தான். மனைவியை சகோதரி என்ற சொன்னான். லோத்து சோதோமில் போய் தங்கினான். அழிவிலிருந்து மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை, பிள்ளைகளால் சாபத்தின் ஜாதிகளைப் பெற்றெடுத்தான். பேதுருவும் போகக்கூடாத இடத்தில் போர் வீரர்கள் கூட்டத்தில் குளிர் காய்ந்தபடியால் பின்மாற்றம். இயேசுவையே மறுதலித்தான். இஸ்ரவேலரும் எண்ணங்களில் எகிப்துக்குத் திரும்பிச் சென்றதால் பின்மாற்றம், முறுமுறுத்தார்கள், வனாந்திரத்தில் அழிக்கப்பட்டார்கள். அன்பு நண்பரே! தேவன் உங்களை வைத்த இடத்தைவிட்டு விலகாமல், தேவ சித்தம் செய்து தேவனுக்கு மகிமையான சாட்சியாக தேவ ஆசீர்வாதத்துடன் வாழுங்கள். அல்லேலூயா!





Author

You May Also Like…

Share This