கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
திருச்சபையில் உள்ள விசுவாசிகள் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்று அறியவேண்டும். நாம் மேலானவைகளையே தேட வேண்டும். கிறிஸ்துவின்மேல் நம் கண்கள் பதிக்கப்பட வேண்டும். தேவனுடைய வல்லமையால் நிரப்பப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
கொலோ.3:1-3 வசனங்களில், “நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது” என்கிறார் பவுலடிகளார்.
நமது இலக்கு இயேசு, இயேசுவின் மகிமையை கண்ணோக்குவோமானால் இயேசு நித்தியமானவைகள், அதை நோக்கியே நாம் ஓட வேண்டும். பிதாவின் வலதுபாரிசத்தில் தேவன் இருக்கிறார். அவரை நாம் மகிமை பொருந்தியவராக காணவேண்டும்.
பவுல் அப்போஸ்தலர் எபேசியரிடம் ஏன் இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி என் ஜெபங்களில் உங்களை நினைத்து ஜெபிக்கிறேன் என்கிறார்?
அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார். பவுல் சபைக்காக இடைவிடாமல் ஜெபித்தார்.
எபே.1:16ல் இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி என் ஜெபங்களில் உங்களை நினைத்து ஜெபித்தேன் என்கிறார்.
1) அன்பு, ஞானம், மகத்துவம், பரலோகம் இவைகளைப் பற்றிய அறிவு நமக்கு வேண்டும். தேவனை அறிய ஞானம் தேவை:
யாக்.3:15ல் உலக ஞானம், தேவ ஞானம். இதில் தேவ ஞானமே நமக்குத் தேவை. தேவனைத் தேடத் தேட, ஜெபிக்க ஜெபிக்க, காத்திருக்கக் காத்திருக்க ஞானம் உண்டாகிறது. தேவனை தேவ ஞானத்தால் மட்டுமே, அவரது வெளிப்படுத்தலினால் மட்டுமே அறிய முடியும்.
2) தெளிந்த ஆவி வேண்டும் என்று ஜெபித்தார்:
வேதத்தை வாசிக்க வாசிக்கவே தெளிவு உண்டாகிறது. அமர்ந்த தண்ணீரண்டை கொண்டுபோய் விடுகிறார்.
(சங்.23:2) “அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்”
3) பிரகாசமான மனக்கண்களுக்காக ஜெபித்தார்:
பிரகாசமான மனக்கண்கள் மூலம் நாம் பரலோக மகிமையைக் காண முடியும். அழைப்பின் மேன்மையை உணரமுடியும். பரிசுத்தவான்களிடத்தில் நமக்கு உண்டாயிருக்கிற மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று அறிய முடியும். தேவன் ஒளியாக இருக்கிறார் – பரிசுத்தர் – தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறார். கண்டிக்கிறவராக ஜீவத்தண்ணீராக இருக்கிறார். தாகம் தீர்க்கிறார்.
நமது சுதந்திரம் பரிசுத்தவான்களுடன் இருக்கிறது.
4) இயேசுவின் உயிர்த்தெழுந்த வல்லமை தேவ பிள்ளைகளிடம் காணப்பட வேண்டும்:
பரிசுத்தவான்களின் நடுவில் தேவனின் உயிர்த்தெழுந்த வல்லமை செயல்பட ஜெபித்தார். தேவன் நமக்கு கொடுத்த அதிகாரம் வல்லமையுள்ளது. அதை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்று ஜெபித்தார்.




