தேவனிடத்திலிருந்து திட்டவட்டமான கட்டளையைப் பெறாமல் வெறும் வேத அறிவை வைத்துக்கொண்டு செயல்பட்டால் நாம் தோல்வியையே அடைய நேரிடும். கர்த்தரிடத்திலிருந்து திட்டவட்டமான ஒரு வாக்கு “ரேமா” பெற்று செயல்பட்டால் வெற்றியே நமக்கு கிடைக்கும். பேதுரு வாழ்க்கையில் “ஆண்டவரே! நீரேயானால் நான் இந்தத் தண்ணீரில் நடந்து வருவதற்கு உதவிசெய்யும்” என்று கேட்டு ஜெபித்தான். இயேசு அவனைப் பார்த்து “வா” என்று அழைத்தபோது அந்த வார்த்தையை விசுவாசித்து படகில் இருந்து இறங்கி கடலின்மேல் நடந்தான். அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிந்ததால் அவன் விசுவாசத்தில் ஜெயம் பெற்றான். தேவன் நம்மிடம் திட்டவட்டமாக பேசுவார் என்றால் அந்த காரியம் பெரிதாக இருந்தாலும், அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். வானத்தின் பலகணிகளை திறந்து நம் தேவைகளை சந்திப்பார்.
கர்த்தர் போதகர் பால் யாங்கி சோவிடம் ஒரு “நியூஸ் பேப்பர்” ஆரம்பிக்கச் சொன்னார். வேத வாக்கியங்கள் மூலமாகவும், கர்த்தரிடம் பெற்ற வழிநடத்துதல் மூலமாகவும் அது கர்த்தருடைய திட்டம் என்று அறிந்துகொண்டார். அந்த பத்திரிக்கை ஆரம்பிப்பதற்கு ஏறக்குறைய பத்து கோடி டாலர்கள் செலவாகக்கூடியதாக இருந்தபோதிலும் கூட மனதில் எந்தவிதமான கலக்கமும் பயமும் வரவில்லை. “தேவனே! நீர் எனக்கு ஒரு அடையாளத்தைக் காண்பியும் என்று ஜெபித்தேன்” என்கிறார். தேவன் அப்பொழுது ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார். கர்த்தர் அவருக்கு ஒரு நல்ல புதிய இடத்தை “சீயோல்” பட்டணத்தின் மிக முக்கியமான பகுதியில் தந்தார். ஆனால் முழு நிலத்தையும் ஒரே நேரத்தில் வாங்குவதற்கு அவரிடம் பணம் இல்லை. அவர் ஒரு பெரிய செல்வந்தனோடு உணவு அருந்திக்கொண்டிருந்தபோது தேவனின் திட்டத்தைக் குறித்து பேசியபோது, அவரின் முகம் பிரகாசித்தது. அவர் போதகரிடம் நீங்கள் அந்த நிலத்தை வாங்கப் போவதால் உங்களுக்கு ஒரு கோடி டாலர் கடனாகத் தருகிறேன் என்று சொன்னார். மேலும் அவர் போதகரைப் பார்த்து உங்களுக்கு பிரியமானால் என்னுடைய கம்பெனியே அந்த நிலத்தை உங்களுக்காக வாங்கி அதிலுள்ள கட்டிடங்களையெல்லாம் உங்களுக்கு கட்டிக்கொடுக்கும் என்று சொன்னார். அது மிகப்பெரிய கம்பெனி. மேலும் அவர் “கர்த்தர் என்னிடம் உங்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்று உணர்த்தினார்” என்று சொன்னார். அது போதகருக்கு மிகுந்த ஆச்சரித்தைக் கொடுத்தது.
அடுத்த நாளிலேயே அந்த முழு நிலத்திற்கும் அவர் கிரயம் கொடுத்து அவ்வளவு நிலத்தையும் போதகர் பெயருக்கு அவர் வாங்கினார். எல்லா கட்டிடங்களையும் போதகர் பெயருக்கு கட்ட ஆரம்பித்து மிகவும் துரிதமாக வேலையை முடித்தார். போதகரிடம் கையெழுத்தோ, எந்த ஒரு அத்தாட்சி பத்திரமோ அவர் வாங்கவில்லை. “தேவனுடைய மனிதராகிய உங்களை முழுவதுமாக நம்புகிறேன். உங்களுடைய வார்த்தையே எனக்கு பெரிய நம்பிக்கை” என்றார். இது எவ்வளவு மகத்தான காரியம்.
அன்பு நண்பரே! தேவன் ஒரு திறந்த வாசலையும் கொடுத்தார். எனவே அவர் கட்டளையிட்ட வேலையை செய்துமுடிக்க முடிந்தது. தேவன் ஒரு காரியத்தை நம்மிடம் செய்யச் சொன்னால், அதை நம்பி, விசுவாசித்து முன்னேறினால் தோல்வி ஒருபோதும் வராது. தேவனுடைய வழிகள் எப்பொழுதும் ஆச்சரியமானது. தேவன் உங்கள் வாழ்க்கையிலும், ஊழியத்திலும் பெரிய காரியங்களைச் செய்து மகிமைப்படுவாராக! அவர் நம்மைக் கொண்டு செய்ய நினைத்தது தடைபடாது! அல்லேலூயா!