என்னுடைய சகோதர சகோதரிகளை விட, நான் சற்று கருப்பாக இருந்தாலும், என்னைவிட சற்று நிறத்தில் குறைந்தவர்களையும் நமது மாநிலத்தில் நான் கண்டிருக்கிறேன். இச்சூழ்நிலையில், நான் அடிக்கடி வட இந்திய மாநிலங்களுக்கு, என்னுடைய அலுவலக வேலையினிமித்தம் செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தது. அச்சமயம் நான் இந்தியனா? இல்லை ஆப்பிரிக்கனா? என்ற சந்தேகம் எனக்கு வர ஆரம்பித்துவிட்டது. பின்பு சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல ஆரம்பித்தபோது, தமிழினமே, ஆப்பிரிக்க மக்களின் ஒரு பிரிவோ என்ற எண்ணம் எனக்கு உருவாகிற்று. இதற்கிடையில் என்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், தமிழர்களின் னுசூஹ-வும், ஆப்பிரிக்க மக்களின் னுசூஹ-வும் ஒன்றாக இருப்பதாக ஒரு ஆய்வு கூறுவதாகக் கூறி மேலும் திகைப்பூட்டினார்.
இந்தக் காலகட்டத்தில் நான் ஒருமுறை என்னுடைய அலுவலக விஷயமாக, ஹரியானாவிலுள்ள, ஹிஸார் என்ற இடத்திலுள்ள, எஃகு ஆலைக்குச் சென்றிருந்தேன். அவர்கள் வாகன உற்பத்திக்குத் தேவையான தகடுகளை தயாரித்து வந்தனர். அந்த இயந்திரங்களில், அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, பிரஷ்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அவைகளை இந்தியாவில் செய்வதற்காக, ஆலோசனை கொடுக்கும்படி நான் அங்கு சென்றிருந்தேன்.
நான் ஹிஸார் சென்றடைந்தபோது, மதியம் 01.00 மணி எங்களுடைய கலந்தாய்வுக் கூட்டம் மதியம் 02.00 மணியென நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இடையில் “ஒரு மணி நேரம்” இருந்தப்படியால், அந்த நேரத்தைக் கழிப்பதற்காக, நான் அருகிலிருந்த “பல்பொருள் அங்காடிக்குச்” சென்றேன். அங்கே “சில வீட்டு உபயோகப் பொருட்களை” தெரிவுசெய்து, பணம் செலுத்துமிடத்திற்கு வந்தேன். அங்கே எனக்கு முன்பாக ஒரு பெண் பணம் செலுத்திக் கொண்டிருந்தாள். அந்தக் கடைக்காரன் தவறுதலாக “என்னுடைய பொருட்களையும் அவளுடைய கணக்கிலே சேர்த்துவிட்டான். விற்பனை சீட்டை சரி பார்த்தபோது, இதைக் கண்டுபிடித்த அந்தப் பெண் மிகவும் கோபமாக “நான் வாங்காத இந்தப் பொருட்களுக்கு என்னிடம் ஏன் பணத்தைப் பெற்றாய்” என கடைக்காரனிடம் கேட்டாள். அதற்கு அந்தக் கடைக்காரன், நீங்கள் அந்த ஆளுடன் சேர்ந்து வந்தீர்கள் என நினைத்தேன் என்று கூறி என்னைச் சுட்டிக் காட்டினான். உடனே அவள் ஆவேசமாகக் கத்தத் தொடங்கிவிட்டாள்.”என்னுடைய நிறத்தைப் பார், அவனுடைய நிறத்தைப் பார், இதைப் பார்த்தால், இருவரும் ஒன்றாய் வந்தோம் என்று எப்படி உன்னால் நினைக்க முடிந்தது” என்றுக் கத்தினாள். அவள் கூறிய வார்த்தைகள், ஒருபுறம் எனக்கு ஆச்சரியமாகவும், மறுபுறம் வருத்தமாகவும் இருந்தது. ஏதோ “மாநிறத்திலுள்ள” வட இந்தியர்களுக்கே, நம்மை மதிக்க முடியவில்லை. நமது நிறத்தை, தரக்குறைவாக நினைக்கிறார்கள். ஆனால் “சிவந்தமேனி” கொண்ட ஐரோப்பிய மிஷனரிகளோ, முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே நம்மைத்தேடி இந்த தமிழகம் வந்திருக்கிறார்கள். ஏன், இயேசுவின் நேரடி சீஷனாகிய தோமா அவர்களே, நம்மைத் தேடி, ஈராயிரம் ஆண்டுகள் முன்பாக வந்திருக்கிறார்.
இதையெல்லாம் பார்க்கும்போது… ஒன்று புலனாகிறது “இந்தியர் நம்மை வெறுத்தாலும், இயேசுவோ, அவரது போதனையால் ஈர்க்கப் பட்டவர்களோ, நம்மை ஒருநாளும் வெறுக்கவில்லை” என்பதே.
இன்றைக்கு… இந்தியாவிற்கே, சுவிசேஷ ஒளியை ஏற்றும், மேன்மையான பணியில், தமிழகம் முன்னணியில் இருக்கிறதென்றால்… தேவன் நம்மேல் வைத்த கிருபை எவ்வளவு பெரியதென்று எண்ணிப் பார்க்க வேண்டும். மேலும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட அநேகரைத் தேடி, ஓடிச் செல்ல வேண்டும். ஆண்டவரின் அன்பை, அவர்களுக்கும் வெளிப்படுத்த வேண்டும். அப்பொழுது, நமது ஆண்டவர், நமக்குத் தம்மை வெளிப்படுத்த சித்தம் கொண்டதற்காக சந்தோஷப்படுவார். பரலோகமே மகிழ்ந்திடும்.
“நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ…” மத்.18:33