சுவிசேஷகனுடைய பாதங்களே அழகானவை

கடந்த வாரத்தில், நான் மும்பையிலிருந்து, சென்னைக்கு விமானத்தில் வந்தபோது… எனக்கருகே ஒரு இளைஞன் பயணித்தான்.வயது 40 இருக்கும். வாழ்நாளிலே, முதல் முறையாக விமானத்தில் பயணிக்கிறான். பார்த்ததையெல்லாம் படம் பிடித்துக்கொண்டிருந்தான். அவனுடைய ஆர்வத்தைப் பார்த்து, சன்னல் அருகே இருந்த எனது இருக்கையை அவனுக்கு விட்டுக்கொடுத்தேன்.


விமானத்தில் உணவு கொடுத்தார்கள். அவன் விரும்பி உண்ணுவதைக் கண்டு, என்னுடைய உணவையும் அவனுக்குக் கொடுத்தேன். பின்பு விமானப் பணிப் பெண்கள், உணவு கழிவுகளை சேகரித்தனர். அதைக் கண்ட அவன், கண் கலங்கினான். அவன் என்னிடம்…
சார், நான் மும்பையில் “தானே” பகுதியில் தெருக்களை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளியாகப் பணியாற்றுகிறேன். என்னுடைய பாட்டி, விழுப்புரத்தில் மரித்துப்போகவே, நான் விமானத்தில் முதன்முறையாக செல்கிறேன். நான் மற்றவர்களுக்கு, தெருவில் செய்யும் பணிகளை, இன்று, எனக்கு, இந்த அழகிய பெண்கள் செய்கிறார்களே எனக் கூறி மிகவும் வருத்தப்பட்டான்.
நான் அவனிடம், மரணத்திற்குப் பின்பாக உள்ள நித்திய வாழ்வு பற்றி தெரியுமா? எனவும், அந்தப் பெரு வாழ்விற்கு எப்படி ஆயத்தம் செய்வது எனவும் தெரியுமா? எனக் கேட்டேன்.


அவனோ, சார் எனக்குத் தெரியாது, தயவுசெய்து கூறுங்கள் எனக் கேட்டான்.
நான் அவனுக்கு, இயேசுவின் அன்பினை விவரித்துக் கூறியபோது, அவன் ஆர்வமுடன் கேட்டான். மேலும் அவன் இயேசுவை ஏற்றுக்கொள்ள விரும்புவதாகவும் கூறினான்.


பின்பு விமான நிலையத்தைக் கடந்து செல்லும்போது, இயேசுவைப் பற்றி அவனுக்கு விளக்கி கூறியதற்காக எனக்கு அவன் நன்றி தெரிவித்து, கடந்து சென்றான். நானும் அவனிடம், தம்பி ஏழுமலை, ஒருவேளை உன்னை நான், இந்த பூமியிலே சந்திக்காவிட்டாலும், பரலோகில், நிச்சயம் சந்திப்போம் எனக் கூறி விடை பெற்றேன்.
        சுவிசேஷம் எவ்வளவு மேன்மையானது
        கூறுவோரையும், கேட்போரையும் மகிழ்விக்க வல்லமையுள்ளது.


“அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே” (ரோமர் 10:15)



Author

You May Also Like…

Share This