கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் நம்மைத் தமது நித்திய மகிமைக்காக அழைத்திருக்கிறார். விசுவாசியே! நீ நித்தியத்துக்கென்று சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறாய்! நித்திய ஆக்கினையை அடைந்து நரகத்திற்கு தள்ளப்படுவதற்காக அல்ல. நீ சிங்காசனத்துக்குரியவன். தேவ தீர்மானத்தின்படி இந்த உலகத்தில் கொஞ்ச காலம் பாடுபட்டு நீ சீர்ப்பட்டு, ஸ்திரப்பட்டு, பலப்பட்டு நிலைநிறுத்தப்பட வேண்டும். 1பேதுரு 5:10 வசனத்தில், “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக” என்று வாசிக்கிறோம். மேலும் எபே.2:20 வசனத்தில் “அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்” ஸ்திரப்பட்டவர்கள் யார்? சபை எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்? விசுவாசி எப்படி ஸ்திரப்பட வேண்டும்? விசுவாசிகள் அஸ்திபாரத்தின்மேல் ஸ்திரமாக கட்டப்பட வேண்டும்.
அஸ்திபாரம் எதற்கு என்றால் நாம் அதன்மேல் ஸ்திரமாக இருக்க நாம் அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டிருக்க வேண்டும். மூலைக்கல் இயேசுவே.
முதலாவதாக,
1பேதுரு 2:6 வசனத்தில் “இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லை சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.” இயேசுவின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று பார்க்கிறோம். இயேசுவின்மேல் நம்பிக்கையாயிருப்பவன் ஸ்திரமாயிருப்பான். அவன் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை. அவனுக்கு திட நம்பிக்கை உண்டு. தேவன் அவனை ஒருபோதும் கைவிடுவதில்லை. அவன் வெட்கப்பட மாட்டான். அவன் சந்ததி கைவிடப் படுவதில்லை. எனவே பிரியமானவர்களே! முதலாவது தேவன்மேல் உள்ள விசுவாசத்தில் ஸ்திரப்பட வேண்டும்.
இரண்டாவதாக,
விசுவாசி தேவனை வலது பக்கத்தில் வைக்க வேண்டும். சங்.16:8 வசனத்தில் “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை” என்று வாசிக்கிறோம். விசுவாசி ஆண்டவருக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். கர்த்தரை முன் வைத்து முதலிடம் கொடுத்து வாழ்பவர்கள் ஸ்திரப்படுவார்கள்.
மூன்றாவதாக
தேவன் நம் நடுவில் இருந்தால் அசைக்கப்பட மாட்டோம். சங்.46:5 வசனத்தில் “தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்” என்று பார்க்கிறோம். கர்த்தரையே மையமாக வைத்து நம் எண்ணங்கள் சிந்தைகள் செயல்பட வேண்டும். நம் சிந்தைகள் அவரையே சுற்றி சுற்றி வர வேண்டும். நாள் முழுவதும் அவரையே நினைத்து, அவரையே துதிக்க வேண்டும். எக்காலமும் அவரைத் துதிக்கும் துதி, நம் வாயில் இருக்க வேண்டும். அவர் நம் நடுவில் இருந்தால் நாம் அசைக்கப்படுவதில்லை. வாழ்க்கையின் பிரச்சனைகளை அவரிடம் கூறிவிட்டு, பேசாமல் அமைதியாக இருங்கள். நம் நடுவில் உள்ள பெரிய தேவன் பெரிய காரியம் செய்வார். விசுவாசியின் வாழ்க்கையில் தேவன் நடுவில் இருந்தால் ஸ்திரப்படுவார்கள்.
நான்காவதாக,
கிருபையைச் சார்ந்து வாழும் விசுவாசிகள் ஸ்திரப்படுவார்கள். எபி.13:9 வசனத்தில் “…கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது” போஜனபதார்த்தங்களில் முயற்சி செய்கிறவர்கள் பலனடையவில்லையே. கிருபையைச் சார்ந்து வாழ்வது தேவனையே சார்ந்து வாழும் வாழ்க்கையே. அதில் (கிருபை) எப்போதும் கிடைக்கிறது. போஜனபதார்த்தங்களில் முயற்சி செய்கிறவர்கள் பலனடையவில்லையே. தேவ கிருபை எல்லாவற்றிற்கும் போதுமானது. ஜீவனிலும் மேலானது. அது நம்மை வழிநடத்துகிறது. வழுவாமல் நம்மை காக்கிறது. எனவே தேவ கிருபையைச் சார்ந்து ஜீவிப்பவர்கள் ஸ்திரப்படுவார்கள். தேவ கிருபை மட்டுமே போதும், விசுவாசி நிர்மூலமாகாததும் நிற்பதும் தேவ கிருபையே.
ஐந்தாவதாக,
தேவ வசனத்தை கைக்கொண்டு நடப்பவனே ஸ்திரப்படுவான். மத்.7:24-27 வசனங்களில் தேவன் சொல்லிய வார்த்தையின்படி செய்கிறவன் புத்தியுள்ளவன் …அவனையே தேவன் கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பிடுகிறார். தன்னுடைய சீர்கெட்ட, பொல்லாத வாழ்க்கையை வசனத்தின்படி மாற்றிக்கொள்பவர்களே ஸ்திரப்படுவார்கள். கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவனே, கீழ்ப்படிகிறவன். அவனே வசனத்தை கைக்கொண்டு நடப்பவன் ஆவான். அப்படிப்பட்ட மனிதனே ஸ்திரப்பட்டவன் ஆவான்.
ஆறாவதாக,
2தெச.2:17ஆம் வசனத்தில் இவ்வாறு பார்க்கிறோம். நற்கிரியைகளில் பெருகுகிறவர்கள் ஸ்திரப்பட்டவர்கள் ஆவார்கள் “உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக”. தேவன் விசுவாசிகளின் இருதயங்களை எல்லா நல்ல வசனத்தினாலும், நற்கிரியைகளினாலும் ஸ்திரப்படுத்துகிறார். எனவே விசுவாசிகளும் நற்கிரியை செய்வதில் ஜாக்கிரதையாகவும், அதில் பெருகுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். பரலோகத்தின் தேவன் மகிமைப்படுவார். நற்கிரியை செய்யவே சிருஷ்டிக்கப்பட்டாய். டாக்டர் காங்காவா ஜப்பானையே நற்கிரியைகளைச் செய்தே அசைத்தார்.
ஏழாவதாக
கர்த்தர் மேல் தன் பாரத்தை வைத்துவிட்டால் அவர் தள்ளாட விடார். அவர் ஸ்திரப்படுத்துவார். ஆதரிப்பார். 2சாமு.1:10-15ல் அன்னாள் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன் என்றாள். அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை. தேவ சமூகத்தில் தங்கள் இருதயத்தின் பாரத்தை ஊற்றிவிட்டவர்கள் சந்தோஷமாக ஸ்திரமாக இருப்பார்கள்.
எட்டாவதாக
கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருப்பவர்கள் ஸ்திரப்படுவார்கள். சங்.40:2 வசனத்தில் “…என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி” என்கிறார். கர்த்தருக்கு காத்திருப்பவர்கள் பதறுவதில்லை நீ கர்த்தருக்கு காத்திருந்தால் ஸ்திரமாக இருப்பாய். ஏற்ற காலத்தில் தேவன் உன்னை உயர்த்துவார். உன்னை உயர்த்த ஆண்டவருக்கு ஒருவேளை உண்டு. அவரது பலத்த கரத்தின் கீழ் அடங்கி இரு. அவர் பாதத்தில் பொறுமையாக காத்திரு. பொறுமையுடன் அவருடைய வேளைக்காக காத்திருந்தால் தேவன் உன்னை உயர்த்துவார். நீ நீதியினால் ஸ்திரப்படுவாய். தீமை உன்னை மேற்கொள்ளாது. இதை வாசிக்கும் அன்பு நேயரே! தேவன் ஒவ்வொரு விசுவாசியையும் சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி பலப்படுத்தி மகிமையில் நிலைநிறுத்த விரும்புகிறார். நீ நித்திய இராஜ்ஜியமான பரம கானானை சுதந்தரிக்க அழைக்கப்பட்டிருக்கிறாய். தேவன் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை கற்றுக்கொள்ளும்படி கீழ்ப்படிந்து அடங்கியிரு. அப்பொழுதுதான் தேவனுடைய சுதந்தரத்தை நீ அடையும்படி உயர்த்தப்படுவாய். இஸ்ரவேலர் கானான் பிரயாணத்தின்போது மோசேயினால் வழிநடத்தப்படுகையில் தேவன் அவர்களை 40 நாட்களிலேயே கானானுக்குள் அழைத்துச்செல்ல மோசேக்கு கட்டளையிட்டிருக்க முடியும். ஆனால் தேவன் 2 வருட காலத்தில் அவர்களுக்கு “மனுஷன் அப்பத்தினால் அல்ல. தேவனையே சார்ந்து வாழக் கற்றுக்கொண்டு, சீர்பட்டு, கானானில் பிரவேசிக்க வைக்க விரும்பினார்.” அவர்களுக்கு நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுத்து பல யுத்தங்களில் அவர்களை ஆயத்தப்படுத்தி கானானை கொடுக்க விரும்பினார். ஆனால் அவர்களின் கீழ்ப்படியாமையால் 40 வருஷங்கள் கானான் பிரயாணம் நீடித்தது.
விசுவாசியே! நீ கீழ்ப்படியாமையினால் தேவனுடைய இராஜ்ஜியத்தை சுதந்தரிக்க முடியாமல் போய்விடக் கூடும். ஜாக்கிரதையாக மனம் திரும்பு!
மாரநாதா! அல்லேலூயா!




