கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவப் பிள்ளைகளே!
நமது எதிர்காலத்தைக் குறித்து கவலைப்படும்போது கண்ணீர் விடுகிறோம். வியாதியால் பாதிக்கப்படும்போதும், நமக்கன்பானவர்களை இழக்கக் கொடுக்கும்போதும் கண்ணீர்விட்டுக் கதறுகிறோம். ஆனால் அழியும் ஆத்துமாக்களுக்காக கண்ணீர் சிந்த முடிகிறதா?
இயேசு அமைதியாக தனித்து ஜெபித்த நேரமுண்டு (மத்.14:23); இதயத்தை ஊற்றி ஜெபித்த நேரமுண்டு (மத்.26:39). அதேநேரம் உரத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் ஜெபித்த வேளையுமுண்டு (எபி.5:7).
தாவீது அரசனும், என் கட்டிலைக் கண்ணீரால் நனைக்கிறேன் என்றும் (சங்.6:6) இரவும் பகலும் கண்ணீரே என் உணவாயிற்று என்றும் என் கண்ணீரை உமது துருத்தியில் வையும் என்றும் கூறுகிறார். என் ஜனமாகிய இஸ்ரவேலர் நொறுக்கப்படுவதால் என் கண்கள் கண்ணீரைச் சொரிவதாக என்று எரேமியா புலம்புகிறார் (புல.2:11). அழிந்துபோகும் ஆத்துமாக்களுக்காக கண்ணீர் சிந்தும் கண்கள் நமக்குள்ளதா?
இயேசு எருசலேம் வீதிகளில் சிலுவையைச் சுமந்து செல்லும்போது எருசலேம் குமாரத்திகள் இயேசுவைப் பார்த்து அழுதார்கள். ஆனால் இயேசுவோ உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்று கூறுகிறார். கண்ணீர் சிந்தி நம் பிள்ளைகளை தேவ பக்தியோடு வளர்க்க வேண்டும்.
நாம் எதற்காக கண்ணீர் சிந்த வேண்டும்.
மூன்று காரியங்களை பார்போம்
(1) நாம் கெம்பீரமாக அறுக்க வேண்டுமானால் கண்ணீர் சிந்த வேண்டும்
(2) பின்மாறிப் போனவர்களுக்காக கண்ணீர் சிந்த வேண்டும்
(3) சபையில் கிறிஸ்து உருவாக வேண்டும் என்பதற்காக கண்ணீர் சிந்தவேண்டும்
(1) நாம் கெம்பீரமாக அறுக்க வேண்டுமானால் கண்ணீர் சிந்த வேண்டும்
“அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்” என்று சங்.126:6ல் பார்க்கிறோம். நல்ல பலன் கிடைக்க வேண்டுமானால் விதை கண்ணீரால் நனைய வேண்டும். ஆத்துமாக்கள் மேல் வாஞ்சை, தாகம், பாரம் இருப்பது நல்லது. ஆனால் திறப்பில் நின்று கண்ணீர் சிந்தும் மனிதர்களையே தேவன் இன்று தேடுகிறார். காற்று வேகமாக வீசும்போது மேகங்கள் ஒன்றன்மீது ஒன்று மோதுவதால் மழை பெய்கிறது. தேவ அன்பாகிய காற்று வீசும்போது மேகமாகிய ஆத்துமபாரம் கண்ணீராகிய மழையைப் பொழிகிறது. தரை நனையும் அளவிற்கு விசுவாசிகள் கண்ணீருடன் ஜெபித்தபடியால் கொரியா தேசம் பெரிய எழுப்புதலைக் கண்டது. “ஸ்காட்லாந்தை எனக்குத் தாரும், இல்லாவிட்டால் சாகிறேன்” என்று ஜாண்நாக்ஸ் கதறி ஜெபித்தபடியால் ஸ்காட்லாந்து இயேசுவைக் கண்டுகொண்டது. திறப்பின் வாசலில் நின்று தேசத்தின் ஷேமத்திற்காய் கதறவிடாதபடி லௌகீ இச்சைகளும் உலகக் கவலைகளும் நம்மை அழுத்துகிறது. அவற்றை நாம் களைந்துபோட வேண்டும். நாம் கெம்பீரமாக அறுக்க வேண்டுமானால் கண்ணீர்விட்டு நம் தேசத்திற்காய் கதறுவோமாக!
(2) பின்மாறிப் போனவர்களுக்காக கண்ணீர் சிந்த வேண்டும்
“…என் ஜனமாகிய குமாரத்தி பாழாய்ப்போனதினிமித்தம் மனங்கசந்து அழுவேன்” என்று ஏசாயா பின்மாறிப்போன தன் ஜனங்களுக்காக அழுது புலம்புகிறார் (ஏசாயா 22:4). பாவமாகிய சிறையிருப்பிலிருக்கும் பிள்ளைகளுக்காக, தேவ சமூகத்தை விட்டு விலகிப்போன பிள்ளைகளுக்காக கண்ணீர் சிந்த வேண்டும். விபச்சாரரும் துரோகிகளின் கூட்டமுமாயிருந்த ஜனங்களின் மனந்திரும்புதலுக்காக எரேமியா தீர்க்கதரிசி என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும் என்றும் (எரே.9:1,2). கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப் போனதினிமித்தம் என் கண்கள் கண்ணீர் சொரியும் (எரே.13:17) என்றும் புலம்புகிறார். நம் தேவனைவிட்டுப் பின்மாறிப் போனவர்கள், அவருடைய மந்தையில் சேர்க்கப்பட எரேமியாவைப் போல கண்ணீர்விட்டு ஜெபிப்போமாக. நமது அருமை இரட்சகராம் இயேசுவும், பின்மாறி தேவனுடைய அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட எருசலேமைப் பார்த்து கண்ணீர் விட்டார் (லூக்கா 19:41).
(3) சபையில் கிறிஸ்து உருவாக வேண்டும் என்பதற்காக கண்ணீர் சிந்தவேண்டும்
பவுல் அப்போஸ்தலன் சபையைக் கண்ணீரால் வளர்த்தார் (அப்.20:19,31). இன்று சபைக்குள் உலகம் புகுந்துவிட்டது. விசுவாசமாகிய கப்பல் உலகமாகிய தண்ணீருக்குள் கவிழ்ந்துகொண்டிருக்கிறது. புறஜாதியாரிடம் காணப்படும் அருவருப்புகள், பழக்க வழக்கங்கள், தேவ பிள்ளைகளிடம் காணப்படுகிறது. இஸ்ரவேல் சபையார் செய்த அக்கிரமங்களுக்காக எஸ்றா விண்ணப்பம்பண்ணி கண்ணீர்விட்டு அழுதான் (எஸ்றா 10:1). அதனால் இஸ்ரவேலர் மனந்திரும்பினார்கள். இன்று சபைகளில் தனி ஜெபம், தியானம், குடும்ப ஜெபம், கூட்டு ஜெபம் இல்லாமல் காணப்படுகிறது. சத்துரு உட்பிரவேசிக்க இது காரணமாகிறது. கண்ணீர் விடுகிறவர்கள் இல்லாதபடியால் சத்துரு உட்புகுந்து வேலை செய்கிறான். குடும்பங்கள் பாழாகின்றன. கண்ணீர் சிந்தாமல் தேவனிடமிருந்து கிருபையைப் பெறமுடியாது. நெகேமியா பாழானவைகளைக் கட்ட தேவகிருபை பெற்று தேவலாயத்தைக் கட்டினான்.
தேசத்திற்காய் திறப்பில் நின்று ஜெபிக்கும் மனிதர்களையே தேவன் இன்று எதரிபார்க்கிறார். நம் தேசத்தில் பெரிய எழுப்புதலைக் காண கண்ணீரோடு தேவ வசனத்தை விதைப்போமாக! பின்மாறிப் போனவர்கள் தேவ மந்தையில் சேர்க்கப்பட கண்ணீரோடு போராடி ஜெபிப்போமாக! லவோதேக்கியா சபையைப் போல் அனலுமில்லாமல் குளிருமில்லாமல் இருக்கும் இன்றைய திருச்சபை மீட்படைய கண்ணீரோடு கதறுவோமாக!