ஸ்திரப்பட்டவர்கள் யார்?

Written by Pr Thomas Walker

December 22, 2011

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் நம்மை அழைத்த அழைப்பு மேன்மையானது. நாம் நம்முடைய அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் அறிந்தவர்களாய் இயேசுவை நோக்கி பொறுமையுடன் ஜாக்கிரதையாய் தொடர்ந்து ஓட வேண்டும். விசுவாசியே! நீ நித்திய ராஜ்ஜியத்தை சுதந்தரிக்க வேண்டுமென்று தேவனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறாய். கொஞ்சகாலம் இந்த உலகத்தில் பலவிதமான பாடுகளைப் பட்டு, நீ சீர்பட்டு, ஸ்திரப்பட்டு, பலப்பட்டு, நிலைநிறுத்தப்பட வேண்டும். மேலும் 1பேதுரு 5:10 வசனத்தில், “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக” என்று பேதுரு கூறுகிறார்.
சபையில் உள்ள விசுவாசிகள் எவ்வாறு ஸ்திரப்பட வேண்டும்? ஒரு ஆவிக்குரிய சபை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? என்று பார்ப்போம்.
எபே.2:20 வசனத்தில், “…பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்;” என்கிறார் பவுல். விசுவாசிகளாகிய நாம் ஸ்திரமாக இருக்க அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டிருக்க வேண்டும். மூலைக்கல் இயேசுவே. ஸ்திரப்பட்டவர்கள் யார்? எப்படியிருப்பார்கள் என்று பார்ப்போம்.

 முதலாவதுஸ்திரப்பட்டவர்கள் விசுவாசமாயிருப்பார்கள்
1பேதுரு 2:6 வசனத்தில், “…இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லை சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை…” என்று வேதத்தில் சொல்லியிருக்கிறது. இயேசுவின் மேல் நம்பிக்கை வைப்பவன் வெட்கப்படுவதில்லை.

 இரண்டாவதுஸ்திரப்பட்டவர்கள் தேவனுக்கு முதலிடம் கொடுப்பார்கள்
சங்.16:8 வசனத்தில், “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை” என்று தாவீது கூறுகிறார். தாவீது எப்பொழுதும் தேவனை தனக்கு முன்பாக வைத்திருந்தார். அவருக்கு முதலிடம் கொடுத்த வாழ்க்கை வாழ்ந்தார். ஸ்திரப்பட்டவன் ஆண்டவருக்கு முதலிடம் கொடுப்பவன் என்பதே பொருள்படும். கர்த்தரையே முன்வைத்து முதலிடம் கொடுத்து வாழ்பவர்கள்தான் ஸ்திரப்படுவார்கள்.

 மூன்றாவதுஸ்திரப்பட்டவர்கள் தேவனை தம் வாழ்வின் மையமாக வைத்திருப்பார்கள்
சங்.46:5 வசனத்தில், “தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்.” என்று தாவீது கூறுகிறார். கர்த்தரையே மையமாக வைத்து நமது எண்ணங்களும், சிந்தைகளும் செயல்பட வேண்டும். நம் சிந்தை முழுவதும் கர்த்தரையே சுற்றிச் சுற்றி வர வேண்டும். தேவன் நம் வாழ்க்கையின் நடுவில் இருந்தால் அசைக்கப்படுவதில்லை. பாரங்களை தேவனிடம் கூறிவிட்டு அமைதியாக இருக்க வேண்டும்.

 நான்காவதுஸ்திரப்பட்டவர்கள் தேவ கிருபையைச் சார்ந்து ஜீவிப்பார்கள்
எபி.13:9 வசனத்தில், “பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள். போஜன பதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே.” தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது கிருபையைச் சார்ந்து வாழும் வாழ்க்கையே. தேவனைச் சார்ந்து கொள்ளுபவர்களுக்குக் கிருபை எப்பொழுதும் கிடைக்கும். தேவ கிருபையைச் சார்ந்து கொள்ளுபவர்களே ஸ்திரப்படுவார்கள். ஜீவனைப் பார்க்கிலும் கிருபை மேலானது. கிருபை மட்டுமே போதும்.

 ஐந்தாவதுஸ்திரப்பட்டவர்கள் வசனத்தின்படி வாழ்வார்கள்
மத்.7:24-27 வசனங்களில், “…நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்” வசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, வசனத்தின்படி தன்னை மாற்றிக்கொள்பவர்கள் ஸ்திரப்படுவார்கள். கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவனே, கீழ்ப்படிகிறவனே கைக்கொண்டு நடப்பவனே ஸ்திரப்பட்டவன் ஆவான்.

 ஆறாவதுஸ்திரப்பட்டவர்கள் நற்கிரியைகளைச் செய்வார்கள்
2தெச.2:17 வசனத்தில், “உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக.” என்கிறார் பவுல். நற்கிரியைகளில் பெருகுகிறவர்கள் தான் ஸ்திரப்பட்டவர்கள் ஆவார்கள். எல்லா வசனங்களைக் கைக்கொள்வதிலும், நற்கிரியைகள் செய்வதிலும் பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளை ஸ்திரப்படுத்த வேண்டும். மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் காணவேண்டும். அப்பொழுது பரலோகத்தின் தேவன் நம் வாழ்வின் மூலம் மகிமைப்படுவார். நாம் நற்கிரியைகள் செய்வதற்காகவே சிருஷ்டிக்கப்பட்டுள்ளோம். அன்னை தெரசா, ஜார்ஜ் முல்லர் போன்றவர்கள் நற்கிரியைகளினாலே தேசத்தையே அசையச் செய்தார்கள்.

 ஏழாவதாகஸ்திரப்பட்டவர்கள் தேவனுடைய சமூகத்தில் தங்கள் இருதயத்தை ஊற்றிவிடுவார்கள்
சங்.55:22 வசனத்தில், “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்” 1சாமு.1:10-15 அன்னாள் கர்த்தருடைய சந்நிதியில் தன் இருதயத்தை ஊற்றிவிட்டாள். அப்புறம் அவள் துக்க முகமாயிருக்கவில்லை. பாரத்தை ஊற்றிவிட்டவர்கள் சந்தோஷமாக ஸ்திரமாக இருப்பார்கள். தேவன் வேண்டுதலைக் கேட்டு மகிழ்ச்சியாக்கினார்.


அன்பு நேயரே! நாம் ஸ்திரப்பட்டவர்களாக இருக்க வேண்டும். கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தால் பதறுவதில்லை (சங்.40:2) ஸ்திரமாக இருப்பாய். ஏற்ற காலம் தேவன் வைத்திருக்கிறார். தேவன் கையில் அடங்கி இருங்கள், பொறுமையாக இருக்க வேண்டும். தேவன் உயர்த்துவார். கானான் பிரயாணம் 40 நாட்களில் செல்லமுடியும். தேவன் இரண்டு வருஷத்தில் கொண்டு செல்ல விரும்புவதற்கு காரணம் சில பாடங்களைக் கற்றுக்கொடுக்க விரும்பினார். கீழ்ப்படியாமையால் 40 வருஷமாக நீடித்தது. இஸ்ரவேலர் ஸ்திரப்படாததால் வழியிலே அழிக்கப்பட்டார்கள். ஸ்திரப்பட்ட விசுவாசிகளே நிலைநிறுத்தப்பட்டு மகிமையில் சேர்த்துக்கொள்ளப் படுவார்கள். கொஞ்ச காலம் பாடுபடுகிற நம்மை சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி நிலைநிறுத்துவாராக! ஆமென்.





Author

You May Also Like…

Share This